செல்லமாய்ப் பெய்யும்
மெல்லிய மழை யில்
நனைந்துகொண்டே ஓடத் தோன்றுதா ?
ஓடு.
தனிமையாய் ஓரிடம்
கண்டுவிட்டால்
மூளிப் பாட்டு பாடத் தோன்றுதா
பாடு,
அருமையான நகைச்சுவையை
எதிரியே சொன்னாலும்
சிந்திக்காதே
சிரித்து வை.
கொஞ்ச நேரம்
கடமை ஆடை களைந்து
உள்ளுக்குள்
நிர்வாணியாகத் தோன்றுதா
நில்.
இலைகளின் தலை வருடி
பூக்களின் விரல் திருடி
செடிகளின்
மடி தடவ மனம் சொல்லுதா
செய்.
நதியில் குதி,
அருவியோடு விழு,
புற்களோடு படி,
தும்பிகளின் வால் பிடி,
கவலைப் படாதே,
தோன்றுவதைச் செய்.
இயற்கையோடு கலந்து
இன்னும் சில
கடல்களைத் தோண்டு
இல்லையேல்
ஓர் மேகம் தயாரி.
இந்தக் கணத்தின் இன்பம்
நாளை உன்னைத்
தீண்டாமல் போகலாம்,
நீ
காயம் செய்த இதயங்களோடு
மன்னிப்புக் கேட்கும்
நீளம்
உன் மரண மூச்சுக்கு
இல்லாமலும் போகலாம்.
எனவே,
இதயங்களைக் காயப்படுத்தும்
கவண்-களை மட்டும்
முதல் சுவடு முதல்
கழற்றியே வைத்திரு.
