நம்ப முடியவில்லை
இந்தியாவில் இன்னும்
பட்டினிச் சாவுகளின்
பட்டியலா ?
மதத்துக்காய்
இரத்தம் சிந்தியவர்கள்
பாரதத்துக்காய்
கொஞ்சம் கண்ணீர் சிந்தியிருக்கலாம்.
இன்னும்
சுயநலக் கிணறுகளில் தான்
அரசியல் குழுக்கள்
குடும்பம் நடத்துகிறதா ?
வியாபார இடங்களில் மட்டும் தான்
விளக்குகளை எரிக்கிறதா ?
மலைவாழ் மக்களுக்கு
மண்செரிக்கும் வயிறுகளை
ஆண்டவன் வைக்கவில்லை.
ஆள்பவரோ,
நிலவுக்கு செல்லும் வேகத்தில்
நிலத்துக்குச் செல்ல நினைக்கவுமில்லை.
செயற்கை மழை செய்யும்
சிந்தனை வாதிகளே.
மழைக்காய் ஆட
உங்களால் ஓர்
செயற்கை மயிலை செய்ய இயலுமா ?
இருட்டும் இருட்டும்
குருடாகிக் கிடக்கும் காட்டுப் பாதையில்,
சிறுவர்கள் கிழவர்களாய்
உருமாறிக் கிடக்கும் கிராமங்களில்,
இனியேனும் ஏதேனும் ஏற்றுமதியாகுமா ?
இல்லை,
வாக்குப் பெட்டிகள் மட்டுமே
மனசாட்சியின்றி
முகம் காட்டுமா ?
இந்த வேட்டிக் கரைகளுக்காய்
வேதனைப்படும்
அரை வேக்காடு அரசியலில்
வறுமைக் கறைகள்
கழுவப்படாமலேயே உலர்த்தப்படுமா ?
பாரத்துக்குத் தேவை
இன்னொரு
பிச்சைப்பாத்திரமல்ல.
சில அட்சய இதயங்கள்.
