மன்னியுங்கள்
மகாஜனங்களே !
நான் செய்தவை எல்லாம் தவறுகளே.
நீங்கள் எனக்கு
மலர்க்கிரீடம் அளித்தீர்கள்,
தோளுக்கு
தங்கஇழைப் போர்வை அளித்தீர்கள்
நானோ
உங்களுக்குக் கிழிந்த கோணியும்
காய்ந்த பூக்களின்
காம்புகளையும் மட்டுமே அளித்தேன்.
நம் ஊருக்கு
கால்வாய் வெட்ட நிதி ஒதுக்கிய போது
வாய்க்கால் மட்டுமே வெட்டிவிட்டு,
என்
மனைவிக்கு ஒரு மலர்க்காடு தந்தேன்.
ரேஷன் கடை அரிசியைக்
கடத்தியதில்
மூத்த மகனுக்கு வியாபாரமும்,
சாலைபோட
கையெழுத்திட்டதில்
இளைய மகளுக்கு மண ஒப்பந்தமும்
கோலாகலாமாய் நடந்து முடிந்தது.
எனக்கென்று
நான் எதையுமே
சேமித்து வைக்கவில்லை.
இருந்தாலும் தேர்தலில்
என்னைத் தோற்கடித்துவிட்டீர்கள்.
இப்போது,
என் மனசு முழுவதும்
ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள்.
கடைசியாய் எனக்கு
இன்னும்
ஒரே ஒரு சந்தர்ப்பம் தாருங்கள்
‘என் வளர்ச்சி’த் திட்டங்களுக்காய் !
