Quantcast
Channel:
Viewing all articles
Browse latest Browse all 490

தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உயர்வு தரும்.

$
0
0

கடலின் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். யாரிடமும் வாங்கவும் முடியாத, யாருக்கும் கொடுக்கவும் முடியாத ஒரு உன்னத பொருள் நேரம் தான்.

உங்கள் கடிகாரத்தைக் கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்கள். எவ்வளவு நேர்த்தியாக வினாடிகள், நிமிடங்கள், மணிகள் என ஓடிக் கொண்டே இருக்கிறது. காலையில் வேகமாகவும், மதியம் சோர்வாகவும், மாலையில் தூங்கியபடியும் அது ஓடுவதில்லை. ஆனால் நாமோ நம்முடைய மனநிலைக்கு ஏற்ப, “டைம் செம ஃபாஸ்டா ஓடிடுச்சு”, “நேரம் போகவே மாட்டேங்குதுஎன காலத்தைக் குறை சொல்கிறோம் 

ஒன்பது மணிக்கு துவங்கும் அலுவலகத்தில் எத்தனை பேர் சரியான நேரத்தில் வருகிறார்கள். ஒன்பது மணிக்கு நடைபெறும் மீட்டிங்கிற்கு எத்தனை பேர் தாமதமின்றி வந்து சேர்கிறார்கள் ? பத்து நிமிடம் லேட்டா போனா ஒண்ணும் ஆவாது என்பது தானே பலருடைய மனநிலை ?

மூன்று மணி நேரம் சீக்கிரமாகச் செல்வது, ஒரு நிமிடம் தாமதமாகப் போவதை விட மிகச் சிறந்ததுஎன்கிறார் சேக்ஸ்பியர். நேரம் தவறாமையை அவர் எந்த அளவுக்கு மதித்தார் என்பதற்கு இந்த ஒரு வரியே சாட்சி. 

பங்சுவாலிடி என்பது ஏதோ அலுவலக வேலைக்கு மட்டுமானதல்ல. குடும்பத்திலும், சமூகத்திலும் தினம் தினம் கடை பிடிக்க வேண்டிய ஒரு செயல் தான். சரியான நேரத்துக்கு ஒரு மாத்திரை சாப்பிடுவது கூட இதன் ஒரு பாகம் தான். 

நேரம் தவறாமைக்கு உதாரணமாய்த் திகழ்ந்தவர் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன். ஒரு முறை அவர் தேர்தலில் ஜெயித்த உறுப்பினர்களை இரவு உணவுக்கு அழைத்தார். குறித்த நேரத்தில் யாருமே வரவில்லை. வாஷிங்டன் அமைதியாக மேஜையில் அமர்ந்து உணவு உண்ணத் துவங்கினார். அவர் சாப்பாட்டை முடிக்கும் தருவாயில் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். வந்தவர்களுக்கு வியப்பு. விருந்தினர்கள் வரும் முன்னால் விருந்துக்கு அழைத்தவர் சாப்பிடுகிறாரே என்று முணு முணுத்தனர்.

வாஷிங்டன் நிதானமாய்ச் சொன்னார். “நான் காலம் தவறுவதில்லை. என்னுடைய சமையல்காரரும் நேரம் தவறுவதில்லை. எனவே அவர் சரியான நேரத்தில் பரிமாறினார், நான் குறித்த நேரத்தில் சாப்பிடுகிறேன்”. வந்தவர்கள் வெட்கப்பட்டார்கள். நேரம் தவறாமையை அதிபர் எந்த அளவுக்கு பின்பற்றினார் என்பதைக் கண்டு கொண்டனர்.

நேரம் தவறாமை ஒரு சின்ன விஷயம் போலத் தோற்றமளித்தாலும், பாறையைப் பிளக்கும் உளி போன்ற வலிமை அதற்குண்டு. நேரம் தவறாமல் இருக்கும் நபரை மற்றவர்கள் ரொம்பவே மதிப்பார்கள். தனது வாழ்க்கையை சரியாய் வாழத் தெரிந்தவரே நேரம் தவறாமையைக் கடைபிடிப்பார். அவர் நேர மேலாண்மையில் கில்லாடி என நிர்வாகம் அவரை கண்ணியத்துடன் கவனிக்கும்.

