மெல்ல மெல்ல மனக்கேணியில்
தெறித்துச் சிதறுகின்றன நீர் முத்துக்கள்.
வெளியே மழை.
மண்ணோடு ஏதோ சொல்ல
மரண வேகத்தில் பாய்கிறது மேகம்.
மழை.
இயற்கை செடிகளுக்கு அனுப்பும்
பச்சையப் பராமரிப்பாளன்.
சாலைகளுக்கோ அவன்
சலுகைச் சலவையாளன்.
வாருங்கள்,
குடைகளுக்குள் நனைந்தது போதும்
தண்ரால் தலைதுவட்டிக் கொள்ளலாம்.
பாருங்கள்,
அந்த வரப்பின் கள்ளிகள் கூட
கண்திறந்து குளிக்கின்றன.
சின்னச் சின்ன சிப்பிகள் கூட
வாய் திறந்து குடிக்கின்றன.
பூக்கள் செல்லமாய்
முகம் கழுவிக் கொள்கின்றன.
முகம் நனைக்க முடியாத வேர்கள் கூட
அகம் நனையக் காத்திருக்கிண்றன.
மழை வேர்வை சிந்தியதும்
பூமிப்பெண்ணிடம் புதுவாசனை.
இப்போது தான்
சகதிக்கூட்டைச் சிதைத்து
வெளிக்குதிக்கின்றன
பச்சைத் தவளைகள்.
முகம் சுருக்க மறுக்கின்றன
தொட்டாச்சிணுங்கிகள்.
புற்களைக் கழுவி சாயவிட்டு,
காய்ந்த ஆறுகளில் ஆழப்பாய்ந்து,
சிறுவர்களின் காகிதக் கப்பல்களைக் கவிழ்த்து,
மரங்கொத்திக்கு தாகம் தணித்து
இதோ நதியைக் குடிக்கப் பாய்கிறது
மண்ணில் குதித்த மழை.
பூமிக்கு வானம் அனுப்பிய
விண்ணப்பக் கயிறு இது.
காற்று ஏறி வர
வானம் இறக்கிவைத்த
இந்த தண்ர்ஏணி மேகத்தின் முதுகில்
தான் சாய்க்கப்பட்டிருக்கிறது.
அவ்வப்போது வானம்
மின்னல் நுனியில்
இடி கட்டி இறக்குகிறது.
மொட்டைமாடியில் இளைப்பாறி,
நாட்டிய நங்கையின்
சலங்கையொலியாய் சன்னலோரம் சிதறி,
குவிந்த இலைகளின் கழுத்து வரைக்கும்
குளிர் ஊற்றிச் சிரிக்கிறது
இந்த மழை.
தேனீர்க் கோப்பைகளில் வெப்பம் நிறைத்து
கதகதப்புப் போர்வைக்குள் உடலைப் பொதிந்து,
சாரளங்கள் வழியேயும்
மழையை ரசிக்கலாம்.
உச்சந்தலைக்கும்
உள்ளங்கால் விரலுக்குமிடையே
ஈரச் சிறகைச் சுற்றிக்கொண்டும்
மழையை ரசிக்கலாம்.
மழை. அது ஒரு இசை.
கேட்டாலும் இன்பம்,
இசைத்தாலும் இன்பம்.
நல்ல இசை தன் ரீங்காரத்தை
காதோரங்களில் விட்டுச் செல்லும்.
மழை மாவிலையில் விட்டுச் செல்லும்
கடைசித் துளிகளைப்போல.
வாருங்கள்,
குழாய்த்தண்ர்க் கவலைகளை
கொஞ்சநேரம் ஒத்திவைத்துவிட்டு.
இந்த சுத்தமழையில்
சத்தமிட்டுக் கரையலாம்.
மழை.
புலன்கள் படிக்கும் புதுக்கவிதை.
மழை.
பூமிக்கு பச்சை குத்தும்
வானத்தின் வரைகோல்.
மழை.
இளமையாய் மட்டுமே இருக்கும்
இயற்கையின் காவியம்.
மழை.
இலக்கணங்களுக்குள் இறுக்கமுடியாத
இயற்கையின் ஈர முடிச்சு.
