Quantcast
Channel:
Viewing all articles
Browse latest Browse all 490

மன அழுத்தம் தவிர்ப்போம்

$
0
0

Image result for stress on Girls

“உலகிலேயே அதிக மன அழுத்தம் இந்தியப் பெண்களுக்குத் தான் !! ”. அதிர்ச்சியாய் இருக்கிறதா ? வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் நடத்தப்பட்ட மிக விரிவான நீல்சன் ஆய்வு ஒன்று தான் இப்படிக் கூறி வெலவெலக்க வைக்கிறது ! சுமார் 87% சதவீதம் இந்தியப் பெண்கள் மன அழுத்தத்தில் உழல்கிறார்களாம் ! பெண்கள் முன்னேற்றத்தில் சீரான வளர்ச்சியையும், வெற்றிகளையும் சந்தித்துவரும் இந்தியாவில் ஏன் இந்த நிலை?

இந்தியப் பெண்கள், அலுவலகங்களில் 21ம் நூற்றாண்டின் புதுமைப் பெண்களாக உலா வருகின்றனர். ஆனால் பெரும்பாலான வீடுகளிலோ கற்காலக் கணவன்களின் சிந்தனைகளின் நிழலிலேயே வாழ்கின்றனர். இரண்டு வேறுபட்ட உலகங்களில் சஞ்சரிக்கும் நிலை அவளுக்கு மன அழுத்தம் தரும் நவீன காரணிகளில் ஒன்று ! இது தவிர குழந்தை, குட்டி, வீடு, வேலை, இத்யாதி இத்யாதி என மன அழுத்தத்துக்கான காரணங்கள் நீங்கள் அறியாததல்ல !

உலகில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 85 சதவீதம் பேரும் பெண்கள் தான் ! எல்லா இடங்களிலும் வெற்றி வாகை சூடும் பெண்களால் ஏன் மன அழுத்த மதில் சுவரை மட்டும் எகிறிக் குதிக்க முடிவதில்லை ?

முயன்றால் முடியாதது இல்லை  ! கவலையை விடுங்கள் ! வழிகாட்டத் தான் உங்கள் கைகளில் தேவதை இருக்கிறாளே !

  1. நோ சொல்வதும் நாகரீகமே !

இளைச்சவன் தலையில மிளகாய் அரைப்பதில் அலுவலகங்கள் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. உங்கள் தலையில் சக பணியாளர்களோ, உயர் அதிகாரிகளோ ஏகப்பட்ட வேலையைச் சுமத்துகிறார்களா ?

“சாரி, என்னால இவ்ளோ தான் செய்ய முடியும்” என நாகரீகமாக மறுக்கப் பழகுங்கள். ஏற்றுக் கொள்ளும் வேலையை முழுமையாய்ச் செய்து முடிப்பது மன அழுத்தத்தில் விழாமல் காக்கும் வழிகளில் ஒன்று !

ஏகப்பட்ட வேலைகளை ஏற்றுக் கொள்வது, தேவையற்ற மன அழுத்தத்தை வரவேற்பது போல. மறுப்பது நல்ல பழக்கம் தான் ! முதலில் முடியாததாய்த் தோன்றும், பிறகு பழகி விடும்.

“முடியும்னு சொல்ற வேலையை சரியா முடிச்சுக் குடுத்துடுவாங்க” எனும் பெயரையும் நீங்கள் சம்பாதிக்கலாம் !

  1. புதிய கோணம், புத்துணர்வு தரும்.

உங்களுடைய பார்வை ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி எடுத்துக் கொள்கிறது என்பதைக் கவனியுங்கள். “ஐயோ இதெல்லாம் முடியாது..” என எடுத்த எடுப்பிலேயே தீர்மானிக்கிறதா ? “இதையெல்லாம் செய்யக் கூடாது” என மனம் முரண்டு பிடிக்கிறதா ? கண்டுபிடியுங்கள்.

