புல்லின் தான்
பூத்திருக்கிறேன்,
ஆனாலும் நான்
பூ தானே !
சாலையோர சருகொன்று
என்
மேனியை உயிரோடு
சமாதியாக்க இயலும்,
ஓர்
பாதச் சுவடு விழுந்தால்
பாதாளம் வரை
புதையுண்டு போவேன்.
சாலையோரமாய்,
ஓர் நெல்லின் நீளத்தில்
சிறு கல்லின் பாதத்தில் தான்
நான்
வேர் விட்டுக் கிடக்கிறேன்,
ஆனாலும்,
ஓர் முல்லையின் முகமுண்டு,
மேன்மை இல்லையெனிலும்
ஓர் ரோஜாவின்
மென்மையும் உண்டு என்னில்.
பூஜையறைக்கு
புற்களின் பூக்களை யாரும்
பறித்துச் செல்வதில்லை,
கூந்தலில் ஏந்திட
கன்னியர் யாருமே
கருதுவதில்லை.
தொடுக்கும் மாலையிலும்
இட ஒதுக்கீடு
எனக்கில்லை,
மலர் வளையம் கூட
மனம் வைப்பதில்லை !
நானும் பூ தான்,
ஒதுக்கப்பட்டவர் உதிர்க்கும்
சிறு புன்னகையின்
நீளம் தான் எனது.
தட்ப வெட்ப நிலைகளைத்
தாங்கிக் கொள்ளும்
நந்தவனத் தாயோ,
கூரைகளை எட்டிப்பிடிக்கும்
தோரணத் தொட்டிகளோ
என் கால்களுக்கு கீழே இல்லை.
யாருக்கேனும்,
ஆதாயம் தராவிடில்
ஆகாயம் பார்க்க வேண்டும் தான்,
மனிதனானாலும்
பூ வானாலும்.
பழக்கங்களுக்கு
வெளியே வந்து யாரும்
பழகிக் கொள்வதில்லை
எதுவும்.
