உங்கள் மகனை
நான்
கடல்களைத் தாண்டி
கடத்திச் செல்லவில்லை.
என் மாங்கல்ய முடிச்சுகளுக்குள்
ஓர்
அன்னைக்கான நேசத்தை
தூக்கிலிடவும் இல்லை.
தாயை
தனித்தீவுக்குள் தள்ளிவிடும்
தலையணை மந்திரங்களும் ஓதவில்லை.
சிறகுகளை விரிக்கும் போதெல்லாம்
சிரிப்புடன் பார்த்து விட்டு,
பிரமிப்புடன்
பறக்கும் போது கால்களைக் கட்டாதீர்கள்.
என் கணவனை
முந்தானைக்குள் முடிச்சிட்டதாகவும்,
படுக்கை அறையில்
ஒப்பந்தங்கள் ஒப்பமிட்டதாகவும்,
கலவரக் கண்களோடு கண்டிக்கிறீர்கள்.
புரிந்து கொள்ளுங்கள்,
எந்த மோகத்தின் மனுக்களும்
தாயின் நேசம் பிரித்து
கூடாரம் கட்டி விட முடியாது.
தராசுத் தட்டுகளில் அளந்து
அளிக்கப் படுவதல்ல அன்பு.
அது
படர்ந்த இதயங்களில்
தொடர்ந்து வீசும் அடர்ந்த காற்று.
கொடுத்ததால் குறைந்துபோகும்
பொருளாதாரக் குறியீடுகளாய்
நிஜமான நேசத்தை
நிறுத்துப் பார்க்காதீர்கள்
வெளியே வெப்பம் வீசும்
பனிப்போர்
நம் வீட்டுப் படிக்கட்டுகளில் எதற்கு ?
மருமகளும் உங்களுக்கு
ஒரு மகள் தானே.
புகுந்த வீட்டின்
பதுங்கு அறைகளுக்குள்
என் தாய் நேசத்தை
வேறு யாரிடம் நான் தேட முடியும் ?
