தோற்றுவிடுவோமோ எனும் பயத்திலேயே பலர் முயற்சிக்கான முதல் சுவடை எடுத்து வைப்பதில்லை. முதல் சுவடை எடுத்து வைக்காதவன் எப்போதுமே பயணம் செல்ல முடியாது என்பது சர்வதேச விதி.
“வெற்றி பெற விடாமல் நம்மைத் தடுப்பவை தோல்வியடைந்து விடுவோமோ எனும் பயம் தான்” என்கிறார் ஷேக்ஸ்பியர். தோல்வியும் வெற்றியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல. தோல்விகளைச் சந்திக்காத வெற்றியாளர்கள் இருக்கவே முடியாது ! தோல்வி என்பது இயல்பானது என்பதைப் புரிந்து கொண்டாலே வெற்றிக்கான முதல் கதவைத் திறந்து விட்டோம் என்று தான் பொருள்.
அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த ஆபிரகாம் லிங்கன் ஆறுமுறை தோல்வியைச் சந்தித்தபின் அரசியல் வெற்றியை ஆதாயமாக்கிக் கொண்டவர். தோல்வி என்பது வெற்றியை நோக்கிய பாதை என்பதில் அவருக்கு உறுதி இருந்தது. எனவே அவர் வெற்றியாளரானார்.
வெற்றிகளில் சிலவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். தோல்விகளில் பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் தோல்வி குறித்த பயத்தில் முயற்சி செய்யாமல் இருப்பதோ எதையுமே, எப்போதுமே நமக்குத் தருவதில்லை என்பது தான் நிஜம்.
ஜுராசிக் பார்க் என்றால் நமது நினைவுக்கு சட்டென வரும் விஷயங்கள் இரண்டு. ஒன்று டைனோசர். இரண்டாவது இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். அவர் தெற்கு கலிபோர்ணிய திரைப்படக் கல்லூரியான யு.எஸ்.சி யில் சேர இரண்டு முறை விண்ணப்பித்தார். இரண்டு முறையும் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தோல்வியால் தளர்ந்து விடாமல் ஸ்பீல்பெர்க் வளர்ந்தார், உலகெங்கும் அவர் புகழ் பரவியது. எந்தக் கல்லூரி அவரை நிராகரித்ததோ அதே கல்லூரி 1994ம் ஆண்டு அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கவுரவித்தது ! தோல்விகளால் ஒரு வெற்றியாளனைப் புதைக்க முடியாது என்பதை உலகம் மீண்டும் ஒரு முறை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டது.
விழிப்புணர்வு என்பது வேறு பயம் என்பது வேறு. தோல்விகளைக் குறித்த விழிப்புணர்வு இருக்கலாம். ஆனால் அதுவே ஆளை விழுங்கும் பயமாக மாறி விடக் கூடாது என்பதே நாம் கவனிக்க வேண்டிய விஷயம். தோல்வி குறிந்த சிந்தனைகள் எச்சரிக்கை உணர்வைத் தருபவையாக இருக்கும் வரை அவை நமக்கு நன்மை பயக்கும். விபத்து குறித்த பயத்தில் சீட் பெல்ட் போட்டுக் கொள்வது எச்சரிக்கை உணர்வு. விபத்து குறித்த பயத்தில் வாகனத்தையே புறக்கணிப்பது கோழைத்தனமானது. இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சச்சின் டெண்டுல்கர் எல்லா போட்டிகளிலும் செஞ்சுரி அடிக்க வேண்டுமென்பது ரசிகனின் விருப்பம். ஆனால் அப்படி நிகழ்வதில்லை. தோல்விகளைப் புறந்தள்ளி விட்டு, அடுத்தடுத்த போட்டிகளில் வெல்ல வேண்டும் எனும் இலட்சியத்தோடு அவருடைய பயணம் தொடர்கிறது. வெற்றி பெறவேண்டும் எனும் வேட்கை இருந்தால் வெற்றி பெறுவோம். அதே நேரம், தோற்றுவிடுவோமோ எனும் பயம் மட்டுமே போதும் நம்மை வெற்றிபெறாமல் தடுக்க.
வாழ்க்கை பயந்தாங்கொள்ளிகளின் கைகளில் பதக்கங்களைத் திணிப்பதில்லை. தண்ணீர் குறித்த பயம் உங்களுக்கு நீச்சல் கற்றுக் கொள்ள தூண்டுதலாய் இருக்க வேண்டுமே தவிர, தண்ணீரைக் கண்டால் ஓடுகிற மனதைத் தந்து விடக் கூடாது. அதாவது பயம் நமக்கு அதைத் தாண்டிச் செல்கின்ற தகுதியை உருவாக்க தூண்டுதலாய் இருக்க வேண்டும். அதைக் கண்டு விலகி ஓடுகின்ற நிலையைத் தந்து விடக் கூடாது.
