பள்ளிக்கூட பிள்ளை நாட்களில்
வீட்டுக்கு மேற்கே நிற்கும்,
வேப்பமர நிழலில் படித்து.
கல்லூரி நாட்களில்
ஏதோ ஒரு பூங்காவின் எல்லையில்
வேப்பமர அடியில் படுத்து.
நடுவயது நாட்களில்
வெயில் தீயின் வேகம் இறக்க
சாலைக் கரைகளில்
வேப்ப மர நிழல் தேடி.
வியர்வையால் வருந்திய
வருடங்கள் அவை.
இப்போது
சுத்தமான காற்று வேண்டுமென்று
சாய்வு நாற்காலி எடுத்து
வேப்பமர நிழலில் இடுகிறேன்.
என் பேரனுக்கு
மின்விசிறி தான் பிடித்திருக்கிறதாம்.
மெத்தையில் படுத்து
படித்துக் கொண்டிருக்கிறான்.
எனக்கோ,
கிளையசைத்துக் கதைபேசி,
இலையசைத்து விசிறிவிடும்
வேப்பமரம் தான் தோழனாய் இருக்கிறது.
பிள்ளைகளுக்குப் பரபரப்புப் பிராயமானபின்,
என்
முதுமையின் முனகல்களை
முணுமுணுக்காமல் கேட்பது
என் கைத்தடியும் இந்த வேப்பமரமும் தானே.
