அடுக்கடுக்காய்
என்னை
ஆச்சரியம் பிய்த்துத் தின்னும்
சிலவேளைகளில்.
விதைக்காமல் பறவைகள்
அறுவடை செய்வதுண்டு.
சித்தாள் வேலை கற்காமல்
சில
சின்னத் தாஜ்மகால்கள் செய்வதுண்டு.
அலகிடுக்கில்
அள்ளிச் செல்லும்
சுள்ளிகள் எப்படி
கூடுகளாகும் என்று
விழிகள் வலிக்க ஆராய்ந்ததுண்டு.
குறுக்கும் நெடுக்குமாய்
நெய்து முடிக்கும்
அணில் கூடுகளில்
நெசவுத்துல்லியம் தெரியும்.
தலைகீழாய் தொங்கும்
தூக்கணாங் குருவிக் கூட்டில்
ஓர்
பதுங்கு குழியின்
பக்குவம் புலப்படும்.
பனை மரத்தின்
பாளை இடுக்குகளில்
காகத்தின் கட்டிடம் காணும்போது,
மனைமர உயரத்துக்கு
மனக் கிளர்ச்சி கிளை விடும்.
ஓர்
சிற்பியின் உழைப்பு,
மரங்கொத்தியின்
அலகு உளிகளில்
ஒளிந்து கிடப்பதுண்டு.
மாமர நிழலில்
பழம் தின்றுத் திரிந்த
பால்ய காலத்தில்
பச்சிலைக் கனவுகளாய்
உற்சாகம் தந்தவை அவை.
மூச்சு மோதினாலே
உடைந்துவிடும் முட்டைகளை
உச்சாணிக் கொம்பில்
உரசாமல் போடும் பறவைகள் !.
முட்டை உடைக்கும்
குஞ்சுக் கிளிகளுக்கு
குருகுலமாகும் இந்தக் கூடுகள்.
சின்னக் கிளிகள்,
முட்டைக் காலம் முடிந்து
சிறகு பலப்படுத்தி
வானத்தில் பாதைபோட்டதும்,
கூட்டைக் கலைத்துவிட்டு
காணாமல் போய்விடும்.
மனிதன்
சிறகு முளைத்தபின்
பூமியைக் கலைத்து விட்டு
வீட்டைக் கட்டிக் கொள்கிறான்.
பறவைகளோ
கூட்டைக் கலைத்து விட்டு
பூமியைக் கட்டிக் கொள்கின்றன.
