தொழில் நுட்பம் ஒவ்வோர் காலகட்டத்திலும் ஒவ்வொரு அதிசயப் பக்கத்தை விரிப்பது வழக்கம். சினிமா உருவான காலத்தில் திரையில் அசையும் காட்சிகள் பிரமிப்பாய் இருந்தன. அது மிகப்பெரிய தொழில் நுட்பப் புரட்சி. முதலில் திரையிடப்பட்ட காட்சி இது தான். “தூரத்திலிருந்து ஒரு இரயில் வண்டி ஓடி வருகிறது”. அதை திரையிட்டபோது தியேட்டரில் இருந்தவர்களெல்லாம் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். அது திரையைக் கிழித்துக் கொண்டு வந்து தங்களை இடித்து விடும் என பயந்தார்கள் ! சினிமா இன்றைக்கு பல்வேறு மாற்றங்களைக் கண்டு மிரட்டும் வகையில் அவதார் எடுத்து நிற்பது நமக்குத் தெரிந்ததே.
தொலைக்காட்சிகள் வந்தது இன்னொரு புரட்சி ! ஒரு தொலைக்காட்சியை சொந்தமாக்க வேண்டுமென்றால் சொத்து, பத்தையெல்லாம் விற்க வேண்டும் எனும் காலகட்டம் இருந்தது. இப்போது அது முன்னூறு ரூபாய்க்கு மூலைகளில் விற்கப்படுகிறது.
தொலைபேசி வந்தபோதும் அப்படியே ! அது வசீகரமாய் மாறி செல்போனாக மாறியபோதும் அப்படியே. இப்படி வரிசைப்படுத்தும் வசீகரப் பட்டியலில் சர்வ நிச்சயமாய் இந்த “தொடுதிரை”க்கும் ஒரு இடம் உண்டு. டச் ஸ்க்ரீன் ( Touch Screen ) தான் தொடு திரை என்பதை நீங்கள் அறிவீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை !
இப்போது சாதாரணமாக சீனாவின் குடிசைத் தொழிலாய் உருவாகும் ஆயிரம் ரூபாய் போன்களில் கூட இந்த தொடு திரை வந்து விட்டது. ஐபோன் போன்ற உலகை புரட்டிப் போட்ட தயாரிப்புகளின் வசீகர அம்சம் இந்த அட்டகாசமான தொடு திரை ஸ்டைல் தான். டேப்லெட்களின் படையெடுப்புக்குப் பிறகு தொடுதிரை நமது விரல்களை விட்டு விலக்க முடியாத விஷயமாகிப் போய்விட்டது. அதனால் அதான் கணினிகளும் தங்கள் இயங்கு தளங்களை தொடு திரை வசதியோடு உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
சரி.. இந்த தொடு திரை எப்படித் தான் வேலைசெய்கிறது ? எப்போதாவது அதைப் பற்றி யோசித்துப் பார்த்ததுண்டா ? கீபோர்ட்டில் விஷயம் ஈசி. ஒரு எழுத்தை அமுக்கினால் அது எந்த எழுத்து என்பதை கருவி அடையாளம் காண்பது ஈசி. தொடுதலில் எப்படி ? அங்கே எந்த பட்டனும் கிடையாது. வெறும் ஒரு திரை மட்டுமே. அதில் படங்கள் மட்டுமே. படத்தைத் தொட்டால் எப்படி விஷயம் நடக்கிறது ?
இந்த தொழில் நுட்பத்துக்கு மிக மிக அடிப்படையாய் இருக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. நாம் நமது செல்போனிலோ, டேப்லெட்டிலோ அல்லது வேறு ஏதேனும் தொடுதிரைக் கருவியிலோ தொடும் போது எந்த இடத்தைத் தொடுகிறோம் எனும் அட்சர சுத்தமான தகவல் கருவிக்குத் தெரிய வேண்டும். அப்படித் தெரிந்தால் பாதி வேலை முடிந்தது. அந்த தகவலுக்குத் தக்கபடியான செயலை செய்ய வேண்டியது மீதி வேலை.
அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதில் தான் விஷயமே இருக்கிறது. மிக முக்கியமாக மூன்று பெரிய வகைகளில் இந்த நுட்பம் கையாளப்படுகிறது. ரெசிஸ்டிவ் (Resistive) , கெப்பாசிடிவ் (Capacitive) மற்றும் சர்ஃபேஸ் அகோஸ்டிக் வேவ் (Surface acoustic wave) என்பவையே அந்த மூன்று நுட்பங்கள். இதில் இணை, கிளை என பல வகைகள் உண்டு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
ரெசிஸ்டிவ் வகை ஒரு சுவிட்ச் போன்று செயல்படக் கூடியது. சுவிட்ச் எப்படி இயங்குகிறது ? ஆன் பண்ணும் போது இரண்டு கம்பிகள் இணைய, மின்சாரம் பாய்கிறது இல்லையா ? இந்த ரெசிஸ்டிவ் வகைத் தொடுதிரையின் கான்செப்ட் அது தான். இதில் ஒரு கண்ணாடித்திரை, அதன் மீது இன்னொரு திரை என இரண்டு அடுக்குத் திரை இருக்கும். இரண்டு இரண்டு திரைகளுக்கும் இடையே மின்சாரம் பாயாத ஒரு வெற்றிடமும் இருக்கும். மேலே இருக்கும் திரையின் அடிப்பாகத்திலும், கீழே இருக்கும் திரையின் மேல் பாகத்திலும் மின் கடத்திகள் இருக்கும்.