அலுவலக வேலைகளைப் பொறுத்தவரை கஷ்டமும், சிக்கலும், எரிச்சலும் எழத் தான் செய்யும். ஒரு கஷ்டமான வேலை வந்தால், “இது உங்களை நிரூபிக்க ஒரு வாய்ப்பு” என எடுத்துக் கொள்ளுங்கள். அதை விட்டு விட்டு “கஷ்டத்தை எல்லாம் என் தலையில கட்டிடுவான்” என புலம்ப வேண்டாம் !

  1. மனதுக்கு மாற்று வழி..

 

மன அழுத்தமாக உணரும் தருணங்களில் மனசுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வது, மனதை உற்சாகமாக்கும் என்பது உளவியல் பாடம். எனவே எப்போதும் கொஞ்சம் உற்சாகமான விஷயங்களை கை வசம் வைத்திருங்கள்.

அது ஒரு சின்ன பிரேக் எடுத்து ஒரு கதை படிப்பதாகவும் இருக்கலாம், டைரி எழுதுவதாகவும் இருக்கலாம், அல்லது இணையத்தில் உலவுவதாகவும் இருக்கலாம். உங்களுக்கு ஏற்ற, பிடித்த ஒரு ரிலாக்‌சேஷன் கைவசம் இருக்கட்டும்.

ஒன்றுமே இல்லையேல் கண்களை மூடி, உங்களுக்குப் பிடித்த ஒரு இனிமையான சூழலை கற்பனை செய்து கொஞ்ச நேரம் பகல் கனவு காணுங்கள். தப்பில்லை !

  1. உற்சாகமான உடல் அவசியம்

மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டுமெனில் உடல் உற்சாகமாய் இருக்க வேண்டும் என்கிறது மருத்துவம் ! அதனால் தான் மன அழுத்தம் தவிர்க்க உடற்பயிற்சியை வல்லுனர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால் மனம் உற்சாகமாக இருக்கும். அதற்கு உடற்பயிற்சி கை கொடுக்கும். மூளையிலும், உடலிலும் ஆக்சிஜன் குறைவில்லாமல் இருந்தால் மூளை உற்சாகமாய் இருக்கும். அதற்கு மூச்சுப் பயிற்சி, யோகா, தியானம் போன்றவை கை கொடுக்கும்  ! உடலைப் பேணுவதன் மூலமாக மன அழுத்தத்தை விரட்டும் வழி இது !

  1. மன அழுத்தமும், மருத்துவமும்

நமக்கு மன அழுத்தம் வரும்போது உடல் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை வெளிவிடுகிறது ! இந்த ஹார்மோன்கள் உடலை உலுக்கி எடுக்கின்றன. குருதி அழுத்தத்தை எகிற வைக்கின்றன ! இதயத் துடிப்பை தாறுமாறாய் ஏற்றுகின்றன  ! குருதியில் சர்க்கரை அளவையும் அதிகரிக்கின்றன !

இது அப்படியே படிப்படியாய் தேங்கி, இதய நோய்கள், உடல் பருமன், மன நோய்கள், உடல் வலிகள் என பல்வேறு நோய்களை இழுத்து வரும். இவ்வளவு ஏன் ? பெண்களுக்கு மாதவிலக்கு தாறுமாறாகிப் போகவும் முக்கிய காரணம் மன அழுத்தம் என்கின்றனர் மருத்துவர்கள்.

  1. அதிர்ச்சி மன அழுத்தங்கள் !

ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வைப் பார்ப்பதால் வரும் மன அழுத்தத்தை “போஸ்ட் ட்ரமாடிக் ஸ்ட்ரெஸ் டிஸார்டர் – PSTD என்கின்றனர். ரொம்ப மனசுக்குப் பிடித்தமானவர்கள் சட்டென இறந்து போனாலோ, ஒரு விபத்தையோ, வன்முறையையோ நேரில் பார்த்தாலோ, பாலியல் ரீதியான வன்முறையைச் சந்தித்தாலோ, அல்லது இப்படிப்பட்ட ஏதோ ஒரு கடினமான சூழல் காரணமாக உருவாகும் மன அழுத்தம் இது !

