இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா என்பது சதி வேலைக்கு கன கட்சிதம். கூட இருப்பவர்களே குழி பறித்த கதைகள் வரலாற்றையே புரட்டிப் போடும் வலிமை படைத்தவை. நண்பனாய் இருந்து துரோகியானவர்கள், நம்பிக்கையானவர்களாய் நடமாடி நம்பிக்கை துரோகம் செய்தவர்கள், நாட்டையே சுருட்டி உலையில் போட்டவர்கள் என இவர்களுடைய கதைகள் மிரட்டலானவை. அப்படி நடந்த சதி வேலைகளில் ஒரு டாப் 10 லிஸ்ட்.
- புரூட்டஸ்
யாராவது நம்பிக்கைத் துரோகம் செய்தால் “யூ டூ புரூட்டஸ்” என்று சொல்வோம். இந்த உலகப் புகழ் பெற்ற வாக்கியத்தைச் சொன்னவர் த கிரேட் ஜூலியஸ் சீசர். சாவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அவர் புரூட்டஸைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள் இவை.
ஜூலியஸ் சீசரின் நெருங்கிய நண்பர் இந்த புரூட்டஸ். கி.மு 44ல் அவரும் அவருடன் சுமார் ஐம்பது பேருமாகச் சேர்ந்து ஜூலியஸ் சீசரைத் தாக்கிக் கொன்றார்கள். ரோம அரசில் ஜூலியஸ் சீசருக்கு எழுந்த அபரிபிதமான புகழ் தன்னை வளர விடாதோ எனும் பொறாமை தான் இந்த சதியின் ஆதாரம்.
யார் என்னை தாக்கினாலும் புரூட்டஸ் என்னோடு இருப்பான் எனும் ஜூலியஸ் சீசரின் நம்பிக்கைக்கு விழுந்த சாவுமணி அது. அந்த அதிர்ச்சி தான் அந்த வார்த்தைகளில் வெளிப்பட்டது.
- லீ ஹார்வி ஆஸ்வால்ட்
யாருப்பா இவன் என பெயரைக் கேட்டால் குழம்புவோம். இவன் தான் அமெரிக்க ஜனாதிபதியான ஜான் எஃப் கென்னடியைக் கொன்றவன். 1963 நவம்பர் 22ல் இந்த கொலையை இவன் நிகழ்த்தினான்.
உலகிலேயே ஒரு கொலை அதிக சர்ச்சைகளுடன் ஓடுகிறதென்றால் அது கென்னடியின் மரணம் தான். இன்னும் அவருடைய கொலை குறித்த விவாதங்களும், சர்ச்சைகளும், சந்தேகங்களும் ஓயவில்லை. எட்டாவது மாடியில் இருந்து கொண்டு ஜஸ்ட் லைக் தேட் கென்னடியைச் சுட்டேன் என்றான் இவன். இன்னும் இவன் சொல்வது உண்மை என ஏற்றுக்கொள்ளாத மக்கள் எக்கச்சக்கம். எப்படியோ, கென்னடி கொல்லப்பட்டார் என்பது மட்டும் கசப்பான நிஜமாகிப் போனது.
- அந்திரே லுகோவாய்
ரஷ்யாவின் பாதுகாப்பு அதிகாரி அலெக்சாண்டர் வால்டரோவிட்ச் ( Alexander Valterovich ) ஐக் கொலை செய்தவர் இவர் தான். சரி, அதில் என்ன ஸ்பெஷல். ஒரு கொலை தானே என நினைக்கலாம். விஷயம் இருக்கிறது. அவர் கொல்லப்பட்டது போலோனியம் 210 எனும் விஷத்தினால். இது அணு விஷம் !