ஒரு இடத்தை நாம் தொடும் போது, மேலே உள்ள திரையும் கீழே உள்ள திரையும் தொட்டுக் கொள்கின்றன. அப்போது ஒரு இணைப்பு உருவாகிறது. மின்சாரம் அந்த புள்ளி வழியாகப் பாய்கிறது. அந்த மின்காந்த அலை மாற்றத்தைக் கொண்டு அது எந்த புள்ளி என்பது கண்டறியப்படுகிறது. அதற்குப் பிறகு ஒரு மவுஸ் கிளிக் போல, உள்ளே இருக்கும் மென்பொருள் தேவையான செயலைச் செய்து விடும். இதை கையால் தான் தொடவேண்டும் என்பதில்லை. ஸ்டைலஸ் குச்சி, பென்சில், ரப்பம் இத்யாதி என ஏதாவது ஒரு பொருள் போதும் !
இரண்டாவது வகை கெப்பாசிடிவ் சிஸ்டம். இந்த நுட்பம் கொஞ்சம் வித்தியாசமானது. இதில் அடுக்குத் திரைகள், அதை இணையச் செய்தல் போன்ற விஷயங்கள் எல்லாம் இல்லை. தொடுதிரையில் மின் சக்தி சேமிக்கப்பட்டிருக்கும். மிக மெல்லிய அளவில். அதை நாம் தொடும்போது தொடும் புள்ளியிலிருந்து கொஞ்சம் மின்சாரம் நமது உடலுக்குக் கடத்தப்படும். அப்போது தொடப்பட்ட புள்ளியில் மின்சாரம் குறைவாய் இருக்கும். அந்த மாற்றத்தைக் திரையின் நாலா பக்கத்திலும் சைலன்டாக இருக்கும் சர்க்யூட்கள் துல்லியமாகக் கவனிக்கும். அவை அந்தத் தகவலைக் கூட்டிக் கழித்து, எந்த இடத்தில் தொடுதல் நடந்தது என்பதை கண்டு பிடிக்கும் !
இந்த வகை நுட்பத்தை இயக்க விரல் நுனிகள் வேண்டும் என்பது அடிப்படை. அது ஏன் என குதக்கமாய் மூக்கை நுழைப்பவர்கள், மூக்கை வைத்தும் இயக்கலாம். அடிப்படையில் உடலின் ஒரு பாகம் இதில் தொடவேண்டும் அப்போதுதான் மின்கடத்தல் நிகழும் என்பதே விஷயம். குளிர் பிரதேசங்களில் கிளவுஸ் போட்டு அலைபவர்கள் இந்த கருவியை இயக்க, கிளவுஸைக் கழற்ற வேண்டிய அவசியம் உண்டு ! கழற்றாமல் பயன்படுத்தக் கூடிய சில ஸ்பெஷல் கிளவுஸ் களும் விற்பனையில் உள்ளன என்பது சுவாரஸ்யத் தகவல். இந்த ஸ்பெஷல் கிளவுஸின் சில விரல்கள் மின்சாரம் கடத்தும் இழைகளால் தயாரிக்கப்பட்டிருக்கும், அவ்வளவுதான் !
மூன்றாவது வகை சர்ஃபேஸ் அகோஸ்டிக் வேவ் (Surface acoustic wave) சிஸ்டம். பள்ளிக் கூடத்தில் கணக்குப் பாடத்தில் வரும் கிராஃப் பேப்பர் ஞாபகம் இருக்கிறதா ? எக்ஸ் அச்சு, ஒய் அச்சு என குறுக்கும் நெடுக்குமாக இருக்குமே ? அதே போல இந்த மூன்றாவது வகை நுட்பத்தில் மின் அலைகள் பாய்ந்து கொண்டிருக்கும். ஒரு எல்லையிலிருந்து துவங்கி மறு எல்லை வரை இவை சீரான நேர்கோடுகளில் பாய்ந்து கொண்டே இருக்கும். ஒரு முனை அனுப்பும், மறு முனை பெற்றுக் கொள்ளும்.
இதன் மேல், அந்த அலைகள் பாய்வதை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியும் இருக்கும். இப்போது நமது கை விரல் அந்த திரையின் மேல் ஏதேனும் ஒரு இடத்தில் தொட்டால், அந்த இழை அறுபடும். மறு எல்லைக்குப் போய்ச் சேராது இல்லையா ? அந்த தகவலை வைத்து எந்த இடத்தில் தொடுதல் நடந்தது எனும் விஷயம் கணக்கிடப்படும்.
