பாராட்டுக்கள்
படுக்கைகளல்ல,
அது
பந்தையக் குதிரையைப்
பயணிக்கச் சொல்லும்
துப்பாக்கிச் சத்தம்.
சேவல்ச் சத்தம்
இரவைக் கழுவியதன்
விழிப்பு மணியோசை.
இன்னொரு தூக்கத்தின்
முன்னுரைத் தாலாட்டல்ல.
பயணங்கள்
பாதைகளையும்,
உன் பாதங்களையும் சார்ந்தது,
அது
மைல் கற்களின் முகம் சார்ந்ததல்ல.
பாராட்டுக்களில்
முகம் கழுவிக்கொள்.
ஆனால்
பாராட்டுக்களின் பள்ளத்தில்
உனக்கு நீயே
கல்லறை கட்ட வேண்டாம்.
பூக்கள் கொடுத்துப்
பழக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
முட்கள் சூட்டியே
பழக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
நீயோ
செடிகளை மட்டுமே சார்ந்திரு.
இலையுதிர்க் காலங்களெல்லாம்
கிளைகளோடு தான்,
அவை
அடி மரத்துக்குக்
கோடரி வைப்பதில்லை.
பிம்பங்களும்,
நிழல்களும்
உன்னைச் சார்ந்தவையே.
உன் தராசுத்தட்டு
அன்னிய மதிப்பீடுகள் முன்
மண்டியிட வேண்டாம்.
சிட்டுக்களை
சிங்கங்களென்பதும்,
ஆம்பல் செடிகளை
அரளிச்செடிகள் என்பதும்
தற்காலிகத் திரைகள் தான்.
ஆட்டம் துவங்கினால் அவிழ்ந்துவிடும்.
பாராட்டுக்களோடு
கைகுலுக்கு.
அடுத்த பாராட்டுக்காய்
உன்னை புதுப்பித்துக் கொள்.
சாய்வு நாற்காலியில் விழுந்து
ஓய்வு ஊதியம் தேடாதே.
உன் முகத்துக்கு முன் நீளும்
வெள்ளைப் பூக்களையும்,
முதுகுக்கும் பின் பாயும்
விகாரக் கற்களையும்
புன்னகையோடு சேகரி.
நீ விரும்பினாலொழிய
உன் நிழல் உடைந்து போகாது.
அறிக்கைச் சுவரொட்டிகளுக்கு
சிறு புன்னகையை மட்டும்
கையொப்பமாய் இட்டுவிட்டு
உன்
பயணம் தொடரட்டும்.
ஆழ்கடலில்
அலைகள் இருப்பதில்லை.
