வைக்கோல் காட்டுக்குள்
எரிகல் விழுந்ததுபோல்
பர பர வென பரவியது
அந்தப் பரபரப்பு !
அலுவலகத்தில்
ஆள்குறைப்பு !
முந்நூறு பேருக்காய்
தயாராகி இருக்கிறது
ஒரு சுருக்கு !
தேர்ந்தெடுத்த
புள்ளிகள் தலையில்
விழப்போகிறது
விரைவில் கொள்ளி.
பலிபீடம் தயார்.
மீதமிருப்பதெல்லாம்
கத்திகள் அழுத்தப்போகும்
கழுத்துக்கள் எவையெனும்
வளைந்த
கேள்விகள் மட்டுமே.
அத்தனை மனங்களிலும்
சரவெடிகளின் ஓசையும்,
தீ மிதித்த தேகமாய்
காயம் பட்ட காலமும்.
அலுவலக வாசல்களில்
ஆயிரம் வாய்களோடு
வளர்ந்து கொண்டிருக்கிறது
வினாடிக்கொரு
வதந்தி.
தராசுத் தட்டுகளில்
எதை வைத்து அளப்பார்கள் ?
ஊதியத்தையா ?
அனுபவத்தையா ?
இல்லை
தேசப்பற்றின் துகள்களையா ?
சதவிகிதங்கள் எப்படி ?
சரிவிகிதமா ?
இல்லை
சஞ்சல முகங்கள் மொத்தமாய்
சிந்திச் சிதறுமா ?
கேள்விகளின் முடிவில்
புதிது புதிதாய்
கேள்விகள் குட்டி போட்டன.
பதில்களாய் வந்தவையும்
கேள்விக் குறிகளுக்குள்
கூடு கட்டிக் கொண்டன.
மணித்துளிகளை விழுங்கி
நாட்கள் வளர,
நாட்களை உண்டு
வாரங்களும் முடிந்தன.
நிழல்யுத்தம் உள்ளுக்குள்
நிறுத்தாமல் சண்டையிட,
ஓரமாய் கிடந்து
சிரிக்கின்றன
என்
மூன்று வார அலுவல்கள்.