இன்றைக்கு இருக்கும் மிகப் பிரபலமான முறை இது தான். காரணம் இந்த முறையில் தான் படங்களை மிகத் தெளிவாக காண்பிக்க முடியும் ! செல்லமாய் விரல் நுனியால் படங்களைப் புரட்டிப் பார்க்கும் இன்றைய நவீன தொடு திரைகளின் உள்ளே இயங்கும் நுட்பம் இது தான் !
சில தொடு திரைகளில் நீங்கள் இரண்டு விரல்களால் ஒரே நேரத்தில் தொட்டால் அது வேலை செய்யாது. அத்தகைய நுட்பத்தில் பெரும்பாலும், “முதல்” தொடுதல் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு காரியத்தில் இறங்கும். நவீன திரைகளில் “மல்டி டச்” எனப்படும் பல தொடுதல்கள் சாத்தியம். படத்தை “ஸூம்” செய்ய பெருவிரலையும், ஆள்காட்டி விரலையும் ஸ்டைலாகப் பயன்படுத்துவோருக்கு இது சட்டென புரியும் !
மிகப் பிரபலமான, பொதுவாக பயன்பாட்டில் இருக்கும் நுட்பம் இவை என்றாலும் வேறு சில சுவாரஸ்யமான நுட்பங்களும் இதில் உண்டு.
டைக்கோ இன்டர்நேஷனல் எனும் நிறுவனம் 2006ம் ஆண்டு அறிமுகம் செய்த தொழில் நுட்பம் அதில் ஒன்று ! இதில் தொடுதிரையின் ஒவ்வோர் சின்ன பகுதியும் ஒரு தனித்துவமான ஓசை எழும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். அந்த சத்தத்தை நாம் கேட்க முடியாது. ஆனால் அந்த ஒலியின் அதிர்வலையையை கணினி கண்டறியும்.
இத்தகைய தொடுதிரையில் நாம் விரல்களால் தொடும்போது தனித் தனி ஒலி அலைகள் எழும். அதைக் கணினி டீகோட் செய்து தகவல்களாக மாற்றும். அந்தத் தகவலின் அடிப்படையில் தொடு திரை செயல்படும் ! வெளிச் சத்தங்கள் இந்த செயலில் தலையிடுமோ எனும் சந்தேகம் இருந்தால் அதை விட்டு விடுங்கள் ! ஒரு கல்யாண வீட்டின் பாட்டுக் கச்சேரிக்கு முன் அமர்ந்து கூட இதை இயக்கலாம், பிரச்சினை இல்லை !
தொடுதிரைகளின் அடுத்த வளர்ச்சி என்பது திரையே இல்லாமல் தொடுவது தான் ! புருவத்தை உயர்த்துகிறீர்களா ? சொல்கிறேன் ! இது லேசர் டெக்னாலஜி படி இயங்கும். கருவியிலிருந்து லேசர் வெளிச்சம் வரும். அதை சுவரிலோ, தரையிலோ, ஏன் கையிலோ கூட அடித்து அந்த பிம்பங்களைத் தொட்டு இயக்கும் நுட்பமே இது !
லேசர் இமேஜ் கேலிபரேஷன் டெக்னாலஜி Laser Image Calibration Technology (LICT) என்று இதை அழைக்கிறார்கள். சினிமாவை திரையில் காட்டுவது போல, இந்த லேசர் ஒளியை உள்ளங்கை அளவுக்குச் சுருக்கியோ, சினிமாஸ்கோப் அளவுக்குப் பெரிதாக்கியோ எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது இதன் ஸ்பெஷல்!
இது எப்படி இயங்குகிறது தெரியுமா ? திரையில் படும் பிம்பத்திலிருந்து சுமார் 2 மிலிமீட்டருக்கு மேலே 1 மில்லிமீட்டர் அடர்த்தியில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு தளம் உருவாகும். திரையின் பிம்பத்தின் நகலாக. இந்த இடத்தில் தொடும்போது கருவியிலுள்ள சென்சார்கள் அந்த மாற்றத்தை லபக் எனப் பிடித்து தகவலாய் மாற்றி, வேலை செய்யத் துவங்கும் !
தொடு திரையின் நுட்பங்களைப் பற்றிப் பேசும்போது இ.ஏ.ஜான்சன் அவர்களை ஒரு தடவை நினைக்காமல் இருப்பது அக்மார்க் பாவச் செயல். அவர்தான் 1965ம் ஆண்டு இந்த தொடுதிரைக்கான முதல் விதையைப் போட்டார். கெபாசிட்டிவ் தொடுதிரை ஐடியாவை முதலில் வெளியிட்டதும், பிறகு 1967ல் படம் வரைந்து பாகங்களைக் குறித்ததும் அவர் தான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக டிராபிக், விற்பனை நிலையம், விளையாட்டுக் கருவிகள் என ஆரம்பித்து இன்றைக்கு ஏறக்குறைய எல்லா இடங்களிலும் தொடு திரை ராஜாங்கம் தான் !
டச் ஸ்க்ரீன் நுட்பம் ஒரு கடல், நாம கொஞ்சம் லைட்டா “டச்” பண்ணியிருக்கோம் அவ்ளோ தான் !