தோல்வி குறித்த பயத்திலிருந்து வெளியே வர தன்னம்பிக்கை மிக அவசியம். தன்னம்பிக்கை கடைகளில் விற்பனையாவதில்லை. உங்களுக்கு வேறு யாரும் வந்து தன்னம்பிக்கை எனும் ஆடையைப் போர்த்தி விடவும் முடியாது. தன்னம்பிக்கை என்பதை நாமே தான் உருவாக்கிக் கொள்ளவேண்டும். தனக்கான கூட்டைத் தானே உருவாக்கும் ஒரு சிட்டுக் குருவியைப் போல !
காலையில் எழுந்து குளித்து, ஷேவ் செய்து, புத்துணர்ச்சியுடன் நல்ல ஒரு ஆடையை அணிவதிலேயே ஆரம்பித்து விடுகிறது இந்தத் தன்னம்பிக்கைப் பயணம். “நல்ல உடை உடுத்துபவர்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்” என்கிறார்கள் உளவியலார்கள். அது நம்மை அறியாமலேயே நமது தன்னம்பிக்கையை அதிகரித்து விடுகிறது. நமது கண்களில் தெளிவு உருவாகிறது. கட்சிதமான நேர்த்தியான ஆடை நமது தன்னம்பிக்கையின் வேர்களில் நீரூற்றுகிறது!
உயர்வான சிந்தனைகள் நமது வெற்றிகளை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. நம்மைப் பற்றி நமது மனம் நினைக்கும் பிம்பம் தான் நாம். நம்மைப்பற்றிய உயர்வான சிந்தனைகள் நம்மையும் உயரத்தில் கொண்டு போய் வைக்கும். நம்மைப் பற்றி தாழ்வாக எண்ணினால் நமக்கான இடமும் தாழ்வாகவே இருக்கும்.
கூண்டுக்குள்ளேயே படுத்துக் கிடக்கும் சிங்கம் காலப் போக்கில் தான் ஒரு சிங்கம் என்பதையே மறந்து விடும். அதே போல தான் நம்மை ஒரு சின்னக் கூண்டுக்குள் நாமே அடைத்துக் கொண்டால், நாம் யார் என்பதே நமக்குத் தெரியாமல் போய்விடும். மாறாக நம்மை நாமே தோண்ட ஆரம்பித்தால் நமக்குள்ளிருந்து பெருங்கடல்களே புறப்படக் கூடும்.
தோல்வி பயப்பட வேண்டியதல்ல, இயல்பானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம். நேர் சிந்தனைகள் உங்களுக்குள் வலுவாக இருந்தாலே பயங்களெல்லாம் போய் விடும். பயங்கள் எதிர்மறை சிந்தனையின் பிள்ளைகள். உங்களுக்குள்ளே எப்போதுமே சில குரல்கள் எழுந்து கொண்டே இருக்கும். அந்தக் குரல்களில் எதிர்மறைக் குரல்களைக் கண்டு பிடித்து விலக்க வேண்டியது ரொம்ப அவசியம்.
விலக்குவது இரண்டு வகை. ஒன்று எதிர்மறை சிந்தனைகளை அலட்சியப்படுத்தி விட்டுச் விட்டுச் சென்று விடுவது. இரண்டாவது, ஒவ்வோர் எதிர்மறை சிந்தனைக்கும் பொருத்தமான ஒரு நேர் சிந்தனையைக் கொடுப்பது. பாசிடிவ் திங்கிங் அதிகரிக்க அதிகரிக்க நெகடிவ் சிந்தனைகள் கழன்று போய்விடும். பின்பு எதிர்மறை சிந்தனைகளே இல்லாமல் நமது மனம் அக்மார்க் பாசிடிவ் மனமாகிவிடும்.
ஹாலிவுட் பட பிரியர்கள் அனைவருக்கும் தெரிந்த பெயர்களில் ஒன்று மைக்கேல் ஃபாக்ஸ். மூன்று முறை ஏமி விருது, ஒருமுறை கோல்டன் குளோப் விருது என நடிப்பில் முத்திரை பதித்தவர். அவர் பார்க்கின்சன்ஸ் எனப்படும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தனக்கு நோய் இருக்கும் விஷயத்தையே ஏழு ஆண்டுகாலம் முழுமையாக மறைத்து திரையில் கோலோச்சிக் கொண்டிருந்தார் என்பது வியப்பூட்டுகிறது. பார்கின்ஸ்சன்ஸ் என்பது உயிரையே கொல்லக்கூடிய ஒரு கொடிய வியாதி. நோயின் வீரியம் அதிகமாகி இனிமேல் நடிக்க முடியாது எனும் சூழல் வந்தபோதும் அவர் அசரவில்லை. மூன்று மிக முக்கியமான நூல்களை எழுதிப் பிரபலம் ஆனார். பாசிடிவ் மனதை பார்கின்சன்ஸ் கூட நெருங்கமுடியாது என நிரூபித்தார்.
