யாருமே
நினைத்திருக்கவில்லை
இப்படி நடக்குமென்று.
கம்பீரமாக நின்றிருந்த
எங்களூர்ப் பாலம்
கம்பிகள் உடைய விழுந்து விட்டது.
எங்கோ பெய்த
மழையின் துளிகள் ஒன்று சேர்ந்து,
பரிவாரங்களோடு
போருக்குப் புறப்பட்டதில்
பாலம் பலியாகிவிட்டது.
அரசாங்கப் பேருந்து முதல்
ஆட்டுக்கிடாக்கள் வரை
ஆடி ஆடி ஓடிய பாலம் அது.
யார் போட்ட பாலம் அதென்றோ
எப்போது போட்டதென்றோ
இதுவரை யாருமே யோசித்ததில்லை.
சாவுக்குப் பின் பீறிட்டுக் கிளம்பும்
பாசம் போல,
உடைந்த பிறகு ஆங்காங்கே
ஒப்பாரிகள் உருவாக.,
கலெக்டருக்கு
கடுதாசி கொடுப்பதா ?
மந்திரிக்கு
மனுக்கொடுப்பதா ?
முதுகெலும்புடைந்து போன பாலத்துக்கு
யார் கட்டுப் போடுவது ?
பெட்டிக்கடை ஓரங்களெங்கும்
பட்டிமன்றங்கள்.
வந்து கொண்டிருந்த
பேருந்து
பாதி வழியோடு நின்றுபோனது.
பள்ளிக்கூடம்,
சந்தை எல்லாம்
தூரமாய் ஆகிப்போனது,
செல்லப் பிள்ளையாய்
ஊருக்கு நடுவே ஓடும்
ஆறு
முதன் முதலாய்
பூமிக்குப் பாரமாகத் துவங்கியது.
