நான்
உன்னிடம் சொன்னதில்லை
காதலுக்கு
வார்த்தைகள் விளக்கவுரை
சொல்வதில்லையே.
உன்னுடன் பேசும்போதெல்லாம்
எனக்குள்
அன்னியோன்யமாய்
ஓர்
அணில் கூட்டம் ஓடித்திரியும்.
உன் கண்களில்
படபடக்கும் பட்டாம் பூச்சிகளுக்காய்
என் மனம் முழுதும்
ஈரப் பூக்கள்
இறக்குமதியாகும்.
உன் புன்னகைத் தட்டுகளில்
என் இதயம்
கால் தடுக்கி விழுந்து கிடக்கும்.
பிடிவாதப் புயலாய்
என்
புலன்கள் கொந்தளிக்கும்.
விரலுக்கும் மூளைக்கும்
இடைவிடாமல்
ஓர்
இழுபறி நடக்கும்.
எனக்குள் நடக்கும்
பூகம்பங்களைப் புரியாமல்
நீ
தொடர்ந்து புன்னகைப்பாய்.
நான்
உடைந்துபோன உறுதியுடன்
இடிபாடுகளில் இறுகிக் கிடப்பேன்.
உன் கூந்தல்க்காட்டுக்குள்
சில
மின்னல் பூக்கள் நட்டு,
உன் கண்களுக்குள் அதை
அறுவடை செய்ய ஆசை வரும்.
உன் ஆடைகளுக்குள்
என் ஆசைகளை ஊற்றி வைக்க
சிறு
மோகச் சிந்தனை முளை விடும்.
விரல் அழகா
உன்
நகம் அழகா என்று,
பூக்களும் காற்றும்
நதிக்கரையில் பேசுதோ என்று
சங்கீதச் சிந்தனை சிரித்து வரும்.
நீ
அருகிலிருந்தால்
நான் கனவுகளில் விழுந்து
மௌனமாய் கலைகிறேன்.
நீ
விலகியிருந்தால்
நிஜத்துக்கு வந்து
உன்னுடன் பேசிப் பேசியே
சத்தத்தில் கரைகிறேன்.
கவிதைகளுக்கு சொன்னவற்றை
நான்
உனக்குச் சொல்லியிருக்கலாம்.
சொல்லியிருந்தால் ஒருவேளை
என் வீட்டுப் பூக்களுக்கு
நீ
வாசனை வகுப்பு எடுத்திருப்பாய்.
சொல்லவில்லையே..
காதலுக்கு
வார்த்தைகள் முக்கியமில்லை.
கல்யாணத்துக்கு
மௌனம் முக்கியமில்லை என்று
வார்த்தையில்லாமல் சொல்லிவிட்டுச்
செல்கிறாய் நீ..
இப்போதும் என்னிடமிருந்து
எழுத்துக்கள் கூட எழவில்லை.
உன் மொழி பெயர்ப்புக்காய்
ஒரு துளி
விழிநீர் மட்டும் விழுகிறது.
