திசை திருப்பு
கொழுந்து விட்டெரியும்
பிரச்சினையை
முடிப்பது மிக எளிது.
முதலில்
அந்தப் பிரச்சினையின்
மீதிருந்து
பார்வையைத் திருப்ப வேண்டும்.
அதற்கு
சும்மா கிடக்கும்
இன்னோர் இடத்துக்கு
நெருப்பு மூட்ட வேண்டும்.
அந்த இடம்
நரம்புகளுக்குள்
சட்டென
வெறியேற்றுவதாய்
இருக்க வேண்டும்.
ஒரு
சாதியின் மீதான
சம்மட்டியாகவோ,
ஒரு
மொழியின் மீதான
அவமானமாகவோ,
ஒரு
மதத்தின் மீதான
வன்முறையாகவோ
இருக்கலாம்.
இப்போது
மீடியாக்களின்
முதுகு தண்டில்
பரவசத் தீயை
பற்ற வைக்க வேண்டும்.
புதிய நெருப்பை
அவர்கள்
ஊதி ஊதிப் பற்ற வைப்பார்கள்.
சோசியல் மீடியாக்களின்
கோரத்தாண்டவத்தில்
ஹேஷ் டேக் கள் கதறும்.
முதல் பிரச்சினை
முழுதாய்
மறக்கடிக்கப்பட்டு விடும்.
இப்போது
பற்ற வைத்த
இரண்டாவது நெருப்புக்கு
ஒரு
புது விளக்கம் கொடுத்து
பிரச்சினையை முடித்துக் கொள்.
எது
எப்படியெனினும்,
நெருப்புகள்
அணையாமல் பார்த்துக் கொள்
அவை
கூடுவிட்டுக் கூடு
பாய்ந்து கொண்டே
இருக்க வேண்டும்.
*