பிறரை நீங்கள் மதிக்கிறீர்கள்என்பதன் முதல் அடையாளம் காலம் தவறாமை. ஒரு சந்திப்புக்காகவோ, வேலைக்காகவோ சரியான நேரத்தில் நீங்கள் ஆஜராகிறீர்களெனில் சந்திப்பில் கலந்து கொள்ளும் அனைவரையும் நீங்கள் மதிக்கிறீர்கள் என்பது அதன் வெளிப்படையான பொருள். உங்களுக்காக யாரும் காத்திருப்பதும் நல்லதல்ல, யாருடைய நேரத்தையும் நீங்கள் வீணடிப்பதும் நல்லதல்ல. காலம் தவறாமை சொல்லும் இன்னொரு விஷயம், நீங்கள் அந்த சந்திப்பை முக்கியத்துவம் வாய்ந்தது என்று நினைக்கிறீர்கள் என்பது தான்.  

நேரம் தவறாமல் சரியான நேரத்தில் வரும் நபர் எப்போதுமே திறமைசாலியாகவும், தன்னம்பிக்கை உடையவராகவும் பரிமளிப்பார். அவருக்கு பெரிய பொறுப்புகள் வந்து சேரும். 

காலம் தவறாமை உங்களை நம்பிக்கைக்குரிய நபராய் அடையாளம் காட்டும். சொன்ன நேரத்தில் வருவது. சொன்ன நேரத்தில் வேலையை முடித்துக் கொடுப்பது. ஒப்புக் கொண்ட நேரத்தை மதிப்பது, இவையெல்லாம் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். 

டயானா டிலோன்சர் எனும் எழுத்தாளர்நெவர் பி லேட் எகைன்எனும் நூலை எழுதினார். இந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து மிக சுவாரஸ்யமானது. “நேரம் தவறாமையை பின்பற்றாத மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் தாமதத்தையே தொடர்கிறார்கள். நல்லதோ கெட்டதோ, எங்குமே அவர்களால் சரியான நேரத்தில் இருக்கவே முடிவதில்லைஎன்கிறார் அவர். 

தாமதமாய் வருவது தவறு, அந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டும் எனும் சிந்தனை உங்கள் மனதில் முளைக்க வேண்டியது முதல் தேவை. அப்போது தான் உங்களுடைய தினசரி நடவடிக்கைகளை நீங்களே கொஞ்சம் அலசுவீர்கள். காலையில் ஏன் தினமும் லேட்டாகிறது ? கொஞ்சம் சீக்கிரம் எழும்பினால் என்ன ? போன்ற சிந்தனைகள் உங்களிடம் அப்போது தான் எழும்.

சரியான நேரத்தில் கலந்து கொள்ளவேண்டும்என எப்போதுமே நினைக்காதீர்கள். பத்து நிமிடம் முன்னதாக இருக்க வேண்டும் என்று நினையுங்கள். அப்போது தான் சரியான நேரத்திலாவது நீங்கள் அங்கே இருக்க முடியும். 

நேரம் தவறாமை நமது திட்டமிடுதலைச் சார்ந்தே இருக்கிறது. உதாரணமாக, இரண்டு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகளுக்கு ஒரு மணிநேரத்தை ஒதுக்காதீர்கள்.  முடிக்க முடியாத அளவுக்கு நெருக்கமான கால இடைவெளிகளில் நிகழ்வுகளை வைத்துக் கொள்ளாதீர்கள். அது எப்போதுமே உங்களைச் சிக்கலில் தள்ளி விடும்.

பலருக்கும் உள்ள மிகப்பெரிய கெட்ட பழக்கம் கடைசி நிமிடத்தில் ஏதாவது ஒரு வேலையைச் செய்யத் துவங்குவது. சட்டென ஒரு முறை மின்னஞ்சலைப் பார்த்து விடுவோம், ஒரு நபருக்கு போன் செய்து முடித்து விடுவோம் என கடைசி நிமிட பரபரப்பை உருவாக்குவார்கள். உங்களைத் தாமதப்படுத்தும் மிக முக்கிய காரணியே இந்த கடைசி நிமிட திடீர் வேலை தான் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

முக்கியமான ஒரு நிகழ்வுக்கு முன்னும் பின்னும் முக்கியமற்ற செயல்களைத் திட்டமிடுங்கள். அப்போது தான் முக்கியமான நிகழ்வை எந்தவித பதட்டமும் இல்லாமல் முடிக்க முடியும்.

எதிர்பாராத வேலைகளுக்காகவென கொஞ்சம் நேரத்தை எப்போதுமே ஒதுக்கி வைத்திருங்கள். போகும் வழியில் போக்குவரத்து நெரிசல் இருக்கலாம், டயர் பஞ்சராகலாம், எதிர்பாராத ஒரு அழைப்பு வரலாம், இப்படி எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து கொஞ்சம்கூடுதல்நேரத்தை ஒதுக்கி வையுங்கள். 

