Quantcast
Channel:
Viewing all articles
Browse latest Browse all 490

அப்பாவின் அலமாரி

$
0
0

அப்பாவின் அலமாரி

IMG_5201

 

அப்பாவின் அறையில்
ஒரு ஓரமாய்
அமைதியாய் இருந்தது
அந்த அலமாரி.

அதைத் திறக்கும்
அனுமதி
எங்களுக்கெல்லாம்
தரப்படவில்லை.

அதற்குள்
அலாவுதீன் பூதம்
அடைபட்டுக் கிடப்பதாய்
எங்கள்
கற்பனைகள் கண்ணடிக்கும்..

புதிர்களை அவிழ்க்கும்
கனவுச்
சாவிகளை
பயம் வந்து
முறித்துப் போடும்.

பக்தனுக்குக்
காட்சி தராத
கர்ப்பக் கிரகம் போல
அது
அடைபட்டே கிடந்தது.

அதை
நெருங்குவதெல்லாம்
முன்பக்கக் கண்ணாடியில்
முகம் பார்க்கவும்
தலைசீவவும்
மட்டுமே.

அந்த
மர்மப் பெட்டியில்
நோவாவின் பேழை போல்
வரலாற்றுச் துடிப்புகள்
ஒளிந்திருக்கலாம் என
கற்பனை செய்ததுண்டு.

புதையல்களின்
பதுங்குகுழியோ என
பரவசமடைந்ததும் உண்டு.

காலங்கள் கடந்துவிட்டன.
ஓர்
துயரத்தின்
நெருப்புத் துளியாய்
அப்பா விடைபெற்றார்.

சத்தத்தை விட
வலிமையான
மௌனத்தை அவர்
அலமாரியின் மீது
இறக்கி வைத்துப் போனார்.

தடுப்பதற்கு ஆளில்லாத
அலமாரியை
திறப்பதற்கு
யாருக்கும் மனம் வரவில்லை.

நடுங்கும் சாவியுடன்
அதை
திறந்த ஒருகணத்தில்
அப்பாவின் வாசனை
நேசமாய் நாசி தீண்டியது.

நேர்த்தியாய்
மடித்து வைத்த ஆடைகளும்
பழுப்பேறிய
பத்திரங்களும்,
துணிகளின் அடியில்
மறைந்திருந்த
சில ரூபாய் நோட்டுகளுமாய்
அலமாரி ரகசியம் அவிழ்த்தது.

எதுவும்
முக்கியமற்றுப் போன
அந்த கணத்தில்
அவசரமாய்
அலமாரியை மூடி வைத்தோம்

அப்பாவின்
வாசனை
வெளியேறாமல் இருக்க.

*

சேவியர்


Viewing all articles
Browse latest Browse all 490

Trending Articles