கடந்த மூன்று வாரங்களாக பிளாக் செயின் என்றால் என்ன என்பதையும் அதன் பயன்களையும் மேலோட்டமாகப் பார்த்தோம். இந்த வாரம் சற்றே உள்நுழைந்து அது எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
பிளாக் செயின் தொழில்நுட்பம் எப்படி இயங்குகிறது என்பதை எளிமையாகப் புரிந்து கொள்ள ஒரு அடிப்படைக் கேள்வியை எழுப்புவோம். பிளாக் செயின் எனும் வார்த்தைக்கு என்ன பொருள் ? பிளாக் என்றால் ஒரு ‘தகவல்கள் அடங்கிய ஒரு பாக்கெட்’என வைத்துக் கொள்ளலாம். செயின் என்றால் சங்கிலி. பிளாக் செயின் என்றால் தகவல்கள் அடங்கிய பாக்கெட்களை இணைக்கின்ற சங்கிலி என்று பொருள்.
பிளாக் செயினில் உள்ள தகவல்கள் பிளாக் பிளாக்காக சங்கிலிகளால் இணைத்துக் கட்டப்பட்டது போல அமைந்திருக்கும். இந்த சங்கிலி உடைபடாமல் பாதுகாக்கப்படும்.
இந்த ஒரு ‘பிளாக்’ ஐ எடுத்துக் கொள்வோம். அதில் என்ன இருக்கும் ? மூன்று பகுதிகள் இருக்கும். ஒன்று, முந்தைய பிளாக்கின் விலாசம் அல்லது ஹேஷ் டேக் இருக்கும். இரண்டு, தொடர்ந்து வருகின்ற பிளாக்கின் விலாசம் அதாவது ஹேஷ் டேக் இருக்கும். மூன்று, அந்த பிளாக்கில் இருக்க வேண்டிய கணக்கு வழக்கு போன்ற ஏதோ தகவல்கள் இருக்கும்.
இது தான் ஒவ்வொரு பிளாக்கிலும் இருக்கக் கூடிய மூன்று பிரிவுகள். முதல் ஹேஷ் தனக்கு முன்னால் இருக்கும் பிளாக் சரியானது தானா என்பதை ஊர்ஜிதப்படுத்தும். யாராவது திருட்டுத்தனமாய் இன்னொரு பிளாக்கை கொண்டு வைக்க நினைத்தால் இந்த ஹேஷ் காட்டிக் கொடுத்து விடும். அதே போல சரியான பிளாக்குக்குப் பதில் தவறான பிளாக்கை சுட்டிக்காட்டும் பிழையிலிருந்தும் தப்பிக்கும்.
இரண்டாவது ஹேஷ், தனக்குப் பின்னால் இருக்க வேண்டிய பிளாக் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யும். தேவையற்ற ஒரு பிளாக் இடையில் வருவதையும் தடுக்கும். இதன் மூலம் தகவல்களின் பயணம் சரியான திசையில் நடப்பதை கண்காணிக்கும்.
மூன்றாவதாக இருக்கின்ற இடம் தான் தகவல்களுக்கு. இதில் தான் அந்த பரிவர்த்தனை சார்பான அனைத்துத் தகவல்களும் அமைந்திருக்கும்.
இப்படி ஒவ்வொரு பிளாக்கும் தனக்கு முன்னாலும் பின்னாலும் வருகின்ற தகவல்களை சரிபார்ப்பதால் பிளாக் செயின் முழுவதும் இருக்கின்ற தகவல்கள் சரிபார்க்கப்படும்.
தகவல்களை சேமித்து வைக்கின்ற ஃபைல் ஸ்ட்ரக்சர், டேட்டாபேஸ் என்பன போன்று இல்லாமல் இது ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்களின் இணைப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிளாக் செயினை பிஸினஸ் க்கு பயன்படுத்துவதற்கு நான்கு விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். பிஸினஸ் உலகில் இது பிட்காயினைப் போல பொதுவானதாக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட வலைப்பின்னலுக்குள் தான் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
1. பகிரப்படும் லெட்ஜர். லெட்ஜர்கள் பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கி, இன்று வரைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒருபக்கம் வரவு, ஒருபக்கம் செலவு என கோடிட்டு எழுதும் லெட்ஜர்கள் மிகப்பிரபலம். புதியது என்னவென்றால் இவை ஒரே நேரத்தில் எல்லோராலும் பார்க்கவும், வாசிக்கவும் முடியும் என்பது தான். கூடவே சுடச்சுட தகவல்கள் இதில் வந்து சேரும் என்பதும் சிறப்பு அம்சம்.
ஒரே ஒரு லெட்ஜர். உண்மைத் தகவல்கள் அடங்கிய லெட்ஜர். இந்த நெட்வர்க்கில் இருக்கின்ற நபர்கள் இந்த லெட்ஜரைப் பிரதி எடுத்துப் பயன்படுத்தலாம்.
இந்த லெட்ஜரிலுள்ள தகவல்களில் எந்தெந்த தகவல்களை நாம் பிறருக்குக் காண்பிக்க வேண்டுமோ அதற்குரிய அக்ஸஸ் மட்டும் கொடுத்து நமது தகவலை பாதுகாப்பாக்கலாம்.
