“நீ என்னவாக விரும்புகிறாய்” – இந்தக் கேள்வியை பல வேளைகளில் பலரும் நம்மிடம் கேட்டிருப்பார்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதோ ஒரு பதில் நம்மிடம் தயாராய் இருந்திருக்கும். “நான் டாக்டராவேன், நான் இன்சினியராவேன், நான் டீச்சராவேன்” எனும் பதில்கள் பள்ளிக்கூடத்துக்கு. அந்தப் பதில்கள் பெரும்பாலும் நமது பெற்றோரைப் பார்த்தோ, தெரிந்தவர்களைப் பார்த்தோ உருவாக்கிய பிம்பமாகவே இருக்கும். பலவேளைகளில் “டீச்சர் கேட்டா, சயிண்டிஸ்ட் ஆவேன்னு பதில் சொல்லுப்பா” என குழந்தைகளிடம் அவர்களுக்கான பதிலையும் நாமே உருவாக்கி அனுப்பி வைக்கிறோம்.
கல்லூரி காலத்தில் இலட்சியம் ஒருவேளை நல்ல ஒரு வேலை கிடைப்பதாய் இருக்கலாம். வேலைக்குச் சென்றபின்போ, நமது மேலதிகாரியின் இருக்கையை எட்டிப் பிடிப்பதே ஒரே இலட்சியமாகிப் போகிறது. இன்னும் சில சந்தர்ப்பங்களில் இப்படிப்பட்ட ஒரு கேள்வியை எதிர்கொள்ளவே முடியாமல் தடுமாறிப் போய் விடுகிறோம்.
உண்மையிலேயே நாம் என்னவாக விரும்புகிறோம் ? . எப்போதாவது ஆர அமர இதைப்பற்றி யோசித்திருப்பாமா ? “இல்லை” என்பதே நமது உள்மனம் சொல்கின்ற பதிலாய் இருக்கும். இப்படி ஒரு சிந்தனையே தேவையில்லை எனும் சூழலே நமக்குச் சின்ன வயது முதல் அமைந்தும் விடுகிறது.
“ஞானத்தின் துவக்கம் தன்னை அறிதலில் இருந்து துவங்குகிறது” என்கிறார் அரிஸ்டாட்டில். “பிறரைப் பற்றி அறிவது அறிவு. தன்னைப் பற்றி அறிவதே ஞானம்” என்கிறார் லியோ ட்ஸூ. தான் யார், தனது இயல்புகள் என்ன ? தனது ஆழ்மன ஆசைகள் என்ன ? தனது பாதை ஏது ? என்பதை உணர்கின்ற வினாடியில் தான் புதிய உலகமே நமது கண்களுக்கு முன்பாக விரியத் துவங்குகிறது.
வில்மா ரொடோல்ஃப் அமெரிக்காவிலுள்ள டென்னிஸி மாகாணத்தில் பிறந்தார். பிறந்தபோது அவளுடைய எடை வெறும் இரண்டு கிலோ. குறைப்பிரசவம். சின்ன வயதிலேயே போலியோ வந்து பற்றிக்கொள்ள இடது கால் செயலிழந்து விட்டது. உலோகக் கவசம் போட்டால் மட்டுமே கால் நேராக நிற்கும் எனும் சூழல். அவளிடம் சின்ன வயதில் “நீ என்னவாக விரும்புகிறாய்?” என்று கேட்டார்கள். “விளையாட்டு வீராங்கனையாக வேண்டும். ஓட்டப்பந்தயங்களில் வெற்றி பெறவேண்டும்” என்றாள் அவள் கண்கள் மின்ன.
நேராக நிற்கவே முடியாத கால்கள். மனதிலோ ஓட்டப்பந்தய வீராங்கனையாகவேண்டும் எனும் தழல். காலத்தின் கோலம் அவளை சின்னவயதில் ரொம்பவே சோதித்தது. கடுமையான காய்ச்சல், சின்னம்மை, பெரியம்மை, இருமல் என இல்லாத நோய்களெல்லாம் அவளை வந்து பிடித்தது. ஒருவழியாக பன்னிரண்டாவது வயதில், உலோகத்தின் துணையில்லாமல் நிற்கத் துவங்கினாள்.
அதன்பின் வாய்ப்புக் கிடைத்த அனைத்து ஓட்டப் பந்தயங்களிலும் ஓடினாள். தவறாமல் கடைசியில் வந்தாள். ஆனால் அவளுக்குள் இருந்த ஆவலும், வேட்கையும் கொஞ்சமும் அணையவேயில்லை. படிப்படியாய் தனது இலட்சியத்தின் பாதையில் ஒட்டிக்கொண்டே இருந்த அவர் 1956ம் ஆண்டு தொடர் ஓட்டத்தில் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றார் !
