வேடதாரிகளே
உங்கள்
அங்கிகளை எப்போதுதான்
அகற்றப் போகிறீர்களோ ?
பொதுவிடங்களில்
உங்கள் உதடுகளுக்கு
மகாத்மாச் சாயம் பூசுகிறீர்கள்
உள்ளுக்குள்
கசாப்புக் கடை நடத்துகிறீர்கள்.
புண்ணியங்கள்
விற்பனை செய்து
புண்ணிய பூமி வாங்குகிறீர்கள்
அங்கே
மனிதாபிமானத்தைப் புதைக்கிறீர்கள்.
தெருச்சந்திப்புகளில்
தகரத்தட்டுகளுக்குச்
சில சில்லறைகள்,
சில சம்பிரதாயச் சமாதானங்கள்.
உள்ளுக்குள் உங்களுக்கே
பிணவாடை அடிக்கவில்லையா ?
விளம்பரம் செய்து செய்தே
நீங்கள்
புனிதனாகப் பார்க்கிறீர்கள்.
எப்போதேனும்
இடக்கைக்குத் தெரியாமல்
தானம் தந்திருக்கிறீர்களா ?
தோப்புக்கு
விளம்பரம் செய்யாமல்
குருவிகளுக்குக்
கூடு கட்டிக் கொடுத்திருக்கிறீர்களா ?
போதுமே..
எட்டாத உயரத்தில்
சிம்மாசனம் செய்தாகி விட்டது.
புதைந்துபோன
மனிதாபிமானத்தைக்
கொஞ்சம்
தோண்டி எடுக்கத் துவங்குங்கலாமே
