கடந்த நிமிடம்
கிழித்த கடற்கரைச் சுவடை
மணல்க் காற்று மூடும்
அவசர உலகம் இது.
தாய்ப்பாலின்
சுவை மறந்த
தவழ்தல் காலம்.
பொம்மைகளோடு மட்டுமே
கும்மியடிக்கும்.
முழங்கால்கள் அடிக்கடி
இரத்தப் பொட்டிடும்
மழலையின் மண்வீதி,
பொம்மைகளோடும் கொஞ்சம்
சண்டையிடும்.
அரை டியாயர்
ஆரம்பப்பள்ளி,
அணிலோடும், அருவியோடுமே
அதிகம் உரையாடும்.
பருவம் உரசும்
பதின் வயதுகளில்
அணில் பற்றி ஆராய
தரம் தெரியாக் கனவுகள்
நேரம் தருவதில்லை
கல்லூரி வாழ்க்கை
கற்களைக் கவிதையாகவும்,
பூக்களைப் புத்தகமாகவும்,
புற்களைப்
பல்களைக்கழகமாகவும்,
கண்டு மகிழும் காளை வயது.
காதல் என்பதே
காயத்துக்கான அனுமதிச்žட்டு
அதை
அண்டவிடமாட்டேன்.
அவ்வப்போது காதுகளில்
வார்த்தைகள் குடையாமலில்லை.
எது தான்
நிலையாமை மீறிய
நிதர்சனம் ?
நீ
இருகாலில் பதியனிடப்பட்ட
மனித மரம்.
மரமாய் வளர்ந்துவிட்டபின்னும்
அந்த
முதல் முளையும்,
சிறு விதையும்,
ஞாபகங்கள்
ஞாபகப்படுத்திப் பார்க்கும்
எல்லைக்கு அப்பால் சிரித்து நிற்கிறதே ?.
மறக்க இயலாத
உணர்ச்சிகளின் ஊர்வலம் தான்
காதல் !
கவலைகளின்
கடப்பாரை தான் காதல் எனும்,
கவலை – களை.
ஓராயிரம் உணர்வுகளை
ஒற்றைப்புள்ளியில் ஊற்றித் தருதே
காதல் !
உனக்குள் ஒழுகும்
உன்னை வடித்து
உருவமிட்டு
உருவாக்குகிறதே காதல்.
நீ
மறந்தவற்றை நினைவில் நிறுத்தி,
நினைவில் நின்றவற்றின்
களை பிடுங்குமே காதல்.
மரணத்தின் படுக்கை
காதலைக்
காதலிக்காதவனுக்காய்
காத்திருக்கிறதாம்.
இன்னொரு பிறவியில்
நீ
பெண்ணில்லாக் கிரகத்தில்
பிறக்கக் கூடும் !!
இப்போதே
ஒருமுறை
காதலும் கற்று மற.
