ஆவலின் ஆயுள்கைதியாய்
இன்னும்
ஜன்னல்கள் திறக்காத
பாதாளச் சிறைக்குள்
நான்.
உன்
கணிப் பொறிக் கடிதம்
கை நீட்டுமென்று
நான்
தோண்டி எடுத்து வைத்திருந்த
நம்பிக்கைகளின் நகங்களும்
பாசி பிடித்துத் தான்
போய்விட்டன.
ஆனாலும் என்
கணிப்பொறிக் கதவுகளை
தினசரிக் கடமையாய்
திறந்து பார்க்கத்
தவறுவதே இல்லை.
உன் விரல்கள் வந்து
சத்தமிடாமல் தட்டினாலும்
திறக்க வேண்டுமென்றே
கண்களில்
கதவுகளை நட்டிருக்கிறேன்.
புள்ளிமானே,
என் முகவரியில் ஏதேனும்
புள்ளிகளைத் தொலைத்தாயோ ?
பட்டத்தில் வால் பார்த்து
உள்ளங்கை உதறி
நூல் தொலைத்தாயோ ?
இல்லை
என் முகத்துக்கான
முகவரியையே
தொலைத்து விட்டாயோ ?
ஆற்றுக்குள் விழுந்து விட்ட
அயிரை மீனின்
பெயர் மறந்து போய்விட்டதோ ?
கேள்விச் சாவிகளோடு தான்
கதவுகள் இல்லா
மதில் சுவர் திறக்க
துவாரம் தேடித் திரிகிறேன்.
யாராரோ வந்து
ஏதேதோ எறிந்து விட்டுப்
போகும் என்
இணையக் கடிதக் கூடையில்
இன்னும் உன்
சாமந்திப் பூ மட்டும் வந்து
சேரக் காணோம்.
அந்த வாசம் இல்லாததாலோ
என்னவோ,
பெரு மலையாய் கிடக்கும்
கடிதக் கட்டுகளிலெல்லாம்
வெறும் சுடுகாட்டு வாசனை.
