தனிமை தின்று,
தனிமை தின்று
என் பகல்களும் இரவுகளும்
செரிக்க முடியாமல்
படுத்துக்கிடக்கின்றன,
அவசரமாய் எனக்கு ஓரு துணை தேவை.
என் முகமே
எனக்கு அன்னியமாகிப் போகும்
சாயங்கால வேளைகளில்,
பகல் அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
என்னருகே நீ வேண்டும்.
மழைபொழியும்
மத்தியான வேளைகளில்
நம்
படுக்கையறைச்
சன்னலோரம் சறுக்கும்
குளிர்த் துளிகளின் கணக்கெடுக்க
என்
கன்னம் தேய்த்து நிற்கும்
உன் கவிதைக் கண்கள் வேண்டும்
மெலிதாய்ச் சண்டையிட்டு
ஊடலுடன் சிணுங்கிச் சிதறும்
வார இறுதிகள் வேண்டும்.
குழந்தைக் கனவுகளுடன்
கொஞ்சும் பொழுதுகளில்
வெட்கம் சுரண்டும்
உன் உதடுகளும்
வெளிச்சம் பிறப்பிக்கும்
உன் விழிகளும் வேண்டும்.
சிறுவயதில்
அம்மாவிடம் ஒதுங்கிக் கிடந்த
என் சிறுவயதுச் சமாதானம்
உன் மடியிலும் மனதிலும்
திரும்பக்கிடைக்க வேண்டும்.
வாழ்க்கை வெயிலில்
நிழல் தேடும்
பொழுதுகளில்
என்
குடைக் கம்பி பிடித்து
தோளுரசி நடக்க நீ வேண்டும்.
ஒரு மழையிரவு விட்டுச்சென்ற
ஓராயிரம் ஈசல்களாய்
இதயம் முழுதும் கனவுச் சிறகுகள்
எதிர்பார்ப்புக்கள்
பழுத்துக் கொண்டிருக்கும்
இந்த கணம்,
எங்கே பிறந்து
எந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்து
எத்தனைக் கனவு
கொறித்துக் கொண்டிருக்கிறயோ
முகம் தெரியாத என்
நீ
