மீன் கொத்திகளின்
அலகுகளுக்கிடையே
மூர்க்கத்தனமான மூக்கணாங்கயிறுகள்.
மீன்களுக்கு நேரம் தவறாமல் உணவு
தூண்டில்களில்.
நண்டுகளின் விரல்கள் சேர்த்து
அறையப்பட்ட ஆணிகள்,
வளைகளின் வாசல்களிலேயே
வரவேற்கும் சிலுவைகள்.
பாடித்திரியும் வயல்க்காற்றுக்கு
தீ சுட்ட வடுக்கள்,
பாறைகளில் மோதி மோதி
நதிகளின் முகத்தில் இரத்தக்காயங்கள்.
ஒவ்வோர் சாலையின் முடிவிலும்
ஒவ்வோர் பொறி,
ஒவ்வோர் சந்திப்பின் கீழும்
சதுப்புநிலப் புதைகுழிகள்.
விருந்துக்காய்
வளர்க்கப்படுகின்றன
வெள்ளை உடை ஆட்டுக்குட்டிகள்.
கல்லறைகளின் மேல்
தொடர்கின்றன
எங்கள் கட்டுமானப்பணிகள்.
தாலியைக் காப்பாற்றும் கவனத்தில்
கணவனை மறந்தவர்களாய்,
தேசியக்கொடியை நடும் வேகத்தில்
தேசத்தைப் புதைத்தவர்கள் நாங்கள்.
எல்லாக் கதவுகளும்
இறுக்கமாய்த் தாழிடப்பட்ட பின்னும்,
மிட்டாய்களோடு மட்டும்
இன்னும் தொடர்கின்றன
எங்கள் சுதந்திர தின விழாக்கள்
0