2 இந்த நெட்வர்க்கிலுள்ள அனைவருக்கும் தனிப்பட்ட அனுமதிகள் வழங்கப்படும். அனுமதிக்கப்படாத உள்ளே வராமல் தடுக்க இது அவசியம். ஒவ்வொருவருக்கும் எப்படிப்பட்ட அனுமதி வழக்கப்படலாம் ? எந்தெந்த பரிவர்த்தனைகளைப் பார்வையிட அனுமதிக்கலாம் ? என்பன போன்ற விஷயங்களை நிர்ணயித்துக் கொள்வது பிஸினஸுக்குப் பயன்படும்.
உதாரணமாக ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்துக்கு சரக்கை அனுப்பினால் அந்த இரண்டு நிறுவனங்களும் அந்த முழு டீட்டெயிலைப் பார்க்க முடியும். ஆனால் ஒரு மூன்றாவது நிறுவனம் அதைப் பார்வையிட்டால் இரண்டு நிறுவனங்களும் ஏதோ ஒரு பரிவர்த்தனை செய்திருக்கின்றன என்பதை மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அவர்கள் பரிவர்த்தனை செய்தது என்ன என்பதைக் கண்டு பிடிக்க முடியாது.
3 வலுவான ஒப்பந்தம். ஒரு பரிவர்த்தனையை பரிசோதித்து சான்றளிக்க சில விதிமுறைகள் உண்டு. அந்த சான்றளிப்பவர் அந்த நெட்வர்க்கின் மொத்த மதிப்பில் ஒரு குறிப்பிட்ட அளவை வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் சான்றளிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். யாரும் தப்பாக சான்றளிக்க முடியாத நிலை உருவாகும். சான்றளிப்பது காஸ்ட்லி வேலை என வரும்போது அந்த சிக்கல் தவிர்க்கப்படும்.
அதே போல ஒரு பரிவர்த்தனையை மூன்று நான்கு பேர் சான்றளிக்க வேண்டும் என்பது பரிவர்த்தனையின் உண்மைத் தன்மையை நிலைநாட்டும்.
அதே போல பிளாக்செயினை பயன்படுத்துவது யார் ? அவர்களுக்கு என்னென்ன அனுமதிகள் வழங்கலாம் என்பதையும் நிறுவனங்கள் முடிவு செய்யலாம். அதற்கான வசதிகளை பிளாக் செயின் நுட்பம் தனக்குள்ளே கொண்டிருக்கிறது.
1. பிளாக் செயின் யூசர். இவர்கள் தான் பயன்பாட்டாளர்கள். பிளாக் செயினுக்குள் நுழையவும் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளைப் பார்க்கவும் இவர்களுக்கு அனுமதி உண்டு. பிளாக் செயின் நுட்பத்தை மாற்றியமைக்கவோ, மென்பொருள் மாற்றங்கள் செய்யவோ இவர்களுக்கு அனுமதி இல்லை.
2. ரெகுலேட்டர்ஸ். இவர்களுக்கு பயன்பாட்டாளர்களை விட கொஞ்சம் அதிகம் அனுமதிகள் உண்டு. ஒரு நெட்வர்க்கை முழுமையாக பார்க்கும் அனுமதி இவர்களுக்கு உண்டு. பொதுவாக இவர்களுக்கு பரிவர்த்தனைகள் செய்யும் அனுமதி இருக்காது. பார்வையிடும் அனுமதி மட்டுமே இருக்கும்.
3. பிளாக் செயின் டெவலப்பர்கள். இவர்கள் தான் மென்பொருளை உருவாக்குபவர்கள். வலைப்பின்னலுக்கு என்னென்ன ஒப்பந்தங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை இவர்கள் உருவாக்கித் தருவார்கள். பிளாக் செயின் மென்பொருளை மெயின்டெயின் செய்வது, வலிமையாக்குவது போன்ற அனைத்து வேலைகளையும் செய்யும் அனுமதி இவர்களுக்கு இருக்கும்.
4. பிளாக் செயின் நெட்வர்க் ஆப்பரேட்டர். ஒவ்வொரு பிளாக் செயினுக்கும் ஒரு நெட்வர்க் ஆப்பரேட்டராவது இருக்க வேண்டியது அவசியம். இவர்களுக்கு புதிதாக பிளாக் செயினை உருவாக்கவும், அதை பராமரிக்கவும் அனுமதி இருக்கும். பிலாக் செயினில் ஒரு புதிய பிஸினஸ் ஆரம்பிக்கிறதெனில் அதற்காக ஒரு புதிய பிளாக் செயின் நெட்வர்க்கை இவர்கள் அமைத்துத் தருவார்கள்.
5. சர்டிபிகேட் வழங்குபவர். அனுமதிக்கப்பட்ட வகையில் ஒரு பிளாக் செயின் இயங்க அதற்கு சான்றிதழ்கள் தேவை. அதற்கான சான்றிதழ்களை வழங்குவதும், அதை நிர்வகிப்பதும் இவர்களுடைய பணியாக இருக்கும்.
இப்படி பிளாக்செயினுக்குள் பணியாற்றும் நபர்களும், பயன்படுத்தும் நபர்களும், வேறு வேறு விதமான நிலைகளில் அமைந்த அனுமதிகளைப் பயன்படுத்துவார்கள்.
( தொடரும் )