கரங்கள் இல்லாத மனுக்குலத்தை
கற்பனை செய்யவே முடியவில்லை.
கருவறை முதல்
கல்லறை வரை கரங்களை நம்பித்தான்
காலம் நடக்கிறது.
நடக்கப்பழகிய நாட்களிலெல்லாம்
தத்தித் தத்திக் கால்கள் நடக்க
மழலைவிரல்கள் தேடுகின்றன
அன்னையின் கைகள்.
முடிவு தேடும்
காத்திருத்தல் கணங்களில்
கடவுளே என்னைக் கை விடாதே
எனும்
ஆன்மீகத்தின் வார்த்தைகள்.
உடுக்கை இழந்தவன் கையென்று
நட்புக்கு உரையெழுதும்
நேசத்தின் வார்த்தைகள்
உயிரின் உணர்வுகளை
விரல்வழி உருளவிட்டு
கரம் கோர்க்கச் சொல்லும்
காதலின் வார்த்தைகள்.
ஒரு கை கொடு என்று
ஒத்துழைப்பை நாடும்
உழைப்பாளியின் வார்த்தைகள்.
இரு கை சேர்ந்தால் தானே
ஓசையின் பிரசவம் எனும்
ஒற்றுமையின் வார்த்தைகள்.
என் கையைத் தான்
நான் நம்புகிறேன் என்று
தன்னம்பிக்கையைத் தத்தெடுக்கும்
வலிமையின் வார்த்தைகள்.
கரங்களின் தேவைகள்
கலப்பைக் காலம் முதல்
கணிப்பொறிக்காலம் வரை
தலைமுறை தாண்டியும் நீள்கின்றன.
கரங்கள் இல்லையேல்
கண், காது, வாய் பொத்த
காந்தியின் குரங்குகளுக்கு
வழியில்லாமல் போயிருக்கும்.
பட்டம் விடும் பருவம் முதல்
பட்டம் பெறும் பருவம் வரை
விரல் தொடாத வினாத்தாள்கள் தான்
வினியோகிக்க வேண்டியிருக்கும்.
ஐம்புலனில் ஒன்று
திறக்கப்படாமலேயே
திருடு போயிருக்கும்.
கரங்கள் இல்லையேல்.
என்று
கரம் கொண்டு என்னால்
கவிதை எழுத முடியாமலும்.
