Quantcast
Channel:
Viewing all articles
Browse latest Browse all 490

3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது ?

$
0
0

Image result for 3d

இது 3D காலம் என்று சொல்லலாம் தப்பில்லை. அவதார் என்றொரு ஆங்கிலத் திரைப்படம் வந்தாலும் வந்தது, உலகெங்கும் சட்டென 3டி ஜூரம் பற்றிக் கொண்டது. புதிது புதிதாய் 3டி படங்கள் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை வெளியாகிக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு பழைய 2D படங்களைத் தூசு தட்டி 3D யாக மாற்றும் பணிகளும் ஜகஜோராக நடந்து கொண்டிருக்கின்றன.

ஆயிரம் தான் இருந்தாலும், முதன் முதலாக 3டி படம் பார்க்கும் அனுபவம் ரொம்பவே அலாதியானது? திரையிலிருந்து சட்டென நம்மை நோக்கி நீளும் ஒரு கை ஐஸ்கிரீம் தரும். அல்லது நம்மீது ஏதோ வந்து விழுவது போல பயமுறுத்தும். மந்திரவாதியின் சாம்பல் நம் முகத்தில் மோதுவது போல் வரும். கையை எடுத்துச் சட்டெனத் தடுப்போம் ! விட்டால் அடுத்த சீட்காரரை அடித்தே கீழே தள்ளுவோம். காரணம் காட்சிகள் அவ்வளவு தத்ரூபமாக இருப்பது தான் ! அவ்வளவு எளிதில் மைடியர் குட்டிச் சாத்தானை மக்கள் மறக்கமாட்டார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

இந்த 3D எப்படிச் சாத்தியமாகிறது ? சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் 3D என்பது வேறொன்றுமில்லை நமது கண்களை ஏமாற்றும் ஒரு தந்திரம். ஆச்சரியப்படாதீர்கள். 2D யில் உள்ள திரைப்படத்தை 3D போன்ற தோற்றத்தில் தர சினிமாக் கருவிகளும், கண்ணாடிகளும் உதவுகின்றன. அதை எவ்வளவு தத்ரூபமாகத் தருகிறார்கள் என்பதில் தான் அந்த தொழில் நுட்பத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது.

3டி சமீபகாலக் கண்டுபிடிப்பு எனும் நினைப்பு உங்களிடம் இருந்தால் அந்த நினைப்பை இந்த வினாடியே குழி தோண்டிப் புதைத்து விடுங்கள். அதரப் பழசான விஷயம் அது ! பிரிட்டனிலுள்ள திரைப்பட இயக்குனர் வில்லியம் பிரீஸ் கிரீன் 1980ல் இதற்கான காப்புரிமை விண்ணப்பத்தைக் கொடுத்தார். அவருடைய தயாரிப்பு ஸ்டீரியோஸ்கோப் வகையைச் சார்ந்தது. குழந்தைகள் கண்களில் வைத்துப் பார்க்கும் ஒரு குட்டிக் கருவியைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரே மாதிரியான இரண்டு பிலிம்கள் இருக்கும், ஒரே நேரத்தில் இரண்டு கண்களாலும் அதைப் பார்க்கும் போது உள்ளுக்குள் 3டி படம் தெரியும் ! அது தான் ஸ்டீரியோஸ்கோப்பின் வடிவம். இதற்கு இரண்டு படங்களை அருகருகே திரையிட வேண்டிய தேவை இருந்தது !

அந்த கான்சப்டை அப்படியே அலேக்காகத் தூக்கி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஃப்ரடரிக் எக்வீன் என்பவர் ஒரு கேமரா கண்டுபிடித்து உடனே அதற்குக் காப்புரிமையும் வாங்கினார். இதில் 4.45 சென்டீ மீட்டர் இடைவெளியில் இரண்டு லென்ஸ்கள் இருக்கும். அப்புறம் மீண்டும் ஒரு இடைவெளிக்குப் பிறகு 1915 ஜூன் 10ம் தியதி நியூயார்க்கிலுள்ள ஆஸ்டர் திரையரங்கில் முப்பரிமாணத் திரைபடம் சோதனை ஓட்டம் போட்டது. அதை நடத்தியவர்கள் எட்வின் பார்டர் மற்றும் வில்லியம் வேடல் எனும் இருவர்.