உலகிலேயே நியூக்ளியர் விஷத்தினால் ஒருவர் கொல்லப்படுவது இதுவே முறை. 2006 நவம்பர் 1ம் தியதி இவர் இறந்து போனார். அந்திரே இவருடன் அமர்ந்து குடித்த தேனீரில் இந்த விஷம் கலக்கப்பட்டிருந்ததாம். மூன்று முறை அலெக்ஸாண்டரைச் சந்தித்து, மூன்று முறையும் தந்திரமாய் விஷம் கொடுத்திருக்கிறார். அந்திரேவும் சாதாரண ஆளில்லை. ரஷ்யாவின் முக்கிய அரசியல் புள்ளிகளில் ஒருவர் ! அரசியல்வாதியல்லவா “எல்லாம் வெளிநாட்டுச் சதி..” என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.
- பெலிக்ஸ் யுசோபோவ்
ராஸ்புடின்( Grigori Rasputin) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 1869 ஜனவரி 22ல் ரஷ்யாவில் பிறந்தவர். இவரை மக்கள் கடவுளாகக் கொண்டாடினார்கள். இவரிடம் ஏதோ ஆன்மீக சக்தி இருப்பதாகவும், குணமளிக்கும் மேஜிகல் பவர் இருப்பதாகவும் பம்மினார்கள். இது போதாதா, உருவாகி விட்டது இவருக்கென்று ரசிகர் படையும், சீடர் படையும்.
ஆனால் ராஸ்புடின் ஒரு சின்ன தப்பு பண்ணி விட்டார். மன்னன் இரண்டாம் நிக்கோலஸின் மனைவியுடன் ரகசிய ஸ்னேகிதனாய் இருந்திருக்கிறார். விடுவார்களா ? இளவரசர் பெலிக்ஸ் யுசோபோவ் தன் சகாக்களுடன் வந்து ராஸ்புடினைத் தீர்த்துக் கட்டினார்.
இவர் கொல்லப்பட்ட விதம் தான் இதில் ஹைலைட். முதலில் அவருக்கு விஷம் வைத்திருக்கிறார்கள். ஆள் சாகவில்லை, பின் தலையில் சுட்டிருக்கிறார்கள் அப்படியும் சாகவில்லை. எஸ்கேப் ஆக முயன்றவரை மீண்டும் மூன்று முறை சுட்டிருக்கிறார்கள். ஊஹூம். அப்புறம் மீண்டும் அடித்து சட்னியாக்கிப் பார்த்திருக்கிறார்கள். ஆள் கண் விழித்து “நீங்க ரொம்ப மோசம்” என்றிருக்கிறார்.
நடுநடுங்கிப் போனவர்கள் அவரை மீண்டும் பின்னோ பின்னென்று பின்னி, கோணியில் கட்டி உறைந்த ஐஸ் நதியில் போட்டு விட்டார்கள். மூன்று நாளுக்குப் பின் பாடி மேலே வந்தது.
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பார்த்தவர்கள் பதறினார்கள். காரணம் அவர் ஐஸ் நதியிலிருந்து வெளியே வர ரொம்பவே முயற்சி செய்தார் என்று கூறப்பட்டிருந்தது !
- ஜாண் வைக்ஸ் பூத்
ஒரு அரசியல் கொலை மூலம் உலகப் புகழ் பெற்றவர் இந்த ஜாண் வைக்ஸ் பூத். இவர் கொன்ற நபர் ஆபிரகாம் லிங்கன்.
ஏப்பிரல் 14 ம் நாள் 1865ம் ஆண்டு இந்தச் சதி நடந்தது. வாஷிங்டனிலுள்ள ஃபோர்ட் திரையரங்கில் வைத்து பின்னந்தலைக்கு மிக அருகே துப்பாக்கியை வைத்து சுட்டார். எல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணம். இந்தச் சதியில் லிங்கனின் அரசவை உயரதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருந்தது. ஒருவகையில் “எதிர்கட்சிகளின் சதி” என்பது இவர் விஷயத்தில் பொருந்தும்.
அமெரிக்காவின் ஜனாதிபதிகளில் படுகொலை செய்யப்பட்ட முதல் மனிதர் ஆபிரகாம் லிங்கன் தான்.
