முன்பெல்லாம் கோடை விடுமுறை என்றால் பொட்டியைக் கட்டிக்கொண்டு தூரத்தில் இருக்கும் பாட்டி வீட்டுக்கோ, மாமா வீட்டுக்கோ சென்று கொட்டமடிப்பது தான் உலக மகா சந்தோசமாய் இருந்தது. உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளவும், படித்துப் படித்து சோர்ந்து போயிருக்கும் மூளையை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணவும் இந்த விடுமுறை நாட்கள் பயன்பட்டன.
இப்போதெல்லாம் விடுமுறையின் அர்த்தமே தலைகீழாய் மாறிவிட்டது. விடுமுறையை பிஸினஸை வளர்த்துக் கொள்வதற்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாக நிறுவனங்கள் நினைக்கின்றன.
‘க்ரேஷ் கோர்ஸ்” என்பது ஃபேஷன் வார்த்தையாகி விட்டது. சம்மர் டிராயிங் கோர்ஸ், சம்மர் கராட்டே, சம்மர் கிரிக்கெட், சம்மர் கிட்டார் என எங்கும் திடீர் பயிற்சி நிலையங்கள் படையெடுப்பது இந்த காலத்தில் தான். எப்படியாவது தங்கள் பிள்ளைகளை சகலகலா வல்லவர்களாக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு இவையெல்லாம் வசீகர அழைப்புகள். நிறுவனங்கள் அலேக்காக ஒரு பெரிய தொகையையும் சுருட்டிக் கொண்டு கடமைக்கு நாலு விஷயங்களைச் சொல்லிக் கொடுத்து விட்டு கிளம்பி விடுவார்கள்.
இன்னும் சிலருக்கு கோடை விடுமுறை தான் நீட், நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றுக்கான காலம். ‘ஸ்கூல் திறந்தா தாண்டா நமக்கெல்லாம் நிம்மதி’ என குழந்தைகளை அலற வைக்கின்றன இப்போதைய கோடைகாலங்கள் என்பது தான் கசப்பான உண்மை !
கொஞ்சம் நிதானியுங்கள். குழந்தைகளுடைய உடலுக்கும், மனதுக்கும், மூளைக்கும் இடையே சரியான சமநிலை வேன்டும். யானைகளுக்கே புத்துணர்ச்சி முகாம் வைக்கும் நாம், குழந்தைகளுக்கு வைக்காமல் இருப்பது பிழையல்லவா ?
இந்த கோடை விடுமுறையை, விடுமுறையின் உண்மையான அர்த்தத்துக்கு கூட்டிச் செல்வோம். அது குழந்தைகளின் கல்விக்கும், உடலுக்கும் உற்சாகமூட்டும் !
1. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது ! குழந்தைகள் நமது மண்ணின் வளத்தையும், தன்மையையும் நமது உண்மையான வாழ்க்கை முறையையும் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அவர்களை தமிழகத்தின் ஏதோ ஒரு குக் கிராமத்துக்குக் கூட்டிச் செல்லுங்கள் !
எளிய மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது. அவர்கள் எவ்வளவு கள்ளம் கபடமில்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி விவசாயம் செய்கிறார்கள் போன்றவையெல்லாம் அவர்கள் நேரடியாக கண்டு உணரட்டும்.
அவர்களுடைய மனதில் விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும், அவர்களுடைய வாழ்க்கை முறை பற்றியும் ஒரு நல்ல புரிதல் கிடைக்கும்.
2. மாட்டு வண்டியில் பிள்ளைகளை கூட்டிச் செல்லுங்கள். வயல் வரப்புகளில் ஆடுகளோடு ஓடி விளையாடச் செய்யுங்கள். கிராம்த்து வீடுகளின் கொல்லைப்புறங்களில் கோழிகளோடு ஓடி விளையாட வையுங்கள். பாதுகாப்பான நீர்நிலைகளுக்குக் கூட்டிச் சென்று நீச்சலடிக்கக் கற்றுக் கொடுங்கள். ஓடைகளில் மீன்களைப் பிடிக்கப் பழக்குங்கள்.