அந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு முடியப் போகிறது. ஆனால் அப்போது இது மிகப்பெரிய பணச்செலவு, திரையிட ஏகப்பட்ட கஷ்டம் எனும் செயல்முறை சிக்கல்களால் முதுகொடிந்து கிடந்தது.  1922ம் ஆண்டு செட்பம்பர் 27ம் தியதி டிக்கெட் வாங்கிப் படம் பார்க்கும் உலகின் முதல் 3டி சினிமா வந்தது. அதன் பெயர் “த பவர் ஆஃப் லவ்” (The Power of Love). அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள அம்பாசடர் ஹோட்டல் திரையரங்கில் இது வெளியானது.

3டி ஒரு கமர்ஷியல் சினிமா சரக்காக மாறியது 1950ல் தான். அப்போதும் அது சரசரவென பற்றிப் படரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வேர் விட ஆரம்பித்தது. அந்தக் காலகட்டத்தில் வால்ட் டிஸ்னி போன்ற பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனங்களெல்லாம் 3டி தயாரிப்பில் குதித்தன. எனவே 3டி என்பது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. 1950க்கும் 1953க்கும் இடைப்பட்ட காலத்தை “3டியின் பொற்காலம்” என்கிறார்கள். ஆனால் அதன்பின் 3டி மீண்டும் படுத்தது !

இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்தது தான் அந்த சோர்வுக்குக் காரணம். இரண்டு படங்கள் தயாரிக்க வேண்டும். இரண்டும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஒரே வேகத்தில், கொஞ்சமும் மாற்றம் இல்லாமல் ஓட வேண்டும். தனி ஸ்பெஷல் திரை வேண்டும். ஏகப்பட்ட பணச் செலவு என அடுக்கடுக்கான காரணங்கள் தான் அந்த தொய்வுக்குக் காரணம்.

1960ல் 3டி தொழில் நுட்பத்தின் ஒரு புது புரட்சி தோன்றியது. அதுவரை 3டி படம் போட வேண்டுமெனில் இரண்டு பிலிம் ரோல், இரண்டு புரஜக்டர் என இருந்த நிலை மாறி ஒரே பிலிம் ரோலில் இரண்டு படங்களை பதிவு செய்யும் முறை அப்போது தான் அறிமுகமானது ! ஸ்பேஸ் விஷன் ( Space vision) 3டி எனும் புது அடைமொழியுடன் அது வந்தது ! இது ஏகப்பட்டத் தலைவலிகளை ஒழித்துக் கட்டி 3டி படங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியையே அளித்து விட்டது !

1980களுக்குப் பின் தான் 3டி சர சரவென வளரத் துவங்கியது. 1985க்கும் 2003க்கும் இடைப்பட்ட காலத்தை 3டியின் மறுபிறப்புக் காலம் என்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில் நிறைய முப்பரிமாணப் படங்கள் வந்து பரபரப்பூட்டின.

இருந்தாலும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தான் அப்போதும் 3டி நுட்பத்தால் அசரடித்தவர். 2003ல் அவர் “கோஸ்ட் ஆஃப் த அபைஸ்” (Ghost of the Abyss) எனும் படத்தை வெளியிட்டார். ரியாலிடி கேமரா மூலம் எடுக்கப்பட்ட அந்தப் படம் 3டி நுட்பத்தில் மிரட்டியது.  அதற்குப் பிறகு அவர் “அவதார்” மூலம் திரையுலகையே புரட்டிப் போட்டது நாம் அறிந்த விஷயம் தான் ! இப்போது ஏறக்குறைய எல்லா ஹாலிவுட் அனிமேஷன், ஃபேன்டஸி போன்ற படங்களெல்லாம் 3டியில் தான் வருவேன் என முரண்டு பிடிக்கின்றன.

