அவளுக்குள்
ஒரு
கனவு இருந்தது.
கீழ்வானத்தைக் கிழித்துக்
கிளம்பும்
கதிரவனைப் போல
அவளுக்குள் அது நிரம்பியிருந்தது.
பள்ளத்தை நோக்கிப்
பாய்ந்து நிரம்பும்
அருவியைப் போல அதன்
ஆர்வம் அவளை எரித்தது !
அவளது கனவு
ஒரு
அழகான கனவு !
அவளுடைய கனவில்
வஞ்சனையின்
அம்சம் கலந்திருக்கவில்லை.
அவளுடைய கனவு
யார் முதுகையும்
குத்தவில்லை.
அவளுடைய கனவில்
வன்முறையோ
மதவெறியோ
ஊறியிருக்கவில்லை.
அதை
இலட்சியம் என
பச்சை குத்தி வைத்தாள்
கனவு
என
வானவில் ஊற்றி வளர்த்தாள்.
அவளுக்குத் தெரியவில்லை !
அவள்
குழந்தை தானே !
கனவு காண்பதற்கு
தகுதிச் சான்றிதழ் வேண்டும்
என்பதும்,
இலட்சியங்கள் கொள்ள
இலட்சங்கள் தேவை என்பதும்
அவளுக்குத் தெரியவில்லை
பாவம்
அவள் குழந்தை தானே !
ஏழைகள்
வாய் திறந்தால்
தோட்டாக்கள் நிரப்புகின்றன.
கனவுகள் திறந்தால்
தூக்குக் கயிறுகள் தொங்குகின்றன.
அவளுக்குள்
ஒரு கனவு இருந்தது.
கனவை விதைத்த
குற்றத்துக்காக
தலையிலடித்துக் கதறுகிறான்
ஒரு தந்தை.
இலட்சியத்தை விதைத்த
பாவத்துக்காய்
படிக்கட்டில் பதறுகிறாள்
ஒரு தாய்.
யாருக்கும் தெரியவில்லை
கனவுகளுக்கும்
வரிவிதிக்கும் இந்த யுகத்தில்
சுவாசிப்பதற்குக் கூட
பதுங்கு குழிகளே தேவைப்படுகின்றன.
தோட்டாக்களையும்
தூக்குக் கயிறுகளையும்
பூஜிக்கும்
எதிரிகளின் பாசறையில்
மனித நேயம்
இரத்தம் வடியும் கழுத்தோடு
பிணவறையில்
இறுதி மூச்சை இழுக்கிறது.
நாளை விடியும்
எனும் கனவு
நம்பிக்கையற்ற நம்பிக்கையாய்
நடு வீதியில்
தெருநாய்களோடு அலைந்து திரிகிறது.
*