கிளைகள் வெறிச்சோடிக் கிடக்கும்
அந்த
ஆலமர அடியில்
கூண்டுக்குள் இருக்கிறது அந்தக் கிளி.
வரிசையாய் அடுக்கப்பட்டிருக்கும்
அட்டைகளை,
அலகுகளில் கொத்திக் கலைத்தெடுத்து,
பின்
நெல்மணி கொத்தி நகர்ந்து நிற்கும்.
ஒவ்வோர் அட்டையும்
ஒவ்வோர் பதில் சொல்லும்.
எந்த பதில்
எந்தக் கேள்விக்கு என்ன விடையானாலும்,
கிளிக்குக் கிடைப்பதென்னவோ
மீண்டும் அந்த கம்பி வாழ்க்கை தான்.
பறவைகள் வானத்தில் பறக்கும் போது
புரியாமல் பார்த்து நிற்கும்
பாதி இறகு வெட்டப்பட்ட
அந்த பச்சைக் கிளி.
பூரிக்கும் பூக்களோடு பூ முகம் மோதி,
கவிதைக் காற்றோடு கண் விழித்து
வானுக்கும் பூமிக்குமிடையே
வட்டமிடும் வாழ்க்கை
கட்டளைக் கிளிக்கு மறந்தே விட்டது.
அதன் வாழ்க்கை வரைபடம்
அகிலத்தின் அழகிலிருந்து திருடப்பட்டு
அலகு இடைவெளி அளவுக்கு
சுருக்கி இறுக்கிக் கட்டப்பட்டுவிட்டது.
கூண்டுக்கு வெளியே மூன்றடி,
கூண்டுக்குள் மூன்றடி.
ஆறடிக்குள் அடைபடுவது
மனிதனுக்குப் பின் இந்த தனிமைக் கிளிதானோ ?.
சோகத்தின் சக்கரங்களில்
சுற்றிக்கட்டப்பட்டிருக்கும் மக்களுக்கு,
சலுகைச் சமாதானம் விற்று
சில்லறை தேடிக்கொள்ளும்
சின்ன ஓர் வாழ்க்கை ஜோசியம்.
மனசின் மந்திர அறைகளில்
கவலைகள் முரண்டு பிடித்தாலும்,
கற்றதை ஒப்புவிக்கும் பிள்ளைப் படபடப்பில்
நல்லதைச் சொல்லி
கை நீட்டி நிற்பான் கிளி ஜோசியக்காரன்.
ஏதும் புரியாமல்
அடுத்த கதவு திறப்புக்காக
கம்பி கடித்துக் காத்திருக்கும்
அந்த அழகுக் கிளி.