முதலிலேயே சொன்னது போல, 3டி திரைப்படங்கள் முப்பரிமாணத்தில் வருவதில்லை. இரண்டு பரிமாண படங்களை முப்பரிமாணம் போல மாற்றிக் காட்டும் வித்தையைச் செய்கின்றன. இலக்கியப் பிரியர்கள் இதை, காட்சி மயக்கம் அல்லது தோற்றப் பிழை என்று கூட அழைத்துக் கொள்ளலாம்.

அனகிலிப் (Anaglyph) என்பது இதன் ஆரம்ப கால வகை. இன்றும் கூட இது அச்சு மீடியாவில் வழக்கத்தில் உண்டு. சிவப்பு மற்றும் நீலம் ( முழுமையான நீலம் அல்ல) நிறங்களில் படங்களை ஒன்றன் மீது ஒன்றாக எடுத்து, அதை ஸ்பெஷல் கண்ணாடி மூலம் பார்ப்பது. அந்த ஸ்பெஷல் கண்ணாடியில் ஒரு கண்ணில் சிவப்பு, ஒரு கண்ணில் நீலம் இருக்கும். அவை குறிப்பிட்ட நிறத்தில் வரையப்பட்டுள்ள படத்தை முதன்மைப்படுத்தி மற்றவற்றை இருட்டாக்கும். ஒரு கண் வழியாக ஒரு ஒரு அடுக்கு மட்டுமே தெரியும். மற்ற அடுக்கு அடுத்த கண்ணில் தான் தெரியும். இப்படிப் பிரித்துக் காட்டும் போது முப்பரிமாண தோற்றம் உருவாகும் !

3டி டிவி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களே ! அதில் அடிப்படையாக இயங்கிக் கொண்டிருந்த நுட்பமும் இது தான். இப்போது பெரும்பாலான தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்கள் இந்த வழக்கத்தை விட்டு “போலராய்ட்” வகைக்குள் நுழைந்து விட்டார்கள்.

போலராய்ட் ? ஆம், அது தான் அடுத்தகட்ட வளர்ச்சி. 1950களுக்குப் பிறகு இது தான் பாப்புலர் 3டி நுட்பம். நீங்கள் சமீப காலத்தில் ஏதேனும் 3டி படம் தியேட்டரில் பார்த்திருந்தீர்களெனில் நிச்சயம் இந்தத் தொழில் நுட்பத்தில் தான் பார்த்திருப்பீர்கள். இதில் “போலராய்ட்” பில்டர்கள் மூலம் படம் திரையிடப்படும். இதிலும் இரண்டு படங்கள் ஒன்றன் மீது ஒன்றாக விழும். அதை போலராய்ட் கண்ணாடிகள் மூலம் பார்க்க வேண்டும். இந்த கண்ணாடிகள் ஒரே மாதிரித் தோற்றமளித்தாலும் உண்மையில் அதன் கோணம் இரண்டு விதமாய் இருக்கும். சாதாரணமாக 45 முதல் 135 டிகிரி வரையிலான மாற்றுக் கோணத்தில் இருக்கும். போலராய்ட் பில்டர் வழியாக வரும் படங்களில் ஒன்றை ஒரு கண்ணும் இன்னொன்றை இன்னொரு கண்ணும் பார்க்கும் படியாக இது அமைந்திருக்கும். இதனால் இரண்டு கண்களும் ஒரே படத்தை வித்தியாசமான கோணத்தில் பார்க்கும் போது நிஜமான ஒரு முப்பரிமாணக் காட்சி கிடைக்கும். ஒரு கண்ணை மூடிவிட்டுப் பார்த்தால் தெளிவில்லாத 2டி தான் தெரியும் !

ஆக்டிவ் ஷட்டர் கிளாஸஸ் (Active shutter glasses) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களா தெரியாது. அது பிரபலமான 3டி கண்ணாடி வகையில் ஒன்று. இது கொஞ்சம் ஸ்பெஷலானது. இதில் படம் திரையிடப்படும் ஸ்கீரினுக்கும், கண்ணாடிக்கும் இடையே ஒரு தொடர்பு எப்போதுமே இருக்கும். நாம் எந்த இடத்திலிருந்து படத்தைப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து நமது கண்ணாடிக்கு ஸ்கிரீன் ஒரு சிக்னலை அனுப்பும். அதன் அடிப்படையில் எந்தக் கண் வழியாக அதிக வெளிச்சம் வரவேண்டும் என்பன போன்ற அடிப்படைத் தகவல்கள் பரிமாறப்படும்.