- பல்தாசர் ஹ்ஜெரால்ட்
உலக வரலாற்றில் முதன் முறையாக கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி ஒரு தலைவரை போட்டுத் தள்ளிய நிகழ்வு இது தான். அமைதியான வில்லியஸ் என அறியப்படும் முதலாம் வில்லியம் தெற்கு பிரான்சில் டச் போராளிகளின் தலைவராக 1544ல் பொறுப்பேற்றவர். இவருடைய செயல்பாடுகள் நெதர்லாந்து ஸ்பெயின் நாடுகளை ஆண்ட மன்னன் இரண்டாம் பிலிப்புக்கு மிகப்பெரிய குடைச்சல். எப்படியாவது இவனை ஒழித்துக் கட்டவேண்டும் என முடிவெடுத்தார்.
என்னன்னவோ வேலைகள் செய்தும் எதுவும் வெற்றியடையவில்லை. அவனைக் கொல்பவருக்கு இருபத்தாயிரம் ரூபாய் தருவேன் என பரிசு அறிவித்தான். அந்தப் பரிசுப்பணத்துக்காக பலர் முயன்றார்கள். அப்போது அது மிகப்பெரிய பணம். வெற்றியடைந்தது ஜெரால்ட் தான். ரகசியமாக அவருடைய வீட்டு மாடிக்குச் சென்று, திடீரென அவருக்கு முன்னால் தோன்றி மூன்று முறை சுட்டு அவரை வீழ்த்தினான்.
- ஆல்பிரட் ரெட்
ஆல்பிரட் ரெட் ! முதலாம் உலகப் போர் காலத்தில் வாழ்ந்தவர். ஆஸ்திரிய நாட்டு உயரதிகாரியான இவர் ஒரு ரஷ்ய உளவாளி. யாருக்குமே கொஞ்சமும் சந்தேகம் வராதபடி இவருடைய வாழ்க்கை இருந்தது அதிசயம் தான். கூடவே பிரான்சுக்கும், இத்தாலிக்கும் கூட இரட்டை உளவாளியாய் வாழ்ந்தார் எனும் குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.
ஆஸ்திரியாவின் போர் யுத்திகளையும், திட்டங்களையும் ரஷ்யாவுக்குக் கொடுத்து ஆஸ்திரியா நாட்டுக்கு மிகப்பெரிய சதி வலையாக இருந்தவர் இவர். பல நாடுகளுக்கு எதிரான ரகசியங்களை ரஷ்யாவுக்குக் கொடுத்து அந்த ரகசியங்களை விற்றதன் மூலம் ரஷ்யாவின் வலிமையை உணர்த்தியவர்.
ரஷ்யாவின் படை பலத்தைப் பற்றி தவறான தகவல்களைக் கொடுத்து ஆஸ்திரியப் படையை எதிரிகளின் கையில் சிக்க வைத்தது இவர் செய்த கொடுமைகளில் முதன்மையானது. இதன் மூலம் சுமார் ஐந்து இலட்சம் ஆஸ்திரிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
வரலாற்றின் மிகப்பெரிய சதிகளில் இவரது சதி மிக முக்கியமானது. இவரது குட்டு வெளிப்பட்டபோது சட்டென தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனார்.
- ஜான் வால்கர்
அமெரிக்காவின் கடற்படை உயரதிகாரியாக பணியாற்றியவர் ஜான் வால்கர். அவர் ஒரு ரஷ்ய உளவாளி என்பது யாருக்குமே தெரியவில்லை. எல்லோருடைய கண்களிலும் மண்ணைத் தூவி மிக வெற்றிகரமான தலைவராக பிலிம் காட்டி வந்தார் இவர். 1968 முதல் 1985 வரையிலான காலத்தில் தான் இவருடைய உளவு வேலைகள் படு தீவிரமாய் இருந்தன. சுமார் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய தகவல்களை இவர் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்து அமெரிக்காவை பலவீனப்படுத்தினார்.
