வெளிச்ச நகரத்தில்
முதல் முறையாக
ஓர் இருட்டுப் பகல்.
புதைக்கப்பட்ட வன்மம்
பூதாகரமாய்க் கிளம்ப,
எரிமலைக்குள் இறக்கப் பட்ட
எறும்புக் கூட்டமாய்
ஆயிரக்கணக்கான மனித உயிர்கள்.
நூறுமாடிக் கட்டிடங்கள் இரண்டு
தலைக்குத் தீயிடப்பட்டு
மண்ணுக்குள் மெழுகுவர்த்தியாய்
கொலையாகிச் சரிந்தன.
பழிவாங்கும் படலத்தின்
பலிபீடங்களில்,
பச்சை இதயங்கள் சிவப்பாய் சிதறுவது
எப்போது தான் முடியப் போகிறதோ.
ஆகாய விமானம்
சவப்பெட்டியாய் மாறி
கட்டிடத்தில் கரைக்கப்பட்ட வரலாறு
இதோ புதியதாய் இங்கே
எழுதப்பட்டிருக்கிறது.
பிரம்மாண்டத் திரைப்படங்களின்
கற்பனைக் கனவுகள்
இதோ
இந்த பெரும் புகைக் கூட்டத்தில்
நிஜமாகி நிற்கிறது.
நியூயார்க் நகரம்
வெயில் காலத்தில்
புகைக்குள் புதைக்கப்பட்டிருக்கிறது.
இந்த புகைக் காட்டில் எத்தனை உயிர்கள்
புகைந்து கொண்டிருக்கின்றனவோ.
சூரியனின் முகத்தை
இதோ
பகல் வந்து கறுப்புப் பூசியிருக்கிறது.
நாகரீகத்தின் நடைபாதை
மிருகக் கூட்டுக்குள் தான் முடிவடைகிறதா ?
கலாச்சாரத்தின் கடைசிப் படி
ஹ’ட்லரின் கோட்டைக்குள் தான்
கொண்டு செல்கிறதா ?
வானத்தில் எரிக்கப்பட்டு
பூமிக்குள் விரிக்கப்பட்டதா மனிதநேயம்.
தாமரை விரியவில்லையென்று
தடாகத்துக்குத் தீயிட்டனரா ?
இல்லை தடாகம் வேண்டாமென்று
தாமரைகளை எரித்தனரா ?
உலக வரைபடம்
இன்னொரு முறை எரியத் துவங்கியிருக்கிறது.
இதயங்களின் வீதிகள் எங்கும்
கண்ர்த் துளிகளின் கச கசப்பும்
இரத்தத் துளிகளின் பிசு பிசுப்பும்.
தயவு செய்து
இன்னொரு முறை
உடை வாளை உருவாதீர்கள்.
கண்ர் துடைக்கவும்,
கட்டுப் போடவும்.
கைவசம் இனிமேல் கைக்குட்டைகள் இல்லை.
