தை பிறந்தால் வழி பிறக்கும்.
சிந்’தை’ பிறந்தால் வழி பிறக்கும்.
இருளின் கானகப் பாதையில் பயணிப்பவர்களின் கனவெல்லாம் தரைக்கு எப்போது வெளிச்ச விழுதுகள் இறங்கி வரும் என்பது தான். அந்த வெளிச்சப் புள்ளிகளின் ஒற்றையடிப் பாதை போதுமானதாய் இருக்கிறது கானகப் பயணத்தைக் கடக்க. கும்மிருட்டின் கோரப் பிடியில் கிடப்பவர்களுக்கு ஒரு மின்மினியின் வெளிச்சப் பொட்டே, மாபெரும் விடுதலையின் கொடியாகத் தெரியும்.
இந்தத் தை, உங்கள் மீதிருக்கும் நிந்தை தனை அழித்து, விந்தை தனைப் பொழிந்து வாழ்வில் வசந்தத்தைத் தர வாழ்த்துகிறேன்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை நாம் பல வேளைகளில் தவறாகப் புரிந்து கொள்கிறோம். சாவி இருந்தால் கதவு திறக்கும் என்பதைப் போல. உண்மையில் சாவி இருந்தால் கதவு திறப்பதில்லை, சாவியைப் பயன்படுத்த வேண்டிய விதத்தில் பயன்படுத்தினால் தான் கதவு திறக்கும் என்பதே உண்மை. அதே போல தான் பாதைகளும்.
நமக்கான பாதைகளை எந்த வானதூதரும் கோரைப் பாயைப் போல சுருட்டி எடுத்து வந்து, நம் முன்னால் உதறி விரிப்பதில்லை. நமக்கான பாதைகளை யாரோ தயாராக்கி வைத்து விட்டு நம்மை ஆரத்தி எடுத்து வரவேற்பதும் இல்லை. எப்படி நமக்கான சுவாசம் நம்மிடம் இருக்கிறதோ, அப்படியே நமக்கான பாதைகளும் நம்மிடமிருந்தே புறப்படுகின்றன.
வரப்புகளில் தலை சாய்த்திருக்கும் கதிர்களின் அறுவடை தை மாதத்துக்கு முன்பே முடிந்து விடும். தை வரும்போது வரப்புகளில் நடக்க வழி பிறக்கும் ! தை மாதத்தில் அறுவடையின் நிகழ்ச்சிகள் முடிந்து விட்டிருக்கும். மக்களின் தேவைக்கான தானியங்கள் களஞ்சியங்களில் இருக்கும். உழைப்பாளர்களுக்கான கூலி அவரவர் கைகளில் வந்து சேரும். தை பிறக்கும்போது அவர்களது வாழ்வுக்கான வழி பிறக்கும். இவையெல்லாம் விவசாயத்தின் விரல்பிடித்து நடந்த நம் மூதாதையர்களின் வாழ்வியல் விளக்கங்கள்.
ஆனால், விதையில்லாமல் எந்தத் தையும் முளைப்பதில்லை. விதைக்கும் காலத்தில் தூங்கி விட்டு அறுவடைக் காலத்தில் அரிவாளோடு அலைவது எவ்வளவு முட்டாள் தனமோ, அப்படித்தான் வாழ்வில் வழி பிறக்க எதுவும் செய்யாமல், மாதம் பிறந்ததும் நம் சோகம் இறந்து விடும் என நம்புவதும்.
கல்லும் முள்ளுமான கரடு முரடு பிரதேசங்களில் எப்படி ஒற்றையடிப் பாதைகள் தோன்றின ? அவையெல்லாம் ஏதோ பாதங்கள் அந்த முட்களின் முனைகளைத் தாண்டியும், கற்களின் கூர்களைத் தாண்டியும் நடந்து திரிந்த வலிகளின் வழிகள். அந்த ஒற்றையடிப் பாதைகளில் குருதியின் அம்சங்கள் இன்னும் ஒளிந்திருக்கலாம். அந்தப் பாதைகளில் அலறலில் அழுகுரல்கள் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கலாம்.
அப்படித் தான் நமது வாழ்க்கையும். வாழவேண்டும், முன்னேற வேண்டும் எனும் சிந்தை முதலில் மனதில் முளைக்க வேண்டும். அந்த சிந்தனையை நீரூற்றி வளர்க்க வேண்டும். அதைக் கறை படாமல் காக்க வேண்டும். அதற்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்க வேண்டும். அதன் பின்னர் அதனிடம் கனிகளை எதிர்பார்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு காலம் இருக்கிறது, அந்த காலத்தின் கண்சிமிட்டலுக்கான தயாரிப்பு நம்மிடம் இருக்கிறது.
நல்ல விதைகளை, நல்ல நிலத்தில், நல்ல பருவத்தில் விதைப்பது விளைச்சலின் தரத்தை நிர்ணயிக்கும். முள்ளிடையே விதைத்தால் அவை முட்களினால் கிழிக்கப்படும். பாறைகளில் விதைத்தால் அவை வேர்விடாமல் கரிந்து விடும். வழியோரம் விதைத்தால் அவை பறவைகளால் களவாடப்படும். நல்ல நிலத்தில் விதைத்தால் மட்டுமே அவை மிகுந்த விளைச்சலைக் கொடுக்கும்.
