வாருங்கள்.
பிரியத்துக்குரிய
பேச்சுவார்த்தைப் பிரதிநிதிகளே
வாருங்கள்.
போர்க்களங்களை இந்த
விவாதக் களங்கள்
அழித்துவிடுமென்றால்,
எல்லைக்கோடுகளை
அவசரக் கூட்டங்கள்
அவிழ்த்துவிடுமென்றால்,
போராட்டங்களை இந்த
பேச்சுவார்த்தைகள்
பிரிக்குமென்றால்
ஆயுதங்களை அறுத்தெறிந்துவிட்டு
வாருங்கள்.
முடியவில்லை எங்களால்.
போர்க்களத்துக்கு வீரர்களை அனுப்பி
புள்ளி விவரங்களை மட்டும்
பொறுக்கி எடுக்க
இனியும் முடியவில்லை.
ஒவ்வொரு எல்லையிலும்
சத்தமின்றி சரிந்து கொண்டிருக்கும்
ஜீவன்களுக்கு
ஆயுதங்கள் செரிக்கவில்லை
இப்போதெல்லாம்.
எதற்கெடுத்தாலும் வெட்டரிவாள் தூக்கி
பீரங்கிகளுக்குள் பிடிவாதம் திணித்து
நானா நீயா போட்டியில்
இருவருமே தோற்றுப்போக
இன்னும் ஏன் தொடர்ப்போராட்டம் ?
புன்னகை
இன்னொரு வெற்றி
அது
உள்ளங்கையில்
ஆயுள் ரேகையை நீளமாக்கும்
உள்ளத்துக்குள்
நிம்மதியின் அருவியை ஆழமாக்கும்.
பதுங்குகுழிகளுக்குள் படுத்து
சவப்பெட்டி தயாரிப்பில் மூழ்கி
மலர்வளையங்களுக்காய் தோட்டம் செய்து
எத்தனை நாள் தான்
மகிழ்ச்சிக்கு விஷம் அளிப்பது ?
பூமி அழகானது,
வாழ்க்கையின்
ஒவ்வோர் வினாடிகளும் அழகானவை.
அதை இன்னும்
விரோதத்தின் விரல்களுக்கே விற்றுவிடுவதா ?
பேசுங்கள் !
வார்த்தைகளின் பரிமாற்றத்தில்
ஆறறிவின் பரிமாணத்தை அறியுங்கள்.
பேசும்போது,
தீர்ப்புக்களோடு பேசாதீர்கள்
தீர்வுகளுக்காய் பேசுங்கள்