பாசிடிவ் சிந்தனைகளுக்கு அடுத்தது பாசிடிவ் செயல்பாடு. வெறுமனே நம்மைப் பற்றி உயர்வான சிந்தனைகளை உருவாக்கினால் போதாது. நமது செயல்களிலும் அந்த தன்னம்பிக்கையும் நேர் சிந்தனையும் வெளிப்பட வேண்டும். ஒரு கை குலுக்கலில் கூட நமது தன்னம்பிக்கை வெளிப்பட வேண்டும் என்பதே இதன் பாலபாடம். இவையெல்லாம் நம்முடைய தோல்வி குறித்த பயத்தை விரட்டும் வல்லமை கொண்டவை.
தோல்விகளை விட ரொம்ப அதிகமாய் நம்மை வாட்டுவது தோல்வி குறித்த பயம் தான்.
இது நடந்தால், அது நடந்தால், இப்படி நடக்குமோ, அப்படி நடக்குமோ எனும் பயத்திலேயே நம்முடைய வாழ்வின் பெரும்பாலான செயல்கள் நொண்டியடிக்கின்றன. காரணம் சின்ன வயதிலிருந்தே நாம் கற்றுக் கொண்டிருக்கும் தவறான பாடம் தான். “வெற்றி என்பது நல்லது. தோல்வி என்பது மோசமானது”. அந்த சிந்தனையின் சிறையிலிருந்து வெளியேறுவது அவசியம். எல்லாமே இயல்பானது, சாதாரணமானது, சகஜமானது.
உங்களுடைய வாழ்க்கையைக் கொஞ்சம் தீவிரமாக யோசித்துப் பாருங்கள். உங்களுடைய கடந்தகாலத் தோல்விகள் பலவும் ஏதோ ஒரு வெற்றியில் தான் முடிந்திருக்கும். தோல்வியடைந்த காதல் ஒரு அன்பான மனைவியைத் தந்திருக்கலாம். தோல்வியடைந்த வேலை இன்னொரு நல்ல வேலையைத் தந்திருக்கலாம். தோல்வியடைந்த தேர்வு தேவையான முக்கியமான ஒரு பட்டத்தைப் பெற உதவியிருக்கலாம். தோல்விகளோடு வாழ்க்கை முடிவடைவதில்லை, நாமாக முடித்துக் கொண்டாலொழிய.
பிறரிடம் அன்பாய் இருப்பது, புன்னகைப்பது போன்ற மனித இயல்புகளை விட்டு விடாதீர்கள். உங்கள் மனதை அமைதியாகவும், இளமையாகவும் வைத்திருக்க இவை உதவும். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான மனம் இரண்டுமே இலட்சியப் பயணத்தின் இரண்டு சக்கரங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வெற்றிகளின் கோப்பை நமது வாசலில் வந்து காத்திருப்பதில்லை. வெற்றிக் கோப்பைகளுக்கான ஓட்டத்தில் நம்மை இணைத்துக் கொள்வது மட்டுமே அதைப் பெறுவதற்கான ஒரே வழி. இலட்சியங்களை நோக்கிய ஓட்டத்தில் நமக்குத் தேவை முயற்சி மட்டுமல்ல, தோல்வி கண்டு அஞ்சாத மனமும் தான்.
அமெரிக்க ஜனாதிபது ரூஸ்வெல்ட் பற்றித் தெரிந்திருக்கும். அமெரிக்காவின் முப்பத்து இரண்டாவது ஜனாதிபதி. பன்னிரண்டு ஆண்டு காலம் தொடர்ச்சியாக அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த ஒரே நபர் ரூஸ்வெல்ட் தான். அமெரிக்காவின் மவுண்ட் ரஷ்மூரில் ஒரு பெரிய மலை இவருடைய தலையாக செதுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் டைம் எனப்படும் பத்து பைசா நாணயத்தில் இருப்பதும் இவருடைய தலை தான்.
சரி, இதிலெல்லாம் வியப்பில்லை என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் போலியோவினால் பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழே செயலிழந்த நிலையில் இருந்தார் என்பது தான் நம்மை வியப்பின் உச்சியில் கொண்டு போய் நிறுத்துகிறது. மன உறுதியும், வாழ்க்கையை பாசிடிவ் ஆக அணுகும் மனநிலையும் இருந்தால் வெற்றி என்பது எல்லோருக்கும் பொதுவானதே என்கிறது இவருடைய வாழ்க்கை.
மனதில் பிறக்கட்டும் துணிச்சலின் ஊற்றுகள்
கண்களில் பறக்கட்டும் விடியலின் கீற்றுகள்.