நமது வாழ்வில் நமது அன்பை எங்கெல்லாம் விதைக்கிறோம். அந்த அன்பு காய்ந்து விடாமல் அடிக்கடி கவனித்துக் கொள்கிறோமா ? அந்த அன்பைக் கெடுக்க நினைக்கின்ற களைகளாம் சிந்தனைகளைக் களைகின்றோமா ? அந்த அன்புக்குத் தேவையான ஊக்க உரங்களை அளிக்கின்றோமா ? அப்படிச் செய்தால் அந்த அன்பு மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கும். உரசாத தீக்குச்சி எரிவதில்லை, உணராத மனம் விரிவதில்லை. அன்பை விதைக்கத் துவங்குவோம் ஆனந்தத்தை அறுவடை செய்வோம்.
சோம்பலில் சுற்றப்பட்டுக் கிடப்பவர்களின் சன்னலின் சூரியன் உதிப்பதில்லை. அவர்களுடைய படுக்கைகளின் வெற்றிகளின் கோப்பைகள் துயில்வதும் இல்லை. அவர்கள் கனவுகளில் போர் புரிந்து, நிஜங்களில் தோற்றுப் போகிறார்கள். முதல் சுவடை எடுத்து வைக்காமல் எந்தப் பயணமும் துவங்குவதில்லை. தை பிறக்க வேண்டுமெனில் நாம் நமது உற்சாகத்தைப் பிறப்பிக்க வேண்டும்.
களத்தில் நுளையாமல் வெற்றிகளைப் பெறுவதும், களத்து மேட்டில் நுழையாமல் விளைச்சலைப் பெறுவதும் பகல் கனவின் பரிதாபங்கள். நமது வாழ்க்கை அட்சய பாத்திரங்களின் அணிவகுப்பல்ல, உழைப்பு வியர்வையின் ஈரக் கோடுகள். தேடல் இல்லாமல் எதையும் கண்டடைய முடியாது. முயற்சிகளின் முனை ஒடிந்து போனால், வாழ்வின் ஊசிகளால் வெற்றி ஆடைகளைத் தைக்கமுடியாது.
உற்சாகமான மனம், நல்ல சிந்தனைகளின் இருப்பிடம். உடலை வலுவாக வைத்திருக்கும் வாய்ப்பை சுறுசுறுப்பான சிந்தனை தான் தருகிறது. உடல் வலுவாக, உற்சாகமாக இருந்தால் தான் மனமும் உற்சாகமாக இருக்கும். “திறந்திடு சீசே” என்றவுடன் திறக்கின்ற புதையல் குகைகள் இங்கே இல்லை. திறக்க வேண்டுமெனில் அதற்கான உழைப்பைச் செலுத்த வேண்டும். கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகின்ற தெய்வங்களுக்கு இப்போது தட்டுப்பாடு. நிலத்தைப் பிய்த்து வளத்தைப் பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கின்ற கடவுளர்களே காணப்படுகின்றனர்.
ராஜராஜன் காலத்தில் தை மாதத்தில் தான தர்மங்கள் கொடுப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார். ஏழைகளுக்கு உதவுவதற்காக, வறிவர்களின் வயிறுகளை நிறைப்பதற்காக அவர் தை மாதத்தில் களஞ்சியங்களைத் திறப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார். அந்தத் தை மாதம் எத்தனையோ மக்களுடைய வாழ்வில் தீபத்தை ஏற்றி வைத்தது. சோகத்தை மாற்றி வைத்தது. நமது மனதையும் அத்தகைய பிறர்நலப் பணிகளுக்காய் தயாராக்கி வைப்போம்.
இந்தத் தை மாதம் நமக்கு நல்ல வரத்தைத் தரட்டும். நல்ல வளத்தைத் தரட்டும். அதற்கான தயாரிப்புகளை நாம் செய்வோம். பறவையின் எச்சமே ஒரு மரமாய் உருமாறும் போது, மனிதனின் செயல்கள் எப்படிப் பட்ட வசீகரங்களை உருவாக்க முடியும் ? அவை கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவை. அதற்காக திட்டமிடுவோம், சவால்களை சந்திப்போம், புதுமைகளை உருவாக்குவோம், செயல்படுவோம்.
தங்கத்திலே செய்த அம்பாய் இருந்தால் கூட எய்தால் தான் இலக்கை அடையும். நவீனத்தின் உச்சத்தில் இருக்கும் துப்பாக்கியானால் கூட விசையை இழுத்தால் தான் இலக்கைச் சுட முடியும். நாம் எவ்வளவு திறமை சாலிகள் என்பதல்ல, நாம் எவ்வளவு செயல்படுகிறோம் என்பதும் முக்கியம். நம் மீது நாம் எவ்வளவு நம்பிக்கை வைக்கிறோம் என்பதும் முக்கியம்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல, தை துறந்தாலும் நமது வாழ்வில் வழி பிறக்கும். பல தைகள் நமது வாழ்க்கையின் கொண்டாட்டத்தைப் புதைத்துக் கொண்டிருக்கின்றன. அத்தகைய தைகளை நாம் பிடுங்கி எறிய வேண்டும். நமது அமைதியைக் கெடுக்கும் கோபத்தை ! அன்பை விலக்கும் விரோதத்தை ! உறவை உடைக்கும் வன்மத்தை ! தாழ்மை கெடுக்கும் கர்வத்தை ! சுயநலம் கொடுக்கும் ஆணவத்தை ! இப்படி பல்வேறு “தை”களை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். இந்தத் தைகள் இருந்தால் மனிதத்தை விளைவிக்க முடியாமல் போய்விடும்.
எனவே அன்பு நெஞ்சங்களே, இந்தத் தை, உங்கள் இதயத்தில் மனிதத்தை, ஈரத்தை, நேசத்தை, இன்பத்தை நிறைக்கட்டும் என வாழ்த்துகிறேன்.
*
சேவியர்