அன்றைய பொழுதுகள்
அரைடவுசர்
காலங்களில்
பல்டியடித்த குளங்களில்
முழங்காலளவு சகதி.
எருமை குளித்து
கரையேறிய
படிக்கரையில்
புரண்டு விளையாடிய
பொழுதுகள்.
சிப்பி பொறுக்கி
மீன் பிடித்து
கலங்கிய குளத்தில்
குளித்து கரையேறிய
நினைவுகள்.
பந்தடி களத்தில்
புழுதிக் கூடாரத்தில்
கபடி விளையாடி
மண்புழுவாய் ஊர்ந்த
தருணங்கள்
ஓடை நீரில்
இலை மடக்கி
நீர் குடித்த நிமிடங்கள்.
எல்லாம்
மனதின் முதலறையில்
நினைவு கீறி
விழித்துக் கிடக்கின்றன.
எப்போதும்
அலர்ஜி வந்து
அவஸ்தைப்பட்டதில்லை.
நோய்கள்
வந்து
நொடிந்து போனதில்லை.
இன்று
புழுதிகளை
கண்ணாடிகளால்
தடுத்து நிறுத்தி,
ஃபில்டரில்
வடிகட்டிய தண்ணீரில்
குளித்து முடித்து,
காங்கிரீட்
அறைகளுக்குள்
பாதுகாப்பாய் இருக்கையில்,
எங்கிருந்தோ
வந்து அமர்கின்றன
காலத்தின்
கொடுக்குகளுடன்
நோய்கள்.
*
சேவியர்