மேற்கு வானம் மஞ்சள் பூசியதால்
குளிராடை போர்த்தி
வெப்பம் குறைந்த காற்றுடன்
குசலம் விசாரிக்கும் தெப்பம் .
அல்லி பிணைத்த தாமரை விலக்கி
வெள்ளிப் பாதத் துடுப்புடன்
வெள்ளை வாத்துக் கூட்டம்
சலனத் தாமரையாய்
தங்க நீரில் மிதந்து களிக்கும்.
அக்கரையின் காற்றில் விரவி
தாழக் கரையில் தவழ்ந்து வரும்
தாழம்பூ வாசம்
வண்ணத்துப் பூச்சிகளைக் கொஞ்சம்
வம்புக்கிழுக்கும்.
பச்சை கொட்டிய
வளைகொண்ட வயலின் வரப்புகளில்
நதியோர நண்டுகள் வந்து
சுதியோடு நடை பயிலும்.
மஞ்சள் பூசிய மினுமினுப்பில்
பத்து மணிப் பூக்கள்
பாத்திகளின் ஓரம் முழுதும்
பளபளவென பரவிக் கிடக்கும்.
கன்னிப் பெண்ணின்
குலுங்கும் வளையலாய்
தேகத்தில் மோதும் நதியின் ஒரங்கள்
மோகத்தின் முதலிரவென
உடைந்து சிதறும்..
வாழை மரங்களின்
விரிந்த இலைகளில்
பொன்வண்டுக் கூட்டம் வந்து
பொம்மலாட்டம் நடத்தும்.
என் ஒவ்வொரு சுவடுகளிலும்
பொட்டுவைத்துக் கொள்ளும்
பூமித்தாயின்
பூரிக்கும் புன்னகைச் சோலையில் நான்.
ஆயிரம் அழகுகள்
அணிவகுத்த போதும்
நினைவுகள் மட்டும்
கோடிக் கண் கடன்வாங்கி
உன்னை மட்டும் பார்த்துக் கிடக்கும்.
கையில்
புன்னகை ஒட்டி வைத்த
உன் புகைப்படம்.
