தேசங்கள் தோறும் பாயும்
சமத்துவ நதி
கண்ணீர்
இதயக்காட்டுக்குள்
இடிவிழும்போதும்,
மனசின் மதில் சுவரில்
மண்வெட்டிகள்
மூர்க்கத்தனமாய் மோதும் போதும்,
கண்களில் விழும் மழை
கண்ணீர்.
தோல்விகளும், ஏமாற்றங்களும்
கால்களைக் கட்டிக்கொண்டு
வேர்விட்டுக் கிடக்கும்
வேதனை கணங்களில்,
விழியில் வெடித்தெழும்
உப்பு நதி, கண்ணீர்.
மகிழ்வின்
மின்மினிக்கூட்டங்கள்
சட்டென்றழைக்கும் மாநாட்டில்
நெஞ்சப்பூவில் ஈரம் விழ,
கண்ணில் பொடிக்கும்
சிறு பனித்துளி கண்ணீர்.
எப்போதேனும்
விழிகளுக்குள் விழுந்துவிடும்
சிறு சிறுத் துகள்களை
கால்வாய் வெட்டிக்
கடத்திவிடுவதும்
இதே கண்ணீர் தான்.
சில வேளைகளில்
மனைவியரின் மனுக்களுக்கு
முன்னுரிமை பெற்றுத்தரும்
சிபாரிசுத் தூதுவனாகும்.
சில வேளைகளில்
முதலைக் கண்ணீராய் வந்து
கவனிப்பாரின்றி நிராகரிக்கப்படும்.
களைத்துப் போன
கருவிழி
வெளிக்கொட்டும் வியர்வையும் இதே.
ஆனால்
பெரும்பாலும் இது
இளைத்துப் போன இதயத்தின்
இரட்டை உறவினன் தான்.
கண்ணீர்.
மனசின் வலிகளுக்காய்
கண்கள் தொங்கவிடும்
அடையாள அட்டை.
மலைகளாகும் மகிழ்ச்சிகள்
மண்டியிட்டலறும் போது
கண்கள் செலுத்தும்
காணிக்கை.
பிரிவுகள் நெருங்கும் போதும்,
நெருக்கம்
பிரியும் போதும்,
உறவுகள் சொல்லும்
ஈரத்தின் இறுக்கம் தான்
கண்ணீர்.
நாகரீகம் கருதி சிலநேரம்,
தன்மானம் கருதி சில நேரம்,
தனிமைக் கடலில்
கண்ணீர்.
உப்பளமாய் உறையும்.
உணர்வுகளின்
ஊசிப்பொத்தல்களில்
நிம்மதிக் களிம்பாய்
நிறைவதும் கண்ணீர் தான்.
கண்கள் இருக்கும்
உயிரினங்களின்
உலக மொழிதான்
இந்தக் கண்ணீர்.
துயரங்களின்
கிழிசல்களாய்
இரத்த வாசனையோடு
கசியும் கண்ணீருக்குக் கட்டுப் போடு.
ஒரு கையில்
பனித்துளியாய்
சிறு கண்ணீர்த் துளி சரியும் போது,
மறு கையில் சூரியனோடு வந்து
அதை உறிஞ்சிக் கொள்.
கண்ணீர்
எப்போதுமே அடையாளம் தான்.
அடையாளம் பெரும்பாலும்
அடைக்கலம் ஆவதில்லை.
*
சேவியர் கவிதைகள் காவியங்கள் நூலிலிருந்து , 2003.
