Quantcast
Channel:
Viewing all articles
Browse latest Browse all 490

ஜூஸ் ஜேக்கிங் !

$
0
0

ஜூஸ் ஜேக்கிங் !

Image result for juice jacking

உங்கள் வீட்டை கொள்ளையடிக்க ஒருவர் ரோட்டில் நின்று நோட்டம் இடுகிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அவரை வீட்டுக்குள் அழைத்து, ‘வீட்டை கொஞ்ச நேரம் பாத்துக்கங்க, ஒரு மணிநேரம் வெளியே போயிட்டு வரேன்’ என சொல்வீர்களா ? அப்படிச் செய்தால் ஒரு மணி நேரம் கழிந்து நீங்கள் வரும் போது வீடு சுத்தமாக திருடப்பட்டிருக்கும் இல்லையா ? அதே போன்ற ஒரு விஷயம் தான் இந்த ஜூஸ் ஜேக்கிங் விஷயம்.

முன்பெல்லாம் செல்போனை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒரு வார காலத்துக்கு சார்ஜ் நிற்கும். இப்போதெல்லாம் அப்படி இல்லை. ஸ்மார்ட்போன்களின் காலம் சார்ஜ் செய்யப்பட்ட போனை சில மணிநேரங்களிலேயே “பேட்டரி காலி” எனும் நிலைக்கு தள்ளி விடுகிறது. மூர்ச்சையாகிக் கிடக்கும் போனை மறுபடியும் சார்ஜ் செய்தால் தான் பயன்படுத்த முடியும் எனும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

இதற்காக விமான நிலையங்கள், சில உணவகங்கள், சில மால்கள் போன்றவற்றில் இலவச பேட்டரி சார்ஜ் நிலையங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். அதாவது ஒரு இடத்தில் நிறைய சார்ஜர்கள் இருக்கும், உங்கள் போனுக்கு செட் ஆகும் சார்ஜரைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

அப்பாடா… சார்ஜ் பண்ண ஒரு இடம் கிடச்சுடுச்சு ! என சிலாகித்து பலரும் இந்த வசதியைப் பயன்படுத்துவதுண்டு. இவை ஆபத்தானவை என்பது தான் ஜூஸ் ஜாக்கிங் சொல்லும் செய்தி ! இத்தகைய இடங்களில் சார்ஜ் செய்யப்படும் போன்களிலுள்ள தகவல்கள் திருடப்படலாம். போனில் வைரஸ் மால்வேர்கள் நுழைக்கப்படலாம் ! என அதிர்ச்சியளிக்கின்றன ஆய்வுகள். அதைத் தான் ‘ஜூஸ் ஜாக்கிங்’ என்கிறார்கள்.

அதென்ன பெயர் ஜூஸ் ஜாக்கிங் ? அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் சார்ஜை ஜூஸ் என்பார்கள். போனில் சார்ஜ் இல்லை என்றால் ஜூஸ் இல்லை என்பார்கள். சார்ஜ் வேண்டுமென்றால் கொஞ்சம் ஜூஸ் வேணும் என்பார்கள். ஜாக்கிங் என்றால் திருடுவது. போன் சார்ஜ் போடும் நேரத்தில் நம்முடைய தகவல்களைத் திருடுவதையோ, திருட்டுத்தனமாய் நமது போனுக்குள் நுழைவதையோ தான் “ஜூஸ் ஜாக்கிங்” என்கிறார்கள்.

இரண்டு விதமான திருட்டுகள் இதில் நடக்கலாம். ஒன்று, சார்ஜ் போடும் நேரத்தில் நமது போனிலுள்ள தகவல்களை அப்படியே காப்பியடிப்பது. இதில் நாம் சேமித்து வைத்திருக்கும் வங்கிக் கணக்கு விஷயங்கள், கான்டாக்ட் தகவல்கள், படங்கள், டாக்குமென்ட்ஸ் எல்லாம் திருடப்படலாம். திருடப்படும் தகவல்களின் அடிப்படையில் நமக்கு சிக்கல்கள் வரலாம்.

இன்னொன்று நமது கணினியில் ரகசிய மால்வேர் மென்பொருளை இந்த இடங்கள் பதிவிறக்கம் செய்து வைக்கலாம். நம்மை அறியாமலேயே நம்மைக் கண்காணிக்கும் ரகசிய உளவாளிகளாக இது நமக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும்.

எது எப்படியெனினும், இந்த தாக்குதல் நமக்கு தலைவலியைத் தரக்கூடிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

இந்த சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு என்ன வழி ?

எளிமையாகச் சொல்வதென்றால், இத்தகைய ‘பொது இட சார்ஜ் நிலையங்களில் நமது போனை இணைக்காமல் இருப்பது தான்’ ஆகச் சிறந்த வழி. அது பலி ஆடு தானாகவே போய் வெட்டுபவன் முன் கழுத்தைக் கொடுப்பதற்கு சமம். சரி, ஒருவேளை சார்ஜ் பண்ணியே ஆகவேண்டும், வேற வழியே இல்லை என்றால் என்ன செய்வது ? பதட்டமடையத் தேவையில்லை, சில விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.

1. தவிர்க்க முடியாத சூழல்களில், இத்தகைய இடங்களைப் பயன்படுத்த வேண்டி வந்தால் உங்களுடைய போனை ‘ஆஃப்’ செய்து வையுங்கள். முழுமையாக அணைத்து வைக்கப்பட்டிருக்கும் போனில் மென்பொருட்களை இறக்கி வைப்பதோ, அல்லது தகவல்களை திருடுவதோ இயலாத காரியம்.

