மவுனம்
எனக்குப் பிடிக்கும்.
நகரத்து நெரிசல்களில்
நசுங்கி
மொட்டை மாடியில்
இளைப்பாறும் மாலை நேரத்தில்
இந்த மவுனம் எனக்குப் பிடிக்கும்.
வண்ணத்துப் பூச்சி
பூவின் வாசல்திறக்கும்
அழகை
விழிகள் விரியப் பார்க்கும் போதும்,
மாவிலையின்
முதுகெலும்பில்
நழுவிவரும் மழைத்துளி
மண்ணின் மார்பை முத்தமிடப்போகும்
சில்லென்ற நிமிடங்களிலும்.
சொட்டுச் சொட்டாய்
வடிந்து கொண்டிருக்கும்
மாலை மஞ்சளின் மரண நிமிடங்களை
மலையுச்சியின் மரத்தடியில்
மனம் கலைய இரசிக்கும் போதும்,
இனங்காண இயலாத பறவையொன்று
சிறகடித்துப்
பாடிச் சென்றது எந்த ராகம் என்று
சிந்தனையைக் கொஞ்சம்
சிறகடிக்க விடும்போதும்.
இதயம் முழுவதும்
இன்ப அதிர்வுகளை விட்டுச் செல்லும்
இந்த மௌனம்
எனக்குப் பிடிக்கும்.
சத்தம்
எனக்குப் பிடிக்கும்.
விழுவதனால் வேகம் சேர்க்கும்
மலையருவி.
அடிப்பதனால் அழகு விற்கும்
கடல் அலைகள்.
இயற்கை மேல் ஈரம் துவட்டும்
மழைக் கரங்கள்.
மௌனத்துக்குத் தூண்டில் போடும்
சத்தங்களும்.
மௌனங்களுக்குள் மறைந்து கிடக்கும்
சத்தங்களும்.
கொலுசு மாட்டிய நதிபோல
சங்கீதமாய் எப்போதுமே மனசைக் கொத்தும்.
இத்தனை இருந்தும்.
மொத்த ரசனைகளையும்
யுத்தமில்லாமல் சிதைத்துச் செல்லும்,
கண்மூடி
கவிதை யோசிக்கும் கனங்களில்
கன்னத்தில் நீ இடும்
சத்தமில்லாத ஒரு முத்தம்.
