வாழ்க்கை என்னும்
பேருந்து
நிறுத்தங்களைப் புறக்கணித்து,
தொலைவில் போய் நிற்கிறது.
துரத்திப் பார்த்து
தோற்றுப் போன மக்கள்,
நெற்றி வியர்வையை
விரல் வளைத்து துடைத்தெறிந்து
மீண்டும்
நிறுத்தங்களுக்கேத் திரும்புகின்றனர்.
0
முத்துக்களின் விளைச்சலுக்காய்
சிப்பிகள்,
பாறை முதுகுகளில்
வாய் திறந்து
காத்திருந்துக் காத்திருந்து,
வறண்டு போன மேகத்தின் தேகம் கண்டு
பாசி தேடி
இடுக்குகள் நோக்கி
இடம் பெயர்கின்றன.
0
கார்மேகம் வந்தால்
அரங்கேற்றம் நடத்தலாம் என,
தோகை துலக்கி
காத்திருந்த ஒற்றை மயில்,
மேகம் தன்
கார்குழலில் வானவில் சொருகி
மெல்லச் சிரித்த மாலைப் பொழுதில்
பார்வையின்றி
படுத்துக் கிடந்தது.
0
கதிருக்காக காத்திருந்த
வயல்களில்,
மாடப் புறாக்களையும்,
மாடுகளையும் துரத்தி
ஓய்வாய்ப் படுத்த போது,
மரணம் வந்து
மேய்ந்து போனது !.
0
ஏதேதோ வடிவத்தில்
யாரார்க்கோ ஏதேதோ
மறுக்கப் படும் போதும்,
இன்னும்
தொடர் தவங்கள்
தொடரத்தான் செய்கின்றன,
அதே
நம்பிக்கையுடன்.
0
