மலைகளே.
பூமிப் பந்தின்
கர்வக் கிரீடங்களே,
மலைகளே,
மலைப்பின்
மறு பெயர்களே.
உங்கள்
தலை துடைக்க
மென்மையின் மேன்மையான
மேகத் துணிகள்.
உங்கள்உள்ளுக்குள்
ஒளித்து வைத்திருக்கிறீர்கள்
ஓராயிரம்
ஒய்யாரச் சிற்பங்கள்.
காற்றுக்கும் கதிரவனுக்கும்
கலங்காத
கருங்கல் இதயம்
உனக்கு.,
உன்னை
எப்படிப் புகழ்வது ?
நெஞ்சு நிமிர்த்தி நிற்கும்
வீரத்துக்கா,
சில செடிகளுக்கு
வேர் விட வழி விடும்
ஈரத்துக்கா ?
உன் மர்மப் பிரதேச
மரக்கிளைகளில்
தான்
உண்மைச் சங்கீதம்
உறங்கிக் கிடக்கிறது.
சங்கீதத்தை
இரைச்சல்களிலிருந்து
இழுத்தெடுத்து
இதயம் வலிக்கும் போதெல்லாம்,
மௌனத்துள் கரைந்து
இசைக்கச் சொன்னது
உன் மௌனம் தான்.
நாடுகளுக்கும்
காடுகளுக்கும்
நீ
வேலியாய் விளைந்தவன்.
சில நேரம்
பரவசங்களின் பதுங்கு குழி
உயரமான உன்
முதுகு தான்.
நாங்கள்
உன்னைப் பார்த்து
ஆச்சரிய மூச்சு விடும்போது
நீ
பள்ளங்களைப் பார்த்து
பெருமூச்சு விடுகிறாயா ?
தெரியவில்லை.
ஆயிரம் தான் சொல்,
கல்லாய் நடக்கும்
மனிதர்களை விட,
கல்லாய்க் கிடக்கும் கல்
மேன்மையானதே.