இப்போதைய தொழில் நுட்பம் உங்களுக்கு ஏகப்பட்ட வசதிகளைச் செய்து தருகிறது. செல்போன் அலாரம், ரிமைண்டர்கள், கணினி மென்பொருள்கள் போன்ற எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி உங்கள் நேரத்தைத் திட்டமிடலாம். அதே போல வீட்டில் எல்லா அறைகளிலும் ஒவ்வொரு கடிகாரம் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் உங்களுக்கு அது ரொம்பவே உதவும்.

சீக்கிரமே போய்விட்டால் என்ன செய்வது எனும் எண்ணம் பல வேளைகளில் தாமதத்தை உருவாக்கிவிடும். அந்த காத்திருப்பு நேரங்களில் என்ன செய்யலாம் என யோசித்து வையுங்கள். ஒரு புத்தகம் படிப்பது கூட உங்களை சலிப்படைய வைக்காது. 

தாமதமாய் வருவது பெரிய மக்களுக்கே உரிய தகுதி என்றோ, தாமதமாய் வந்தால் நீங்கள் பெரிய நபராகப் பார்க்கப் படுவீர்கள் என்றோ தயவு செய்து நினைத்து விடாதீர்கள். உண்மையில், நேரம் தவறாமை தான் உங்களை தலைமைப் பண்பு உடையவராய்ச் சித்தரிக்கும். பல வாய்ப்புகளின் கதவுகளையும் அது சத்தமில்லாமல் திறந்து வைக்கும். 

சிலவேளைகளில் தாமதம் தவிர்க்க இயலாததாகி விடும். அந்த நேரத்தில் சம்பந்தப் பட்ட நபர்களுக்கு தகவல் தெரிவித்து விடுங்கள். தாமதமாய் நுழையும் போது, மன்னிப்புக் கேட்கவும் மறக்க வேண்டாம். ஒருவேளை கலந்து கொள்ளவே முடியாத சூழலெனில்  சாரிஎன முன்னரே மறுத்து விடுதல் நல்லது.

சிலருடைய தாமதத்துக்கான காரணங்கள் சின்னபுள்ளத் தனமானவை. “குழந்தை அழுதுடுச்சு”, “காபி கொட்டிடுச்சு”, ”ஒரு போன் கால் வந்துடுச்சுஎன உச்சுக் கொட்டுவார்கள். இவையெல்லாம் காரணங்களல்ல, உங்கள் மீதான மதிப்பைக் குறைக்கும் காரணிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இங்கிலாந்தில் வெளியான ஒரு ஆய்வு முடிவு, “லேட்டா வருபவர்களால்மேலாளர்கள் எரிச்சலடைகிறார்கள் என்று அடித்துச் சொன்னது. லேட்டா வருபவர்கள் சொல்லும்காரணங்கள்பெரும்பாலும் பொய்களாகவே பார்க்கப்படும் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

சின்ன வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நேரம் தவறாமையைக் கற்றுக் கொடுங்கள். குழந்தைகள் பெற்றோரைப் பார்த்துத் தான் எதையும் கற்றுக் கொள்ளும். சரியான நேரத்துக்கு தூங்குவது, சாப்பிடுவது, படிப்பது என எல்லாமே பெற்றோரைப் பின்பற்றியே பிள்ளைகள் நடக்கும். நீங்களே குழந்தையை பள்ளிக்கூடத்துக்கு லேட்டாய் கொண்டு விட்டீர்களெனில் குழந்தையும் அதையே தான் கற்றுக் கொள்ளும் என்பதை மறக்காதீர்கள் !

கடைசியாக, நேரம் தவறாமையை நீங்கள் பழக்கப்படுத்திக் கொண்டால் தேவையற்ற பல மன அழுத்தங்களையும், மன உளைச்சல்களையும் நீங்கள் வென்று விடலாம். சொன்ன வாக்கைக் காப்பாற்றி விட்டோம் எனும் ஆழ்மன நிம்மதியும், மகிழ்வும் உங்களை உற்சாகமாய்ச் செயல்பட வைக்கும்.

காலம் தவறா ஆச்சரியம்

வெற்றிக் கிளையில் பூச்சொரியும்


Viewing all articles
Browse latest Browse all 490

Trending Articles