2. ஒருவேளை போனை ஆஃப் பண்ண முடியாத சூழல் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். மிக மிக அவசரமான சூழல். போன் செயல்பாட்டிலேயே இருக்க வேண்டுமெனில் அதை குறைந்த பட்சம் ‘லாக்’ செய்து வையுங்கள். லாக் செய்யப்பட்ட போன்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு கொஞ்சம் கம்மி. எக்காரணம் கொண்டும் போனை சார்ஜ் போட்டுக்கொண்டு திறந்தும் வைக்கவே வைக்காதீர்கள்.

3. ‘பவர் பேங்க்’ எனப்படும் சார்ஜ் செய்யப்படும் உபகரணத்தை கையில் வைத்திருந்தால் அவசர காலங்களில் பயனளிக்கும். பொது இடங்களில் இத்தகைய பவர் பேங்க்களை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளலாம் ஆபத்து இல்லை.

4. வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் போதே போனை முழுமையாக சார்ஜ் செய்து கொண்டு செல்லுங்கள். இதனால் அதிக நேரம் உங்களுக்கு போன் கைகொடுக்கும். வீடுகள், அலுவலகங்கள் போன்றவையே நமக்குத் தெரிந்த பாதுகாப்பான இடங்கள்.

5. எங்கே போனாலும் கூடவே உங்கள் ‘பவர் கார்ட்’ கையோடு கொண்டு போங்கள். யூ.எஸ்.பி சார்ஜிங் நிலையங்கள் தான் நமக்கு ஆபத்தானவை. பொதுவான மின் இணைப்புகளில் உங்களுடைய சார்ஜரை வைத்து சார்ஜ் செய்து கொள்ளுவதெல்லாம் ஆபத்தற்றவை. அதை நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

6. இப்போதெல்லாம், ‘சார்ஜ் செய்ய மட்டும்’ எனும் அடைமொழியுடன் சார்ஜர்கள், யூ.எஸ்.பி கார்ட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றின் மூலமாக தகவல்களை கடத்த முடியாது. அத்தகைய வயர்களை நீங்கள் வாங்கிப் பயன்படுத்தலாம். நம்பிக்கைக்கு உத்தரவாதம். இதை எப்படி உருவாக்குகிறார்கள் ? சிம்பிள் ! சார்ஜ் செய்யும் பின்னில் சில இணைப்புகள் தகவல் கடத்தவும், சில இணைப்புகள் மின்சாரம் கடத்தவும் இருக்கும். ‘சார்ஜ் மட்டும்’ எனும் வயர்களில், தகவல் கடத்தும் இணைப்புகள் கட் பண்ணப்பட்டிருக்கும். அவ்வளவு தான்.

7. உங்கள் போனிலுள்ள பேட்டரியைக் கழற்றி மாட்ட முடியுமெனில், எக்ஸ்ட்ரா பேட்டரி ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஒன்று தீரும்போது இன்னொன்றைப் பயன்படுத்திக் கொள்ள இது உதவியாக இருக்கும். ஜூஸ் ஜாக்கிங் தாக்குதல் நேருமோ எனும் பயமும் இல்லை.

8. தேவையற்ற ஆப்களை அழித்து விடுங்கள். பல ஆப்கள் நமது போனில் விழித்திருந்து நமது போனின் பேட்டரி விரைவில் காலியாக காரணமாய் இருக்கின்றன. அத்தியாவசியமான, அங்கீகரிக்கப்பட்ட ஆப்களை மட்டுமே வைத்திருந்தால் பேட்டரி அதிக நேரம் தாங்கும். தேவையற்ற ஆப்களை அழிப்பது நமது போனின் பாதுகாப்புக்கும் மிக மிக அவசியம். இலவசமாய்க் கிடைக்கிறது என இறக்கி வைக்கும் மென்பொருட்களுக்காய் நாம் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டி வரலாம்.

9 தேவையற்ற நேரங்களில் புளூடூத், வைஃபை, டேட்டா போன்றவற்றை அணைத்தே வைத்திருந்தால் பேட்டரி ரொம்ப நேரம் விழித்திருக்கும் என்பது சர்வ நிச்சயம். டேட்டாவை ஆஃப் பண்ண முடியாது எனும் சூழல் இருந்தால் குறைந்த பட்சம் புளூடூத் போன்றவற்றை அணைத்தே வைத்திருங்கள். இப்போதெல்லாம் ‘ஹெல்த் வாட்ச்’, கார் ஆடியோ, ஹெட்போன் போன்றவை புளூடூத்துடன் எப்போதும் இணைக்கப்பட்டிருப்பதால் பேட்டரி விரைவில் தீர்ந்து விடுகிறது.

10 தகவல் பரிமாற்றத்தைத் தடுக்கும் பாதுகாப்பு கருவிகளைப் பயன்படுத்தலாம். சிங்க்கார்ப் போன்ற நிறுவனங்கள் சில பாதுகாப்பு சாதனங்களை விற்பனை செய்கிறது. அதில் ஒன்று யூ.எஸ்.பி காண்டம். இந்த குட்டி அடாப்டரில் நமது யூஎஸ்பி கேபிளை சொருகினால் அது தகவல் பரிமாற்றத்தை தடுக்கும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், ஆபத்துகளை அறிந்து கொள்வது தான் எச்சரிக்கையாய் இருக்க நம்மை தயாராக்கும். பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் சார்ஜ் நிலையங்கள் ஆபத்து நிலையங்களாய் மாறலாம் எனும் எச்சரிக்கை உணர்வு நமக்கு எப்போதும் இருக்கட்டும். மேலே சொன்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனதில் வைத்திருப்போம். ந்மது நிம்மதியை கைவிடாதிருப்போம்.

*

தினத்தந்தி


Viewing all articles
Browse latest Browse all 490