முன்பெல்லாம் கணினியைப் படித்தோம், இன்று கணினியில் படிக்கிறோம். கணினி படிப்பைக் குறித்த பார்வை இன்று இப்படி விரிவடைந்திருக்கிறது. கணினி என்பது இனிமேல் ஒரு தனிப் பாடமல்ல, எந்தப் பாடத்தையும் இணைக்கும் பாலம் என்பதையே புதிய தொழில்நுட்பக் கல்வி நமக்கு எடுத்துக் கூறுகிறது.
சார்லஸ் பேபேஜ் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கணினியைக் கண்டுபிடித்தபோது அது இத்தகைய விஸ்வரூப வளர்ச்சியடையும் என எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. கூட்டல் கழித்தல் போடுகின்ற ஒரு கேல்குலேட்டர் போல தான் அதன் முதல் பிரசவம் இருந்தது. அது படிப்படையாக வளர்ச்சியடைந்து, ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்து ஏழில் முதல் தலைமுறை கணினி உருவானது.எலக்ட்ரானிக் நியூமரிகல் இன்டிகிரேட்டர் அன்ட் கம்ப்யூட்டர் என்பது தான் அப்போதைய பெயர்.
பெயரைப் போலவே அது அளவிலும் மிகப்பெரியதாக இருந்தது. சுமார் பதினெட்டாயிரம் வேக்யூம் டியூப்கள் ஒரு கணினியில் இருந்தன. அதை பாதுகாப்பாக வைக்க சுமார் முக்கால் கிரவுண்ட் நிலம் தேவைப்பட்டது ! அதன் எடை சுமார் முப்பதாயிரம் கிலோ என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இன்றைய கணினிகளோடு ஒப்பிடுகையில் வளர்ச்சி வியப்பூட்டுகிறது.
நமது அன்றாட வாழ்க்கையை இன்றைய கணினி யுகம் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டுவிட்டது என்று சொல்லலாம். குறிப்பாக இணையம் வந்தபின்பு கணினி தொழில்நுட்பம் கரைபுரண்ட காட்டாறுபோல திமிறிப் பாய்ந்து விட்டது. யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு உலகத்தை ஒற்றை புள்ளியில் கொண்டு வந்து சேர்த்து விட்டது.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதெல்லாம் பழைய கதையாகி, வலைகடல் ஓடி திரவியம் தேடு எனும் புது மொழியில் இன்றைய தொழில்நுட்ப உலகம் பயணிக்கிறது.
‘ஊருக்கு போனதும் கடுதாசி போடுப்பா’ என்று யாரும் இன்றைக்கு சொல்வதில்லை. பயணம் செய்ய ஆரம்பித்த நொடி முதல் ஒவ்வொரு நிமிடமும் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை ஜிபிஎஸ் டிராக் செய்கிறது. அதை வீட்டிலிருந்தபடியே அம்மாக்கள் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.
இன்லென்ட் என்றால் என்ன ? தபால் நிலையம் என்பது பால் விற்கும் இடைமா ? என்றெல்லாம் கேள்வி கேட்கக்கூடிய புதிய தலைமுறையை இன்றைய கணினி யுகம் உருவாக்கியிருக்கிறது.
பழைய கால திரைப்படங்களில் கிளைமேக்ஸ் காட்சியில் கதாநாயகியை அவளது தந்தை ரயிலிலோ, விமானத்திலோ ஏற்றிக் கொண்டு சென்றுவிடுவார். காதலர்கள் பிரிந்து விடுவார்கள். கண்ணைக் கசக்கிக் கொண்டே பார்வையாளர்களும் பிரிந்து விடுவார்கள். அப்படி ஒரு கிளைமேக்ஸ் வைத்தால் இன்று சிரிப்பார்கள். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் முகம் பார்த்துப் பேசும் தொழில்நுட்பங்கள் நமது கையடக்கக் கருவிகளில் வந்துவிட்டன.
சமூக வலைத்தளங்களின் வரவுக்குப் பின்பு உலகின் நட்பு வட்டாரங்களெல்லாம் டிஜிடல் குட்டிச் சுவற்றில் வந்தமர்ந்து விட்டன. அரட்டைகளும், பரிமாற்றங்களும் சாதாரண சங்கதிகளாகிவிட்டன. பள்ளிக்கூட நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என உறவுகளின் இழைகள் அனைத்தையும் எப்போது வேண்டுமானாலும் தொடர்பில் கொண்டிருக்கக் கூடிய ஒரு சூழலை கணினி யுகம் நமக்கு உருவாக்கித் தந்திருக்கிறது.
கடந்த தலைமுறைக்கும், இந்த தலைமுறைக்கும் இடையேயான மிகப்பெரிய இடைவெளியாய் இந்த தொழில்நுட்பப் புரட்சியைச் சொல்லலாம். எந்த முன்பதிவுக்கும் அலுவலகம் சென்று வரிசையில் நிற்கத் தேவையில்லை, எந்த பில் கட்டவும் அரசு அலுவலகங்களில் செல்லத் தேவையில்லை, பணத் தேவைக்காய் வங்கிகளில் டோக்கன் வாங்கி நொந்து கொள்ளத் தேவையில்லை, கடிதம் அனுப்ப ஸ்டாம்ப் தேடித் திரியத் தேவையில்லை, ஏன் சாப்பிடுவதற்குக் கூட சமைக்கத் தேவையில்லை எனும் நிலமையை கணினி யுகம் உருவாக்கித் தந்திருக்கிறது.
