பிரியமே,
காதலில்
கேள்விகள் எழக் கூடாது
எழுந்தால்
பதில்கள் உள்ளத்தின்
உளறல்களாய் தான் விழும்.
ஏன் என்னை
காதலிக்கிறாய் என்கிறாய்?
வண்ணத்துப் பூச்சிக்கு
வர்ணங்களும்,
இதயத்துக்கு காதலும்
இயல்பாய் வருவது இயற்கையடி.
என்னை எவ்வளவுப்
பிடிக்கும் என்று
எடையிடச் சொல்கிறாய்.
அளவைகளையே அளக்கும்
பாசத்தை அளக்க
எந்த தராசைத் தேடுவேன் ?
எப்போது என்னை
பிடிக்க ஆரம்பித்தது என்கிறாய் ?
முதல் பர்வையில் வந்த
கிளர்ச்சியின் வளர்ச்சிதானடி
இன்றைய என்
கலம் தளும்பும் காதல்.
கடைசி வரை
காதலிப்பாயா என்கிறாய்,
எதன் கடைசி ?
அந்தமில்லா அன்பின் கடைசியா ?
இல்லாத ஒன்றோடு மல்லிடல்
நிழல் யுத்தமல்லவா ?
பிரபஞ்சத்தை பாரேன்
என் பிரியமே.
தாழம்பூவில் தவமிருக்கும்
வாசனை வண்டிடம் உண்டு
காதலின் சுவாசம்.
கிளை கொத்திக் கடக்கும்
கிளிகளின் அலகிலும்,
வலை தொத்திக் கிடக்கும்
மீன்களின் கண்களிலும்,
விலகாத காதல் அகலாமல்.
காதல்,
இயற்கைக்கு இயற்கை
பச்சை குத்திச் சென்ற
பகுத்தறிவு.
இதில்
விடைகளை விடப் பெரிது
உணர்வுகளின் உரையாடல்களே.
பதில்களை விட
எனக்குப் பிடித்ததென்னவோ
பதில் தெரிந்தும்,
பிடிவாதமாய் பல்லிடுக்கில்
நீ கடிக்கும்
பிள்ளைக் கேள்விகளே.