1960ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் ஒட்டுமொத்த விளையாட்டு ரசிகர்களையும் நிலை குலைய வைத்தது. நூறு மீட்டர் இருநூறு மீட்டர், நானூறு மீட்டர் என மூன்று ஓட்டங்களிலுமே தங்கப்பதக்கங்கள் வென்று உலகையே பிரமிக்க வைத்தார். எல்லாமே சாதனை வெற்றிகள். உலகின் மிக வேகமான வீராங்கனை என அவளை உலகம் கொண்டாடியது. நேராக நிற்கவே தடுமாறிய வில்மா, வரலாற்றின் பக்கங்களில் புயலாக புகுந்து கொண்டார்.
என்னவாகவேண்டும் எனும் தெளிவு உள்ளுக்குள் குடிகொள்ளும்போது எல்லாமே தொட்டுவிடும் தூரத்தில் வந்து சேர்ந்து விடுகிறது. எல்லாவற்றையும் அடையும் அளவிட முடியாத வலிமையை மனம் தந்து விடுகிறது.
என்னவாக விரும்புகிறோம் என்பதில் தெளிவாக இருப்பவர்கள் பாதியிலேயே பாதை மாறிப் போவதில்லை என்பதற்கு உதாரணங்களாக கோலிவுட் கவுண்டமணி முதல் விமானம் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் வரை வரிசையில் நிற்கிறார்கள். எது தனது உண்மையான வலிமை, எதை நோக்கி நான் செல்ல வேண்டும் எனும் தெளிவைப் பெற்றவர்களே வெற்றியாளர்களாய் பரிமளித்திருக்கிறார்கள் என்பதை வரலாறு கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்கிறது !
மாமரத்துக்கு என்னதான் உரம் போட்டாலும், மினரல் வாட்டரையே ஊற்றினாலும் அதில் ஆப்பிள் காய்க்கப் போவதில்லை. ஆப்பிள் தான் வேண்டுமென அதில் பழங்களை ஒட்டி வைத்தாலும் அது பயன் தரப் போவதில்லை. மாறாக, மாமரத்தின் இயல்பை அறிந்து அதற்கேற்ற பராமரிப்பை நல்கினால் மிகச்சிறந்த மாமரமாய் அது மாறும். அப்படியே மனிதனின் இயல்புகளும்.
அதன் முதல் படியாக இருப்பது உணர்தல் ! தன்னுடைய உண்மையான விருப்பம் எது ?. தனது இயல்பான வலிமை எது என கண்டறிவதே முதல் தேவை. இரண்டாவது அந்த விருப்பத்தை நோக்கிய பாதையில் பயணிப்பது. விருப்பமான பாதையில் பயணிப்பதைப் போன்ற ஆனந்தமான அனுபவம் வேறு இருக்க முடியாது. இலட்சியங்கள் காதலைப் போல !. காதலிக்காகவோ, காதலனுக்காகவோ கடற்கரையில் கொளுத்தும் வெயிலில் சுவாரஸ்யமாய்க் காத்திருக்கும் அற்புதத் தருணம் போன்றது அது. பலருக்கும் அத்தகைய வாழ்க்கை அமைவதில்லை என்பது தான் துயரம்.
உங்கள் அருகில் இருக்கும் நபரிடம் கேட்டுப் பாருங்கள், “இது தான் நீங்கள் விரும்பிய வாழ்க்கையா ?” என்று ! பெரும்பாலானவர்களின் பதில் உங்களை வியக்க வைக்கும். எழுத்தாளராக விரும்பி கிளார்க்காக வேலை செய்பவர்கள், பாடலாரிசியராக விரும்பி ஹோட்டலில் வேலை செய்பவர்கள், டீச்சராக விரும்பி ஐ.டியில் வேலை செய்பவர்கள் என பல முகங்களை நீங்கள் தரிசிக்கலாம். கிடைத்த வேலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தங்கள் இலட்சியங்களையும், இயல்புகளையும் பரணில் தூக்கிப் போட்டவர்கள் இவர்கள்.
