அந்த
பருத்தி வண்ணப்
பட்டுக் கொக்கு
ஓடையில் மெல்ல ஒற்றைக் காலூன்றி,
வயிற்றுத் தவம் இருக்கிறது.
நீளமான அலகுகளை
அவ்வப்போது நீரில் அலசி,
கண்கள் இரண்டை தண்ணீரில் நீந்தவிட்டு
நல்ல மீன் நடந்து வரட்டுமென்று
நாக்கை ஈரப்படுத்திக் காத்திருக்கிறது.
வெள்ளிச் சிமிழ்களை
விளக்கி விட்டது போல,
சின்னச் சின்ன மீன்கள் மெல்ல
கொக்கின் கால்களைக்
கொத்திக் கொத்தி கடந்து போயின.
கிளிகள் அமர்ந்த
கிளைகள் மகிழ்ச்சியில்
கிள்ளி விட்ட சில வெள்ளைப்பூக்கள்
ஓடை நீரின் முதுகில் அமர்ந்து
குதிரைச் சவாரி செய்து வந்தன.
பழுத்த ஓர் மஞ்சள் மாவிலை
சிவப்பு எறும்பிற்குத் தோணியாய் மாறி
சுய துடுப்பு செலுத்தி
தாண்டிப்போனது.
வெண்கல நிறத்தில் சில
விரால் மீன்கள்
நீர்மூழ்கிக் கப்பல்களாய்
நகர்ந்து மறைந்தன.
மெல்ல மெல்ல சிறகு நனைத்து
அருவியோடு கதைபேசிக் கதைபேசி,
கால் மாற்றிக் கால் மாற்றி
வந்த வேலையை மறந்து
இன்னும்
ரசனை கொத்திக்கொண்டிருக்கிறது கொக்கு.