ஒருவகையில் துரதிர்ஷ்டவசமான சூழல் இது எனினும், இதிலிருந்து வெளி வரவேண்டியது அவசியம். நல்ல ஆரோக்கியமான நட்புகளை வளர்த்துக் கொள்வதும், பொழுதுபோக்குகளை அரவணைப்பதும், உடற்பயிற்சிகள் மூலம் தன்னம்பிக்கையை வலுவாக்குவதுமே வெளிவரும் வழிகள்.

  1. விட்டு விடுதலே பெற்றுக் கொள்தல் !

“கல்யாண வீடாயிருந்தா நான் தான் மாப்பிளையா இருக்கணும், சாவு வீடா இருந்தா நான் தான் பொணமா இருக்கணும். எந்த இடமா இருந்தாலும் மாலையும் மரியாதையும் எனக்குத் தான் கிடைக்கணும்” எனும் மனநிலை நிம்மதியின் எதிரி.

விட்டுக் கொடுத்தலும், இயல்பாய் வாழ்தலுமே மன அழுத்தத்தை விரட்டும் வழிகள். உங்களை மன அழுத்தத்துக்குள் தள்ளும் விஷயங்கள் என்னென்ன என பட்டியலிடுங்கள். சின்னச் சின்ன விஷயங்களை சரி செய்யுங்கள். தள்ளி விட முடிந்தவற்றை தள்ளி விடுங்கள்.

  1. மன்னியுங்கள் !

மன்னிப்பு மன அழுத்தமற்றவர்களின் தாரக மந்திரம். மன்னிக்கும் மனம் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் வருவதில்லை. அப்படியே வந்தாலும் அது அவர்களுக்குள் தங்குவதில்லை.

கணவன், பிள்ளைகள், தோழிகள், அலுவலகம், உறவினர்கள் என யார் தப்பு செய்திருந்தாலும் மன்னிக்கப் பழகுங்கள். அதை மனமார செய்யப் பழகுங்கள். மிகவும் கஷ்டமாய் தோன்றும் விஷயம் இது. ஆனால் பழகி விட்டால் ஈகோ இல்லாத இனிய மனம் உங்களுக்குச் சொந்தமாகும்.

  1. ஒழுங்கு நல்லது.

எல்லாவற்றிலும் அரக்கப் பரக்க ஓடி அரையும் குறையுமாய் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் சர்வ நிச்சயம். எட்டு மணி பஸ்ஸுக்கு 7.59க்கு ஓடுபவர்கள் ரிலாக்ஸாக இருக்க முடியாது. பல விஷயங்கள் இவர்களிடம் ஒழுங்கில்லாமல் இருக்கும்.

உதாரணமாக சாவியை எங்கே வெச்சேன் என 2 நிமிடம், செருப்பு எங்கே என 2 நிமிடம், புக்ஸ் எங்கே என இரண்டு நிமிடம் என எல்லாவற்றுக்கும் டென்ஷனாகி மன அழுத்தத்தை உருவாக்கிக் கொள்வார்கள். ஓடிப் போகும்போ பஸ் கிடைக்காது. அப்புறம் எல்லாத்துக்கும் மாமியார் தான் காரணம்ன்னு முணு முணுப்பில பி.பி இன்னும் எகிறும் !

கொஞ்சம் ஒழுங்கு பழகினால் இருக்கும் நேரத்தை சரியாய்ப் பயன்படுத்த முடியும், நேர மேலாண்மை மன அழுத்தமற்ற வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும்.

  1. தூக்கம் முக்கியம்.

விடியற்காலைல எழுந்து ஓடியாடி வேலை செய்பவர்கள் பெண்கள். இரவில் நல்ல ஒரு எட்டு மணிநேர தூக்கம் இல்லாவிட்டால் எல்லாம் போச்சு ! நல்ல ஆழமான தூக்கம் மனதை அடுத்த நாளைக்காய் தயாராக்கும்.