இன்னும் சிலர் இலட்சியத்தின் பாதையில் ஒட்டத்தை ஆரம்பிப்பார்கள். கால் இடறியவுடனே பாதை மாற்றி விடுவார்கள். அல்லது போதுமடா சாமி என ஒதுங்கிவிடுவார்கள். அப்படி ஒதுங்காதவர்களைக் கூட சுற்றியிருப்பவர்கள் உசுப்பேற்றுவார்கள். “இதெல்லாம் உனக்கு விதிச்சதில்லைப்பா… ”, “இதெல்லாம் உனக்குச் சரிப்படாது” எனும் விமர்சனங்கள் அவர்களைத் தடம் மாற்றி ஏதோ மூலையில் மிச்ச வாழ்க்கையைக் கழிக்க வைக்கும்.
நீங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ உங்களுக்குத் தடையாக இருக்கும் சிக்கல்கள் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். பின்னுக்கு இழுக்கும் நண்பர்களாய் இருக்கலாம், படிப்பாய் இருக்கலாம். தங்குமிடமாய் இருக்கலாம். வேலையாய் இருக்கலாம். அந்த சிக்கல்களை அடையாளம் கண்டு கொண்டால் அதிலிருந்து மீள்வதும் எளிதாகிவிடும்.
“எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும்பா” என்று பலரும் தங்கள் இலட்சியங்களின் மேல் காலத்தின் கூடாரமடித்துப் படுத்துறங்குவதுண்டு. உண்மையில் அப்படி ஒரு நேரம் வருவதேயில்லை. நாம் தான் பயணத்தைத் தொடரவேண்டுமேயன்றி, கூரையைப் பிய்த்துக் கொண்டு தெய்வம் கொட்டுவதெல்லாம் கதைகளில் மட்டுமே சாத்தியம்.
இலட்சியங்கள் சமரசமற்ற ஆழ்மன விருப்பத்தின் வெளிப்பாடாய் இருக்க வேண்டும். நண்பன் சொன்னான், மாமா சொன்னார், மச்சான் சொன்னான் என்றெல்லாம் உங்கள் இலட்சியங்களை உருவாக்காதீர்கள். அது போல இலட்சியம் மிகவும் தெளிவான ஒரு புள்ளையை அடைவதாக இருந்தால் நல்லது. உதாரணமாக, சினிமா துறையில் வெற்றி பெறவேண்டும் என்று சொல்வதை விட, சினிமா துறையில் இயக்குனராக வேண்டும் எனும் சிந்தனை கூர்மையானது. இத்தகைய தெளிவான பார்வை அதை நோக்கியப் பயணத்தை நெறிப்படுத்துகிறது. சஞ்சலங்களை விட்டு விலகி நடக்கும் பலம் தருகிறது.
புல்லாங்குழல் இசைக்க விருப்பம் இருப்பவர், காலம் முழுதும் வீணை கற்றுக் கொண்டிருந்தால் அவருடைய ஆசை எப்போதுமே நிறைவேறப் போவதில்லை. புல்லாங்குழலுக்கான இசைப்பயிற்சியில் நுழைவதே ஒரே வழி. இலட்சியங்களைக் குறித்த தெளிவான பாதை இத்தகைய தயாரிப்புகளை எளிதாக்கித் தரும்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் இலட்சியம் எதுவாகவும் இருக்கலாம். இலட்சியங்கள் ஒரு பதவியையோ, இருக்கையையோ சென்றடைய வேண்டிய கட்டாயமில்லை. அன்பான, கருணையான, நேர் சிந்தனையுடைய, கோபப்படாத மனிதனாக மாறவேண்டும் எனும் இயல்புகளின் இலட்சியம் கூட ஆராதிக்கப்பட வேண்டியதே.
நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அந்த நிலையை அடைந்துவிட்டதாகவே மனதில் உங்களைக் கருதிக் கொள்ளுங்கள். அவர்களைப் போலவே உங்களுடைய சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்ளுங்கள். அப்போது விரைவாகவே அந்த இடத்தை அடைந்து விடுவீர்கள் என்கிறார் ஜான் கால்ஹன் எனும் வல்லுனர்.
வெற்றியாளர்கள் கருப்பாகவோ, வெள்ளையாகவோ, ஒல்லியாகவோ, குண்டாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எல்லாரிடமும் பொதுவாக ஒரே ஒரு விஷயம் இருக்கும். அது தன்னைக் குறித்த தெளிவான புரிதலும், இலக்கைக் குறித்த விலகாத பார்வையும், அதை நோக்கிய தளராத பயணமும் தான்.
இலக்கு எதுவெனும் அறிதல் கொள்
வெல்லும் மனதிடம் அதையே சொல்.