1976ம் ஆண்டு வேலையிலிருந்து அவர் ரிட்டயர்ட் ஆகும்வரை யாருக்குமே அவருடைய விஷயம் தெரியவில்லை. அவரை போட்டுக் கொடுத்து புண்ணியம் கட்டிக்கொண்டது வேறு யாருமல்ல, அவருடைய சொந்த மனைவி. ரிட்டயர் ஆன கையோடு டைவர்ஸும் வாங்கிக் கொண்டார் வால்கர். கடுப்பாகிப் போன மனைவி இவரைப் பற்றிய விஷயங்களையெல்லாம் உளவுத் துறைக்குத் தெரிவித்தார்.
“டைவர்ஸ் ஆன டென்ஷன்ல அந்தம்மா உளறுது” என்று தான் முதலில் நினைத்தார்கள். இவர் மீது யாரும் சந்தேகப்படவில்லை. ஆனால் தோண்டத் தோண்ட விஷயங்கள் விஸ்வரூபமாய் வெளியே வந்தன. அமெரிக்க வரலாற்றிலேயே கிடுகிடுக்க வைத்த நிகழ்வாய் மாறிப் போனது !
- ஜேம்ஸ் அமிஸ்டாட் லஃபயேட்டே
கருப்பினத்தைச் சேர்ந்த இவர் ஒரு அமெரிக்க உளவாளி ! பிரிட்டனுக்கு எதிராக சதுரங்கக் காய்களை நகர்த்த இவர் சொன்ன தகவல்கள் தான் உதவின. அமெரிக்காவின் மிகப்பெரிய பலமாக 1780களில் இவர் இருந்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இவரை ஒரு பிரிட்டிஷ் உளவாளியாக அமெரிக்கா சித்தரித்தது தான். அதை உண்மையென்று நம்பிய பிரிட்டிஷ் படைகள் இவரை தங்கள் வியூக உரையாடல்களில் கலந்து கொள்ள வைத்தன. தகவல்களை அள்ளி அள்ளிக் கொடுத்தன.
எல்லாவற்றையும் கேட்டு, குறிப்பெடுத்து அப்படியே அமெரிக்க உளவாளிகளிடம் கொடுத்து கன கட்சிதமாய் நம்பிக்கை துரோகம் செய்தார். அது தானே உளவாளிகளின் வேலை ! அமெரிக்காவுக்கு பல வெற்றிகள் இதன் மூலம் கிடைத்தன.
உளவு வேலைகளெல்லாம் முடிந்தபின் போதுமடா சாமி என விவசாயத்துக்குத் திரும்பி மிகப்பெரிய விவசாயி ஆனார். அரசு இவருக்கு வசதிகள் எல்லாம் செய்து கொடுத்தது !
- தியோடர் ஹால்
அமெரிக்காவின் முதலாவது மற்றும் இரண்டாவது அணு ஆயுதத்தைத் தயாரித்ததில் இவன் கை உண்டு. அதற்காக அமெரிக்கா இவனைக் கொண்டாடியது. யாருக்கும் தெரியாத ஒரு ரகசியப் பக்கம் இவனிடம் இருந்தது. இவன் ரஷ்ய அணு உளவாளி எனும் ரகசியம் தான் அது. ஜப்பானை நாசக் கோட்டையாக்கிய அணு ஆயுதத்தின் ரகசியத்தை அக்கு வேறு ஆணி வேறாய் சோவியத் உளவுத் துறைக்கு கொடுத்தான் இவன்.
தனது எழுபத்து நான்காவது வயதில் கேன்சர் நோயினால் இறந்து போனார். அமெரிக்கா மட்டுமே அணு ஆயுதம் வைத்திருப்பது உலகிற்கு ஆபத்து. உலகின் பல நாடுகளும் அதை வைத்திருக்க வேண்டும். அல்லது யாருமே வைத்திருக்கக் கூடாது. அந்த சிந்தனையில் தான் நான் அணு ஆயுத ரகசியத்தை ரஷ்யாவுக்குக் கொடுத்தேன் என்றார் இவர்.