உடலுக்கும், மனதுக்கும், மூளைக்கும் ஓய்வு ரொம்ப அவசியம். சரியாகத் தூங்காவிட்டால் உடல் சோர்வுடன் மனமும் சோர்வடையும். மன அழுத்தம் ஓடி வந்து உட்காரும். சூடாய் ஒரு கப் பால் இரவில் குடிப்பது, டிவி நேரத்தைக் குறைப்பது, மனதை இயல்பாய் வைத்திருப்பது இவையெல்லாம் பெரியவர்கள் சொல்லும் அட்வைஸ்..

  1. பெண் என்பது பெருமை !

“பெண்ணாய்ப் பிறந்து விட்டோமே” எனும் சுய பச்சாதாபம் பலருக்கும் மன அழுத்தத்தைக் கொண்டு வருவதாக ஒரு ஆய்வு சொல்கிறது. பெண் என்பது பெருமைப்பட வேண்டிய சமாச்சாரம். ஒரு மனிதனிடமிருந்து உயிரை வெளியே எடுத்தால் அவன் பிணமாவான். ஒரு பெண்ணிடமிருந்து உயிரை எடுத்தால் அவள் தாயாகிறாள் !  பெண் மட்டுமே அந்தப் பெருமைக்குரியவள் !

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல் மாதவம் செய்திடல் வேண்டுமம்மா.. என்றே உளமார நினையுங்கள் அதுவே உண்மை. தேவையற்ற மன அழுத்தங்களை நீங்களாக உருவாக்கிக் கொள்ளவேண்டாம் !

  1. எதிர்பார்ப்புகள் குறையட்டும்

இன்றைக்கு உலகில் இருக்கின்ற நோய்களில் 75 முதல் 90 சதவீதம் நோய்களுக்குக் காரணம் மன அழுத்தம் என மிரட்டுகிறது ஆராய்சி ஒன்று ! இந்த மன அழுத்தத்தைக் குறைக்க ஒரு எளிய வழி எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்வது தான்.

அடுத்தவர்களோடு நம்மை ஒப்பீடு செய்யாமல் இருந்தாலே பாதி எதிர்பார்ப்புகள் குறைந்து போகும். டிவி சொல்வதைக் கேட்காமல் பெற்றோர் சொல்வதைக் கேட்டால் தேவையற்ற எதிர்பார்ப்புகள் ஓடியே போய்விடும். “எது இல்லாமல் ஒரு மனிதனால் வாழ முடியுமோ, அது இல்லாமல் வாழ்வதே நல்ல வாழ்க்கை” எனும் தலைவர் மொழிகள் மனதில் இருப்பது நல்லது !

  1. வித்தியாசமான காரணங்கள்.

பொதுவான மன அழுத்தங்களுக்கு பல காரணங்கள் உண்டு. ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், ஓவர் வேலை, கடன்,தேர்வு, உறவு, நட்பு இப்படி இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால் இது மட்டுமல்ல, சில வித்தியாசமான காரணங்கள் கூட மன அழுத்தம் தரலாம்.

உதாரணமாக, சிலருக்கு சத்தம் அலர்ஜியாக இருக்கும். அதிக சத்தம் கேட்டால் டென்ஷனும் மன அழுத்தமும் வந்து சேர்ந்து விடும். சிலருக்கு வெளிச்சம் மன அழுத்தத்தைத் தருமாம். சிலருக்கு சில வாசனைப் பொருட்கள் மன அழுத்தம் தருகின்றனவாம். மன அழுத்தத்துக்கு என்ன காரணம் என்பதை அறிந்து அதை விலக்குங்கள் !

  1. தவறான பழக்கங்கள்.

பெரிய நிறுவனகளிள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காண முடிகிறது தம்மடிக்கும் பெண்களை ! மேலை நாடுகளில் சர்வ சாதாரணமான இந்தக் காட்சி தமிழகத்திலும் இப்போது காண முடிவது ஒரு அதிர்ச்சி ! நல்ல விஷயங்களில் முன்னேற்றம் இருப்பதே உண்மையான பெண் முன்னேற்றம்.