கேமரா, ரேடியோ, டேப்ரிக்கார்டர், டிவிடி பிளேயர், தபால் நிலையம், வங்கி என சர்வத்தையும் உள்ளடக்கியபடி கணினி நுட்பத்தின் வசீகரமாய் போன்கள் கரங்களில் இருக்கின்றன. இனியும் இவை அடையப் போகின்ற எல்லைகளை நினைத்தால் பிரமிப்பாய் இருக்கிறது.
கணினி யுகம் அழிந்து விடும், கணினி தொழில்நுட்பம் முடிந்து விடும் என்றெல்லாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஊகங்கள் வெளியாவதுண்டு. ஆனால் இதை மட்டும் மனதில் பச்சை குத்திக் கொள்ளுங்கள், “கணினியுகம் என்றைக்குமே அழிந்து விடாது. கூடு விட்டுக் கூடுபாயும் நுட்பம் போல ஒரு தொழில்நுட்பத்திலிருந்து இன்னொரு தொழில்நுட்பம் நோக்கி அது பாய்ந்து கொண்டே இருக்கும்” அவ்வளவு தான் வித்தியாசம்.
உதாரணமாக கணினி முதலில் வந்தபோது அது டைப் செய்யவும், தகவல்களை டிஜிடலாய் சேமிக்கவும் தான் பயன்பட்டது. பின்னர் ஒரு அலுவலகத்தை டிஜிடல் மயமாக்க உதவியது. அது பின்னர் உலக வலையுடன் இணைந்து வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு அடிகோலியது. பின்னர் வங்கிகளையும், நிறுவனங்களையும் இணைத்தது. பின்னர் மொபைல் தொழில்நுட்பத்துக்குத் தாவியது. வலைத்தளங்களை விட்டு விட்டு ஆப்களை தயாரிக்க நிறுவனங்கள் களமிறங்கின. இப்போது மொபைல்களையும் தாண்டி அணியும் தொழில்நுட்பத்தை நோக்கி நுட்பம் நாலுகால் பாய்ச்சலில் ஓடுகிறது.
ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ட் எனப்படும் செயற்கை அறிவு தொழில்நுட்பம் இன்றைக்கு மிகப்பிரபலம். கருவிகள் தாங்களாகவே முடிவெடுத்துச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. அத்துடன் மெஷின் லேர்ணிங் தொழில்நுட்பம் இணைந்துவிட்டது. சமீப காலமாக தொழில்நுட்ப உலகை ஆக்கிரமித்திருக்கும் பிக்டேட்டா, கிளவுட் கம்ப்யூட்டிங், ஆகுமென்டட் ரியாலிடி, இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் பிளாக் செயின் போன்றவையெல்லாம் கைகோர்த்து இணைந்து பயணிக்கின்றன.
ஜிம்மி… போய் பேப்பர் எடுத்துட்டு வா என்றது பழைய காலம். “அலெக்ஸா.. இன்னிக்கு என்ன நியூஸ்” என கேட்பது இந்தக் காலம். வீட்டின் வரவேற்பறைகளில் ஜம்மென அமர்ந்திருக்கும் கூகிள் ஹோம்களோ, அமேசான் அலெக்ஸாக்களோ நாம் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் அட்சர சுத்தமாய்ப் பதில் சொல்கின்றன. நமக்குத் தேவையான உதவிகளைச் செய்கின்றன. ஆலோசனைகளைச் சொல்கின்றன. இனிமையான பாடலை இசைத்து மனதை இலகுவாக்குகின்றன.
தொழில்நுட்ப உலகம் நம்மை கணினியின் கரங்களில் ஒப்படைத்து விட்டது. கணினியையும், டிஜிடலையும் அவரச அவரசமாய் அரவணைத்துக் கொள்ளும் இந்த சூழலில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான இரண்டு விஷயங்கள் உண்டு.
ஒன்று, உறவுகளையும் நேசத்தையும் என்றும் டிஜிடல் இழைகளில் கட்ட முடியாது. நேரடியான உரையாடலையும், அன்பின் சந்திப்புகளையும், கரம் கோர்த்த ஆறுதலையும் எந்த கணினியும் இடம் பெயரச் செய்ய முடியாது. அத்தகைய மனிதத்தின் மதிப்பீடுகளை கணினியின் கரங்களுக்கு விற்று விடாதிருப்போம்
இரண்டு, இந்த டிஜிடல் வெளி ஆபத்துகளை உள்ளடக்கியது. எல்லாமே மறைந்திருப்பதைப் போலத் தோற்றமளிக்கும். ஆனால் வெளிப்படையாய் விழித்திருக்கும். இதில் நமது ரகசியத் தகவல்களையோ, படங்களையோ, செய்திகளையோ பகிராதிருப்போம். வெறுப்பின் உரையாடல்களையோ, வன்மத்தின் விவாதங்களையோ செய்யாதிருப்போம்.
இன்று உலகக் கணினி கல்வி தினம். கணினியை கல்வியாய்க் கற்போம், அன்பை உயிருக்குள் வைப்போம்.
*
சேவியர்.
daily thanthi