வானம்
எப்போது
நீர் இறைப்பதை நிறுத்திவிட்டு
பஞ்சுப் பொதிகளைப்
பட்டுவாடா செய்யத் துவங்கியது ?
இந்த குளிர் விளைச்சலில்
குயில்களுக்குக்
குரலடைப்புப் போராட்டமா?
இலைகளை அவிழ்த்துவிட்டு
மரங்கள் இங்கே
உறைந்த நீரை
உடுத்திக் கொள்கிறதே !!
கண்களுக்கு
எல்லா இடங்களிலும்
வெள்ளைப் பாசனம்.
வெள்ளைப் பனிகள் விலகிய இடங்களில்
வெள்ள சாசனம்
நிர்வாணச் சாலைகள்
இனிமேல் அடிக்கடி
ஆடை அணியும்.
ஆனாலும்
அரசாங்க துச்சாதனர்களால்
அவசர அவசரமாய் அவிழ்க்கப் படும்.
புல்லின் மேல் பனி
பார்த்திருக்கிறேன்.
பனியில் புதைந்து போன புற்களை
இப்போது தான் பார்க்கிறேன்.
கூரைகளின் மேல்
இன்னோர் குளிர்க்கூரை!!
வாகனங்களின் மேல்
வெள்ளைப் போர்வை.
இது பூமிக்கு வானம் போர்த்தும்
பொன்னாடையா?
இல்லை
பூமியோடு வானுக்குள்ள
பனிப்போரா ?
இந்த கண்டத்தைப் பிடித்து
குளிர்சாதனப் பெட்டிக்குள்
அடைத்தது யார்?
சென்னைச் சூரியனை
சிலநாட்களுக்குக் கடன்வாங்கி
இங்கே
வெப்ப வினியோகம் நடத்தலாமா ?
இல்லை
வியர்வைக்குள் விழுந்துகிடக்கும்
சிங்காரச் சென்னைக்கு
அமெரிக்கக் குளிரை
அனுப்பி வைக்கலாமா ?
வா என் கண்மணி
மனசுக்குள் வெகுவாய்
குளிரெடுக்கிறதென்று
கவிதை எழுதலாமா ?
விரைவாய் சொல்லுங்கள்
விரல்கள் குளிரில்
விறைத்துப் போகிறது !!!