இவையெல்லாம் குழந்தைகளை முற்றிலும் புதிய உலகம் ஒன்றுக்குள் அழைத்துச் செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை !
3. நமது ஊருக்கு அருகிலேயே உள்ள ஏதேனும் வரலாற்று இடங்களுக்கு பிள்ளைகளைக் கூட்டிச் செல்லுங்கள். பாரதியார் பிறந்த இடம், கட்டபொம்மன் வாழ்ந்த இடம் இப்படி ஏதாவது. அப்படி போவதற்கு முன் குழந்தைகளுக்கு போகின்ற இடத்தையும், அந்த நபரின் வரலாற்றையும், அந்த இடத்தின் முக்கியத்துவத்தையும் விளக்குங்கள். அப்போது அவர்கள் அந்த இடத்துக்குச் செல்லும் போது அதை உணரவும், உள்வாங்கிக் கொள்ளவும் வசதியாக இருக்கும்.
நமது ஊரிலுள்ள வரலாற்றுப் பின்னணிகளையும், நமது என்பதையும் நமது மண்ணின் சிறப்பையும் குழந்தைகள் அறிந்திருப்பது அவசியம்.
4. உறவுகளால் அமைவது தான் வாழ்க்கை. நான்கு சுவர்களுக்குள், செயற்கைக் குளிருக்குள் முடிந்து போவதல்ல ! எனவே தூரத்துச் சொந்தக்காரர்கள், நெருங்கிய உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்று நேரம் செலவிடுவதும், அவர்களை வீட்டுக்கு அழைத்து நேரம் செலவிடுவதும் சிறப்பானது !
வாழ்க்கையின் உன்னதம், உறவுகளின் வலிமையில் தான் இருக்கிறது என்பதை குழந்தைகள் உணரவேண்டியது அவசியம்.
5. டிஜிடல் உலகத்தை விட்டு இந்த கோடை விடுமுறையில் குழந்தைகளை வெளியே கொண்டு வாருங்கள். மொபைலையோ, டேப்லெட்டையோ, லேப்டாப்பையோ, தொலைக்காட்சியையோ பார்த்துக் கொண்டே விடுமுறையை அழிக்கும் கலாச்சாரத்தை மாற்றுங்கள்.
டிஜிடல் தவிர்த்த எந்த விளையாட்டையும் ஊக்கப்படுத்துங்கள்.
6. குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுங்கள். பெற்றோரோடு அதிகம் இணைந்திருக்கும் பிள்ளைகள் நல்ல சமூக மதிப்பீடுகளையும், பாதுகாப்பு உணர்வையும் கொண்டிருக்கும் என்கின்றன ஆய்வுகள். அத்தகைய நல்ல ஒரு ஆரோக்கிய உலகுக்குள் குழந்தைகளைக் கூட்டிச் செல்லுங்கள்.
குழந்தைகளோடு குழந்தையாய் விளையாடுங்கள். மண்ணில் புரளுங்கள். படம் கிறுக்குங்கள், தோட்டத்தில் செடி வைத்து பொழுதைப் போக்குங்கள். எதை செய்கிறீர்கள் என்பது உங்கள் விருப்பம், ஆனால் அதை குழந்தைகளோடு இணைந்து செய்யுங்கள்.
7. மனிதநேயத்தைக் குழந்தைகளுக்குள் வளரச் செய்யுங்கள். நம்மை விட நலிந்த நிலையில் நிறைய மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவது சக மனிதனாக நம்முடைய தார்மீகக் கடமை என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள்.
ஒரு மனநலம் பாதிக்கப்பட்டோர் விடுதி, ஒரு குழந்தைகள் காப்பகம், ஒரு முதியோர் இல்லம் போன்றவற்றுக்கு குழந்தைகளைக் கூட்டிச் செல்லுங்கள். குறைந்தபட்சம் இரண்டு மணி நேரங்களை அவர்களோடு செலவிடுங்கள்.