நிகோடின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கின்றன பல ஆய்வு முடிவுகள். அப்படியே போதைப் பழக்கம், தண்ணியடிப்பது போன்ற விஷயங்களெல்லாம் “திரில்” என பழக நினைத்தால் மன அழுத்தமும் வந்து தொற்றிக் கொள்ளும் !

  1. நல்ல விஷயங்களில் மன அழுத்தம்

என்ன கொடுமை சரவணன் இது ? நல்ல விஷயங்களில் கூடவா மன அழுத்தம் வரும் ? என நீங்கள் புலம்புவது கேட்கிறது ! வரும் என்பது தான் பதில் !

குறிப்பாக திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். நல்ல விஷயம் தானே ? பலரும் இந்தக் காலகட்டத்தில் மன அழுத்தமாய் இருப்பார்களாம். ஒரு பதவி உயர்வு கிடைக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அப்போதும் மன அழுத்தம் சிலரை வாட்டுமாம்.

இத்தகைய நேரங்களில் தான் பலருக்கு ஆன்மீகம் கைகொடுக்கிறது. அல்லது பெற்றோர், நல்ல நண்பர்கள், வழிகாட்டிகள், பெரியவர்கள் என நம்பிக்கையானவர்களோடான உரையாடல் கை கொடுக்கும் !

  1. தகராறில்லாத தாம்பத்யம்.

கட்டில் வாழ்க்கை ஆரோக்கியமாக இருந்தால் வீட்டில் வாழ்க்கை அழுத்தமற்றதாக இருக்கும். தாம்பத்யம் தகராறாய் இருந்தாலோ வீட்டில் சமநிலை தடுமாறும். இன்றைய வாழ்க்கை முறை அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய சூழலை உருவாக்குகிறது. ஆனால் அதற்கு விலையாக தாம்பத்யத்தைக் கொடுத்தால் தம்பதியரை மன அழுத்தம் பிடிக்கும்.

கணவன் மனைவி கட்டில் உறவு ஒரு ஸ்ட்ரெஸ் ரிலீவர் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே கல்யாணம் ஆகி ரொம்ப நாள் ஆச்சு, வேலை இருக்கு, குழந்தை பொறந்துடுச்சு. அது இது என காரணங்கள் சொல்லாமல் தாம்பத்ய வாழ்க்கையைக் கட்டி எழுப்புங்கள்.

  1. தாய்மையா ? கவனம்.

“புள்ளதாச்சி கிட்டே போயாடா இதையெல்லாம் சொல்லுவே.. போக்கத்த பயலே…” என பல்லில்லாத கிழவிகள் பேசுவதை கிராமங்களில் அடிக்கடிக் கேட்கலாம். தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் நல்ல இனிமையான விஷயங்களையே கேட்கவேண்டும் என்பார்கள். காரணம் அவர்களுக்கு மன அழுத்தம் வரக் கூடாது என்பது தான்.

மாயோ கிளினிக்ஸ் என்பவர் அமெரிக்காவிலுள்ள ஒரு குழந்தைகள் நல மருத்துவர். “தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் மன அழுத்தமடைந்தால் அது குழந்தைகளையும் நேரடியாகப் பாதிக்கும்” என எச்சரிக்கிறார் அவர். அதனால் தான் கர்ப்பகாலத்தில் பெண்கள் நல்ல இசை, நல்ல நூல்கள், நல்ல கவனிப்பு என மனதை இதமாக்கும் விஷயங்கள் பெற்றுக் கொள்வது அவசியம்.

  1. பாசிடிவ் மனநிலை.

