சூதாட்டம் மீதான நாட்டம்
அழிவுகள்
விளையும் தோட்டம்.
நம்பிக்கை வைக்க
ஆயிரம் இடங்கள் இருக்க,
சுற்றும் சக்கரத்தில்
சோம்பேறிக் கூட்டம்
நம்பிக்கை வைக்கும்.
விதைக்காத இடத்தில்
அறுவடை செய்ய,
கனவுகளின் கால்கள்
கோணிகளுடன் காத்திருக்கும்.
அடுத்தவன்
தோற்க வேண்டும் எனும்
பிரார்த்தனைகளே
இங்கே
ஆண்டவன் மீது
அடுக்கடுக்காய் அடுக்கப்படும்.
அடக்க முடியாத
மனக் குதிரைகள் இங்கே
மீண்டும் மீண்டும்
தலை தெறிக்க ஓடும்.
தவறான ஓடு தளத்தில்.
மாயமான் கனவுகளில்
வேடர்கள்
சிறைப்பிடிக்கப் படும்
கானகம் இது.
வெறும்
கற்பனைகளின் கோட்டையில்
சிம்மாசனம் போடும்
பகல் கனவின்
படுக்கை அறை இது.
ஒரு பானை சோற்றுக்கு
ஒரு கல் பதமென்று
போதையுடன் புலம்பித் திரியும்
வர்ணக் கூடத்தின்
நிறமற்ற வாழ்க்கை இது.
எது எப்படியோ,
முடிவு மட்டும்
சாதகமாய் இருப்பதற்கான
சாத்தியங்கள் இல்லை.
