அந்த அறை
கவலை முகங்களால்
அடுக்கப்பட்டு
கலைந்து கிடந்தது.
அழுவதற்காகவே
தயாரிக்கப் பட்ட
கண்களோடு
காத்துக் கிடந்தது கூட்டம்.
அவர்களின்
கவலைக் கைக்குட்டைகள்
காய்ந்திருக்கவில்லை,
கடலில் விழுந்த
பஞ்சு மூட்டையாய்
இதயமும் பாரமேறிக் கிடந்தது.
அவர் வந்தார்,
அவர் கைகளில்
துன்பத்தைத் துரத்தும்
மந்திரக்கோல் இருப்பதாகவும்,
பாசக்கயிறோடு
போட்டியிடும்
கருப்புக் கயிறு
இருப்பதாகவும்
நம்பிக் கிடந்தது கூட்டம்.
அவர் பேசினார்,
அவருக்கு
கடவுளே அகராதி அளித்ததாய்,
அவருக்கும்
தெய்வங்களுக்கும்
பந்தி அமரும் பழக்கம் இருப்பதாய்
கூட்டம் கருதிக் கொண்டது.
அவர்
பேசி முடித்துப் புறப்பட்டார்.
விடைபெற்ற
கூட்டத்தினரின் கண்களில்
ஈரம் காய்ந்திருந்தன,
உதடுகளில் பல
பூக்கள் உற்பத்தியாகியிருந்தன.
பேசிப்போனவர் மட்டும்
வருவாயைக் கணக்குப் பார்த்து
வருத்தப்பட்டுக் கொண்டே போனார்.