மன அழுத்தம் இரண்டு விதம். ஒன்று நமக்கு வெளியே நடக்கும் விஷயங்களால் நமக்கு வருவது. பெரும்பாலும் நம்முடைய கன்ட்ரோலில் அது இருப்பதில்லை. இன்னொன்று நம்முடைய உள்ளுக்குள்ளே எழுவது. இது முழுக்க முழுக்க நமது கட்டுப்பாட்டில் உண்டு. மனம் நேர் சிந்தனைகளினால் வலுவாக இருந்தால் வெளிப்புற செயல்கள் கூட நம்மை அதிகம் பாதிக்காது !

உதாரணமாக, சாலையில் உள்ள டிராபிக் கூட உங்களுக்கு மன அழுத்தம் தரலாம். ஆனால் உங்கள் மனம் ஓத்துக் கொண்டால் மட்டும் ! தாழ்வு மனப்பான்மையில் உழலாமல், பாசிடிவ் மனநிலையுடன் வாழ்க்கையை எதிர்கொள்பவர்கள் இதை எளிதில் வெற்றி கொள்வார்கள்.

மன அழுத்தத்தைக் காரணிகள் 10 சதவீதமும், நமது மனம் 90 சதவீதமும் நிர்ணயிக்கின்றன என்கிறார் சார்லஸ் ஸ்வின்டால் எனும் நிபுணர். எனவே மனதை வலுவாக்குங்கள்.

  1. மூன்று வகை !

மன அழுத்தம் அதனுடைய தன்மை அளவில் மூன்று வகை. அக்யூட் ஸ்ட்ரெஸ் – என்பது திடீரென நிகழும் ஒரு செயல் உங்களுக்குத் தருகிற மன அழுத்தம். இது பெரும்பாலும் தற்காலிகமானது. “இன்னிக்கு வேலை முடிய ரொம்ப லேட் ஆச்சு” டைப் திடீர் டென்ஷன்கள் இந்த வகை. அது நாளை சரியாகும் ! இந்த வகை அழுத்தம் தொடர்ந்து கொண்டே இருந்தால் அது “எபிசாடிக் அக்யூட் ஸ்ட்ரஸ்” ஆக மாறும். “டெய்லி வேலை முடிய லேட் ஆகுது” என்பது போல !

குரோனிக் ஸ்ட்ரெஸ் என்பது கொஞ்சம் டேஞ்சர் வகை. சின்ன வயசிலேயே வறுமை, பட்ட காலிலேயே படும் போல தொடர் தோல்விகள், வேலையே கிடைக்கல போன்ற வகை இது !. டிராமிக் ஸ்ட்ரஸ் – என்பது ஏதோ ஒரு அதிர்ச்சி தந்த மன அழுத்தம்.

எதுவானாலும், மன அழுத்தம் ஆபத்தானது என்பதை உணருங்கள். !

  1. குழந்தைகளும், மன அழுத்தமும்

குழந்தைகள் உங்களை இமிடேட் செய்யும் ! உங்களுடைய வாழ்க்கை முறையையே குழந்தைகளும் பழகும். உங்கள் வீட்டில் அழுத்தமான சூழலா ? குழந்தையையும் அது பாதிக்கும். உங்கள் வீட்டில் சண்டையா ? குழந்தையின் மனதை அது பாதிக்கும். இப்படி குழந்தையின் மன அழுத்தத்தின் முக்கியக் காரணி நீங்களே !

குழந்தைகளை நண்பர்களாகப் பழகுங்கள். “எப்பவும் நீதான் ஃபஸ்டா வரணும்” என்பது போன்ற முட்டாள் தனமான கட்டளைகளை இடாதீர்கள். தோல்வியும் வெற்றியும் சகஜம் எனும் மனநிலையை குழந்தைகளுக்குள் வளர்த்துங்கள். இரண்டையும் கற்று வளரட்டும் பிள்ளைகள்.

  1. நகைச்சுவை உணர்வு நல்லது.

நல்ல நகைச்சுவை உணர்வு உடையவர்களுக்கு மன அழுத்தம் எளிதில் வருவதில்லை. அவர்கள் வாழ்க்கையை ரொம்பவே இயல்பாக எடுத்துக் கொள்வார்கள். ரொம்ப மூடி டைப் ஆபத்தானது.

