முத்தம் சிந்தும்
மழலையின் கன்னம்
இரண்டாம் முறையெனில்
சுடுமா என்ன ?
இரண்டாம் முறை
நுகரும் போது
மல்லிப் பூவில்
வாசம் வசிக்காதா என்ன ?
மெல்லத் தீண்டிச்
செல்லமாய் கிள்ளும்
காதலி உதடுகள்
இன்னொரு முறை
உரசிக் கொண்டால்
உறுத்துமா என்ன ?
இந்த முறையும்
நயாகரா
தண்ரை சரித்து
வியப்பை விரித்து வைத்திருந்தது.
அந்த
பெரிய தண்ர் கொடி
இன்னும் தூய்மையாய்
பூ சிந்திப்
பறந்து கொண்டிருக்கிறது.
முதலில் கண்ட
தண்ர் வேறு,
இந்த முறை
என் முகத்தில் தெறித்த
முத்துக்கள் வேறு.
அந்த குளிர்க்குத்தூசிகளில்
என்
சூடு ஓடுகள் எல்லாம்
உடைந்து தெறித்தன.
முகத்தில் ஆசையாய்
முத்தமிடும் சாரலும்,
கால்களில் குளிர் மின்சாரம்
பற்ற வைக்கும் ஈரமும்,
நயாகராவின்
குளிர் கால முகத்தை
ஆழமாய் எழுதிச் சென்றது.
தினமும் ஓடினாலும்
ஓய்வெடுக்க
மறுக்கும் கால்கள்,
நயாகராவிற்கு.
பாறைகளை முழுதாய்
போர்த்தி விடும்
குளிர் போர்வை தேகம்
நயாகராவிற்கு,
அத்தனைப் பறவைச்
சிறகுகளுக்கும்,
சுற்றும் காற்றின்
இறகுகளுக்கும்,
ஈரம் தேய்க்கும் இதயம்
நயாகராவிற்கு.
ஓர் முறை
நயாகரா செல்லுங்கள்.
எப்போதோ சந்தித்த
உங்கள்
பால்யகால பரிச்சய முகம்
மோவாய் தேய்த்து
உங்களை நோக்கி
முன்னேறக் கூடும்.
அத்தனை இந்திய முகம் அங்கே.
ஓர் முறையேனும்
நயாகரா செல்லுங்கள்.
ஜென்ம சாபல்யத்தின்
சன்னல்,
அந்த சிறந்த வெளியில்
திறந்து கிடக்கிறது.
0