அடிப்படையில் சொல்லப் போனால் நமது கண்கள் ஒரு பொருளைப் பார்க்கும் போது ஒரே கோணத்தில் பார்ப்பதில்லை. சந்தேகம் இருந்தால் உங்கள் கண்களை மாறி மாறி மூடி மூடித் திறந்து பாருங்கள். உங்களுக்கு முன்னால் இருக்கும் பொருள் அங்கும் இங்கும் அசைவதாய்த் தோன்றும். ஆனால் ஒரே நேரத்தில் அதைப் பார்க்கும் போது தெள்ளத் தெளிவாய் உங்களுக்குத் தெரியும். அப்படித் தெரியவில்லையேல் கண் மருத்துவரைப் பாருங்கள் என்பதே என்னுடைய சிம்பிள் அட்வைஸ்.

இப்போது 3டி தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம். இதுவரை 3டி படம் பார்க்க கண்ணாடி வேண்டும் எனும் கட்டாயம் இருந்தது இல்லையா ? அந்தக் கெடுபிடி இல்லை என்பது தான் புதுமையான நிலை. 3டி டிவியில் அந்த நிலை இப்போது வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளது. விரைவில் திரையரங்குகளிலும் கண்ணாடி இல்லாமலேயே முப்பரிமாணம் பார்க்கும் நிலை உருவாகும். அந்த வித்தையைச் செய்யும் தொழில் நுட்பம் பாரலாக்ஸ் பாரியர் (Parallax Barrier) என அழைக்கப்படுகிறது. இதில் தொலைக்காட்சித் திரையில் படங்கள் அடுக்கடுக்காய் ஒளிபரப்பாகும். அந்தத் திரைக்கு முன்னால் பாரலக்ஸ் பாரியர் திரை ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். நமது கண்ணாடி செய்ய வேண்டிய வேலையை இந்தத் திரை செய்கிறது அது தான் வித்தியாசம்.

இவையெல்லாம் 2டி படத்தை 3டி படமாக நமக்குக் காண்பிக்கும் வித்தைகள் என்பது தான் சிறப்பம்சம். ஆனால் உண்மையிலேயே 3டி படங்களையும், ஆட்களையும் காண்பிக்கும் தொழில்நுட்பங்களும் வந்து விட்டன. எந்திரன் படத்தில் ரஜினியின் 3டி உருவம் வந்து பேசுவது போல் ஒரு காட்சி வரும். அத்தகைய இமேஜ் மனிதர்கள் விமான நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் நுழையத் துவங்கிவிட்டார்கள். காற்றில் உருவம் வரையும் வித்தை அது ! எதிர்காலத்தில் ரொம்ப அன்னியோன்யமானத் தகவல் பரிமாற்றத்தை இத்தகைய உருவங்கள் செய்யும் என்பது பலத்த எதிர்பார்ப்பு.

உலகம் 3டி நுட்பத்துக்குள் புயலாய் நுழைந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த அடிப்படைத் தகவல்களை 2டியில் வாசித்துத் தெரிந்து கொள்வது நல்லது தான் இல்லையா ?!


Viewing all articles
Browse latest Browse all 490

Latest Images

Trending Articles


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


ஸ்ரீ நாக நாத சித்தர் வரலாற்று சுருக்கம் - ஆத்ம ஜோதி இதழ்


Lara Croft Tomb Raider: The Cradle of Life (2003) Tamil Dubbed Movie 720p HD...


வெட்டவெளிதனில் கொட்டிக்கிடக்குது – இளையராஜா


வேதம் புதிது - கபிலரும் பாரதிராஜாவும்


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சித்தன் அருள் - 204 - அகத்தியர் அறிவுரை - 20


கார் கவிழ்ந்தது பாண்டி ரவி படுகாயம்


தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்


தொ.மு.சியின் புதுமைப்பித்தன் -கிருஷ்ணன் சங்கரன்



Latest Images