என்
ஆழ்மனதின் அடிவாரத்தில்
தேடிப்பார்க்கிறேன்
நாட்டுப்பற்றின் உண்மை முகங்களை.
எப்போதாவது எல்லைப்போரின்
வெப்பம் தாக்கும் போது
என் தேசம்
என்னும் எண்ணம் எழுவதுண்டு.
வாலாட்டினால் நறுக்கிவிடுவோம்
என்னும் வாய் முழக்கத்தோடு
கிரிக்கெட்டில்
நம் நாடு வெற்றிபெறும் போதெல்லாம்
கொஞ்சமாய்
நாட்டின் எண்ணம் நெஞ்சை நனைக்கும்.
ஏதேனும் கண்டு பிடிப்புக்கள்,
போக்ரான் குண்டு வெடிப்புக்கள்,
என்று,
தலைப்புச்செய்தி படிக்கும் போதெல்லாம்
பெருமிதம் உருவமில்லாமல் பெருகும்.
மற்றபடி,
தேசத்தின் எண்ணம் எல்லாம்
இனிப்பு வினியோகிக்கும்
சுதந்திர தினத்தன்று
தேசியக்கொடியைப்
பார்க்கும் போது மட்டும் தான்.
அறியாமையின்
தொழிற்சாலை நிறைந்திருக்கும்
வறுமையின் தெருக்கள்,
சுரண்டல்காரர்களின்
சூட்சுமச் சந்தைகள்,
மனித உரிமைகள் மறுக்கப்படும்
மரபியல் மனங்கள்,
இவைகளைக்
கண்டும் காணாமலும்
கடந்துபோகும் போதெல்லாம்
கையிலிருக்கும் தேசியக்கொடி
அசைய மறுக்கும்.
யாரோ ஒருவன்
வானத்திலிருந்து வந்து
அத்தனை சிதிலங்களையும்
ஒரே நாளில்
ஒட்டடை அடித்துவிடுவான்
எனும்
பகல்க்கனவுடன்
ஒவ்வொரு பகலும் முடிவுக்கு வரும்.