இருப்பதைக் கொண்டு ஆனந்தமாய் இருப்பது எப்படி என்பதையும் பிள்ளைகள் கற்றுக் கொள்வார்கள். பிறருக்கு உதவ வேண்டும் எனும் சிந்தனையையும் பெற்றுக்கொள்வார்கள்.
8. ஒரு நூலகத்துக்கு பிள்ளைகளைக் கூட்டிச் செல்லுங்கள். இன்றைய டிஜிடல் உலகில் நூலகங்கள் அழிந்து வரும் உயிரினங்கள் போல ஆகிவிட்டன. தேடிப்பிடித்து ஒரு லைப்ரரிக்குக் கூட்டிச் செல்லுங்கள். நூலகம் எப்படி இயங்குகிறது, எப்படி நமது வாழ்க்கையை நூல்கள் மாற்றுகின்றன போன்றவற்றை சுவாரஸ்யமாய் விளக்குங்கள்.
நல்ல நூல்களை அறிமுகம் செய்யுங்கள். அவர்களுக்குப் பிடித்த நூல்களை அவர்களோடு சேர்ந்து படியுங்கள். ரசியுங்கள்.
9. குழந்தைகளுக்கு குடும்பப் பொறுப்புகளைக் கொஞ்சம் கற்றுக் கொடுக்கும் காலமாக இது இருந்தால் இன்னும் சிறப்பு. உதாரணமாக குழந்தைகளோடு சேர்ந்து சமைக்கலாம். குழந்தைகளை அழைத்துக் கொண்டு கடைவீதியில் நடக்கலாம். பொருட்களின் விலையை உணரவைக்கலாம்.
அருகிலிருக்கும் போஸ்ட் ஆபீஸ் கூட்டிச் சென்று ஒரு காலத்தில் தபால் துறை எப்படி நமது வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருந்தது என்பதை விளக்கலாம்.வீட்டை சுத்தப்படுத்துவது, அழகுபடுத்துவது போன்ற வேலைகளில் அவர்களை ஈடுபடுத்தலாம்.
இவையெல்லாம் அவர்களுக்கு சுவாரஸ்யம் தரும் வகையில் செய்ய வேண்டும். ‘வீட்டை கிளீன் பண்ணுடா’ என்று சொல்லாமல், ‘வா… அந்த அலமாராவை உனக்கு புடிச்ச மாதிரி கிளீன் பண்ணி அடுக்கி வைப்போம்’ என சொல்லுங்கள். இணைந்து செய்வதை குழந்தைகள் ரசிக்கும், இல்லையேல் வெறுக்கும்.
10. குழந்தைகளின் தனித் திறமைகள் என்ன என்பதைக் கண்டறிந்து அதை புடம் போட இந்தக் காலத்தைப் பயன்படுத்தலாம். வரைவது அவர்களின் விருப்பமெனில் அதற்கான உபகரணங்கள் வாங்கி கொடுத்து வரைய வைக்கலாம்.
எழுதுவது அவர்களுடைய விருப்பமெனில் அவர்களுக்குப் பிடித்த விஷயங்களை எழுத வைக்கலாம். இப்படி அவர்களுடைய விருப்பம் எதுவாக இருந்தாலும் அதற்கான களத்தையும், வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுங்கள்.
ஒரு பிளாக் ஆரம்பித்து அவர்களுடைய படைப்புகளை அதில் இணைத்து வைப்பது அவர்களுடைய கலை ஆர்வத்தை ஊக்கப்படுத்தும்.
கோடை காலத்தை செலவிட ஏகப்பட்ட வழிகள் உண்டு. உங்கள் விருப்பப்படி நீங்கள் உங்கள் விடுமுறையைச் செலவிடலாம். ஆனால் அது குழந்தைகளுக்கு டிஜிடல் விலகிய, மனிதம் நெருங்கிய, உற்சாகம் பொங்கிய, உறவுகள் துலங்கிய கோடையாய் இருக்கட்டும் ! விடுமுறை இனிதாகட்டும் !
*