அந்த அரண்மனை
வாசல்கள் தோறும் வீரர்களை நட்டு
விரிந்து பரந்துக் கிடக்கிறது.
மதில் மோதும் காற்றுக்கும்
முகத்தில் முத்திரை குத்தும் வெளிவாசல்.
பூமியில் பாதியை
முதுகுக்குப் பின் மறைக்கும் மதில் சுவர்.
பட்டறைகளில் ஓயாத வேலை,
வேலுக்கு நுனி சுருக்குவதும்,
வாளுக்கு முனை செதுக்குவதுமாய்
உலோக உராய்வுகளின் ஊசிச் சத்தங்கள்.
உயிர் கொடுக்க
உயிர் தேக்கும் படைக்கூட்டம்.
படைகளுக்குப் பின் பாதுகாக்கப்படும் அரசவை,
சாரளங்களுக்குப் பின்னால்
மிதக்கமட்டுமே பழக்கப்பட்ட
அந்தப்புரத் தாமரைகள்.
வரைபடங்களால் வரையப்படும் வீரம்,
படையெடுப்பு மட்டுமே பழகிப்போன
பரம்பரை.
போர்க்களங்களுக்கு
குருதி இறைத்து இறைத்து
வளர்க்கப்பட்ட சாம்ராஜ்யம்.
அந்த அரண்மனையின்
மூலைகளுக்குள்ளும் உளவு வீரர்களின் வாசனை.
கேளிக்கைகளில் காலம் விரட்டுகிறது
அகலமான சிறையில் அடைக்கப்பட்ட
ராஜ குடும்பம்.
அதிகம்பீர ஆசனத்தில்,
மயில்தோகைக் காற்றின் அடியில்,
வரிசை கலையாத பணிப்பெண்கள் அருகில்,
வீரச் செருக்குடன் பேரரசன்.
வலம் வரப் போன வீதியில்,
வாள் வீச்சின் வேகத்தைக் கடந்து
விழி வீச்சால் மார் பிளந்த
ஏதோ ஓர் பெண்ணின் கனவில்
இதோ,
இன்னும் விலங்கிடப்பட்டுக் கிடக்கிறான்.