சிலர் சொல்வார்கள், “என் பையன் ரொம்ப அமைதி, யார் கூடவும் பேச மாட்டான், தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருப்பான். சமத்து ! ” என. அது ஆபத்து ! நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர் என கலகலப்பாக இருக்கும் பிள்ளைகளுக்கு மன அழுத்தம் வராது. கவனியுங்கள் !

நல்ல காமெடி படம் போட்டாச்சும் கொஞ்ச நேரம் சிரிங்க. மன அழுத்தம் ஓடியே போய்விடும் என்கிறார் மனநல நிபுணர் லீ பெர்க்.

  1. வெயிட்டிங் டைம் நல்லது !

எங்கேயாச்சும் போனா “வெயிட்டிங் டைம்” பலருக்கும் எரிச்சல் தரும் விஷயம். அரை மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தால் அவர்கள் டென்ஷனாகி மன அழுத்தத்தை கூப்பிடுவார்கள்.

மேலை நாடுகளில் மக்கள் அலட்டிக் கொள்வதில்லை. சட்டென ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்து விடுவார்கள். நீங்களும் அதையே செய்யலாமே ? ஒரு புக் படிக்கலாம், அன்றைய தினத்தைப் பற்றி சிந்திக்கலாம், மூச்சுப் பயிற்சி செய்யலாம், ஆன்மீக வாதிகள் செபம் செய்யலாம் எவ்வளவோ செய்யலாமே ! “கறை நல்லது” மாதிரி, “வெயிட்டிங் டைம் நல்லது” என சொல்லிப் பழகலாமே !

  1. நல்லதையே சிந்தியுங்கள்

சிலருக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எப்போதாவது நடந்த ஒரு தப்பைப் பற்றியோ தோல்வியைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். எல்லாவற்றையும் அதிலிருந்தே தொடங்குவார்கள். அதற்கு அப்புறம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடந்திருக்கும் அதையெல்லாம் விட்டு விடுவார்கள்.

அந்த மனநிலை உங்களுக்கு இருந்தால் முதலில் அதைத் தூக்கிப் பரணில் போடுங்கள். “நம்மால் மாற்ற முடியாதவைகளைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது” என்பது மகிழ்ச்சியின் பாலபாடம். அதை மனதில் கொள்ளுங்கள்.

  1. பிறரை நேசியுங்கள்.

பிறரை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் ஏதேனும் ஒரு செயலை தினமும் செய்ய முயலுங்கள். அது உங்களை உற்சாகமாக்கும். பிறர் நலப் பணிகள் செய்பவர்களுக்கு மன அழுத்தம் எளிதில் வருவதில்லை. உதவி தேவைப்படுபவர்களுக்கு மனமார உதவி செய்து பாருங்கள். மனம் ரொம்ப பிரஷாகும்.

அதே போல உங்களுக்குப் பிடித்தமான செயல் ஒன்றையேனும் தினமும் செய்யுங்கள். எழுதுவது ஒரு நல்ல பொழுது போக்கு. மன அழுத்தத்தை அகற்றும் ஒரு நல்ல வழி அது. அதையும் நீங்கள் செய்யலாம்.

  1. வார இறுதிகள், வரம்

வார இறுதிகளை குடும்பத்தினரோடு முழுக்க முழுக்க செலவிடுங்கள். வெளியே போய் சாப்பிடுவது, கடற்கரையில் போய் விளையாடுவது என நேரத்தைச் செலவிடுங்கள். வார இறுதிகளில் அலுவலக வேலைகளை விட்டுவிடுங்கள். வேலைகள் உங்களுக்காகக் காத்திருக்கும் என்பதே யதார்த்தம்.

அலுவல் நாட்களின் அழுத்தங்களெல்லாம் வார இறுதிகளில் வடிந்து போனால் அடுத்த வாரம் வேலை செய்ய உற்சாகம் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். !



Viewing all articles
Browse latest Browse all 490

Trending Articles